எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து இயக்குநர் ரமணா வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகத் தவறானச் செய்தி வெளியிட்ட சன் நியூஸ் !

பரவிய செய்தி
Web Series-ஆக தயாராகிறது இசை அரசியின் வாழ்க்கை வரலாறு! தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த புகழ்பெற்ற பாடகி ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு இணைய தொடராக தயாராகிறது! திருமலை, ஆதி, சுள்ளான் படங்களை இயக்கிய ரமணா இதனை இயக்கவுள்ளார்; பிதாமகன், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார்!
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவர் இசைத்துறையில் செய்த பங்களிப்புக்காக 1954ம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 1975 பத்மவிபூஷன் விருதையும் பெற்றார். பிறகு 1998ம் ஆண்டு இந்திய அரசால் அளிக்கப்படும் உயரிய விருதான பாரத் ரத்னா விருதினையும் பெற்றார்.
இந்நிலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை வெப் சீரியஸாக எடுக்கவுள்ளதாக சன் செய்தி நியூஸ் கார்டினை கடந்த 20ம் தேதி வெளியிட்டுள்ளது.
அப்படத்தை ரமணா இயக்க, பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக அந்த நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றினை வெப் சீரிஸாக இயக்கவுள்ளதாக இயக்குநர் ரமணா சந்திரசேகர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களைக் கொண்டு திருமலை, சுள்ளான், ஆதி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அதே போல், அப்படத்தின் ஒளிப்பதிவாளர் என அழகிய தமிழ்மகன், பிதாமகன் போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த வெப் சீரிஸ் தொடர்பாக அதிகாரப் பூர்வமாக ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா என ரமணா அவர்களது பேஸ்புக் பக்கத்தில் தேடினோம். சன் நியூஸ் கார்டினை குறிப்பிட்டு தகவல் ஒன்றினை மார்ச் 20ம் தேதி பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
அதில், “அன்பு முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்… நான் கர்னாடக இசை பாடகி திருமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையை படமாக்குவதாக வலைத்தளங்களில் செய்தி வந்திருப்பதாய் அறிகிறேன், அதன் தொடர்பாய் என் நலம் விரும்பும் நண்பர்கள் வாழ்த்துகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்… ஆனால் அந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக நான் அறிவிக்கவில்லை என்பதையும், நண்பர்கள் அச்செய்தியைப் பகிரவேண்டாம் என்றும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவிலிருந்து சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு தவறானது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : இளைஞர்களை அரசியலுக்கு வரவேண்டாம் என வெங்கையா நாயுடு பேசியதாக வெளியான தவறான செய்தி !
முன்னதாக இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாகவும், பால்வெளி அண்டத்தில் ஓம் என்ற ஒலி இருப்பதாக நாசா கண்டறிந்து உள்ளது என தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பேசியதாகவும் தவறான நியூஸ் கார்டினை சன் நியூஸ் வெளியிட்டிருந்தது. அதன் உண்மைத் தன்மையினை ‘யூடர்ன்’ செய்தியாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : பால் அண்டத்தில் ஓம் என்ற ஒலி இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது என குடியரசுத் துணைத்தலைவர் பேசினாரா ?
முடிவு :
நம் தேடலில், மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றினை இயக்குநர் ரமணா வெப் சீரிஸாக இயக்க உள்ளதாக சன் நியூஸ் வெளியிட்ட செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.