குஜராத்தில் லுலு நிறுவனத்தின் முதலீடு குறித்து மாரிதாஸ் சொன்ன பொய் !

பரவிய செய்தி
குஜராத்தில் லுலு நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்ய யாரும் குஜராத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லவில்லை – மாரிதாஸ்
மதிப்பீடு
விளக்கம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற போது பிரபல லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து மாரிதாஸ் வெளியிட்ட காணொளியில், ” லுலு நிறுவனம் குஜராத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கு முடிவு செய்தார்கள். அதற்கு யாரும் குஜராத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லவில்லை ” எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
குஜராத் மாநிலத்தில் லுலு நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீடு செய்வதாக 2021 டிசம்பர் 11-ம் தேதி வெளியான செய்தியை காண்பித்து மாரிதாஸ் பேசி இருக்கிறார். அதே தேதியில் வெளியான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” குஜராத்தில் முதலீடு செய்வதாக வெளியான அறிவிப்பானது குஜராத் முதல்வர் புபேந்தர படேல் துபாயில் என்ஆர்ஐ தொழிலதிபர்கள் மற்றும் லுலு நிறுவனத்தின் தலைவர் யூசப் அலியை சந்தித்த பிறகு வெளியாகி இருப்பதாக ” குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சந்திப்பின் போதே குஜராத் முதல்வர் முன்னிலையில் குஜராத் அரசின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் ஐஏஎஸ் மற்றும் யூசப் அலி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இந்திய செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், குஜராத்தில் லுலு நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்ய குஜராத்தில் இருந்து யாரும் துபாய் செல்லவில்லை என மாரிதாஸ் கூறியது தவறான தகவல். குஜராத் முதல்வர் துபாய் சென்ற போது லுலு நிறுவனத்தின் தலைவரை சந்தித்து இருக்கிறார், அதன்பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என அறிய முடிகிறது.