This article is from Jun 27, 2019

லக்னோவில் இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்கியதாக வைரலாகும் வீடியோ !

பரவிய செய்தி

லக்னோவில் இஸ்லாமியர்கள் இந்து என்ற காரணத்தால் தனது அண்ணன் முன்னே தங்கை சாந்திபிரியாவை கற்பழித்தனர். பிறகு இருவரின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

ஒரு ஆணும், பெண்ணும் இரத்த காயங்களுடன் அழுதுக் கொண்டே பேசும் வீடியோ காட்சி சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே கோபத்தை தூண்டி வருகிறது. ஏனெனில், லக்னோவில் உள்ள இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற காரணத்தினால் அண்ணனின் முன்பே தங்கையை பாலியல் வன்புணர்வு செய்து, இருவர் மீதும் கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறி பகிர்கின்றனர்.

இப்படியான வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இருந்தாலும், செய்தியானது அதிகளவில் பரவி மத வெறுப்பினை உருவாக்கி வருகிறது. லக்னோவில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்கி உள்ளனர் எனக் கூறும் செய்தி தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும், குறிப்பாக வட நாட்டில் அனைத்து சமூக வலைதளத்திலும் அதிகம் பரவியது.

தமிழக  சமூக வலைதளத்தில் இந்து-முஸ்லீம் இடையே வெறுப்பினை விதைக்கும் விதத்தில் பகிரப்படும் இச்செய்திக்கு பின்னால் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்தோம். அதில், இதுபோன்ற வன்முறை சம்பவம் லக்னோவில் நடந்து உள்ளதா என தேடுகையில் இந்தியா டுடே , ஏ.எல்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டுமே இந்த வீடியோ இடம்பெற்று இருப்பதை காண முடிந்தது.

நிகழ்ந்த சம்பவம் :

இந்துக்கள் இருவரை இஸ்லாமியர்கள் தாக்கியதாகக் கூறி பரவிய இவ்வீடியோவை ட்விட்டரில் ஒருவர் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு டக் செய்து இருந்தார். அதற்கு கீழே லக்னோ காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிலாக அளிக்கப்பட்டு இருக்கிறது.


ஜூன் 24-ம் தேதி லக்னோ காவல்துறை பதிவிட்ட ட்விட்டர் பதிலில், ” இதனுஜா அதிகாரத்திற்கு உட்பட பகுதியில், குழந்தைகள்/இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை இரு தரப்பினருக்கு இடையே வன்முறை உண்டாக காரணமாகி உள்ளது(இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). இதன் தொடர்பாக, வீடியோவில் பார்க்கும் நபர் புகார் அளித்து உள்ளார், IPC 308, 323, 504, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணையானது இணை BKT-யிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது(ஹிந்தி மொழிப்பெயர்ப்பு) “.

லக்னோ காவல்துறை அளித்த பதிலில் இருந்து, வன்முறை சம்பவம் நடந்தது இரு வேறு சமூகத்தினருக்கு இடையே அல்ல. வன்முறையில் ஈடுபட்ட இரு தரப்பினரும் முஸ்லீம் சமூகத்தினர் என தெளிவாக கூறியுள்ளனர்.


ஜூன் 24-ம் தேதி ஒருவர் ட்விட்டரில் சம்பவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு லக்னோ போலீஸ் அளித்த பதிலில், குற்றவாளிகளான உஸ்மான், ஷகீல், யூனிஸ், இஸ்லாம் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

வீடியோவில், பாதிக்கப்பட்டவர்களிடம் மனிதத்தன்மையற்ற முறையில் நடந்து கொண்ட காஸ்டெம்பில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

லக்னோ காவல்துறையின் ஊடகத்தொடர்பாளர் ஆஷிஷ் குமார் ஏ.எல்.டி-க்கு அளித்த பதிலில், ” இதில் ஹிந்து-முஸ்லீம் கோணம் ஏதுமில்லை. இரு தரப்பினரும் முஸ்லீம்களே. பாலியல் வன்புணர்வு முயற்சி நிகழ்ந்ததாக கூறப்படும் செய்தி தவறானது. இது குழந்தைகள், இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் உருவானது “என பதில் அளித்து இருந்தார்.

முடிவு :

வீடியோவில் காண்பிக்கப்படும் இருவரும் முஸ்லீம்களே. அவர்களின் பெயர் ஷாரூக் மற்றும் ஷப்னம் எனக் கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் முஸ்லீம் சமூகத்தினரே என லக்னோ காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதில், மத சண்டை இல்லை, பாலியல் வன்புணர்வு இல்லை.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இடையே உண்டான சண்டை வன்முறைக்கு காரணமாகி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது. ஆக, மத அடிப்படையில் பகிர்ந்து வந்த செய்தி வதந்தியே என இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader