This article is from May 23, 2020

மடகாஸ்கர் கண்டுபிடித்த மூலிகை மருந்தில் WHO விஷம் கலக்க முயற்சியா ?

பரவிய செய்தி

உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து வெளியேறுகிறது மடகாஸ்கர். மடகாஸ்கர் இந்த கொரோனா தொற்றுக்கு இயற்கை மூலிகைகளின் மூலம் தீர்வு கண்டிருக்கிறது. இந்த மருந்து (Covid -Organics) தோல்வி அடைய அதில் விசத்தை கலக்குமாறு WHO $20 மில்லியன் லஞ்சம் தர முன்வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் (world Health Organization) முகத்திரையை கிழிந்து கொண்டு இருக்கிறது.

மதிப்பீடு

விளக்கம்

சமூக விரோதி எனும் முகநூல் பக்கத்தில், மடகாஸ்கர் நாட்டில் கோவிட்-19க்கு தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்தை தோல்வி அடையச் செய்ய உலக சுகாதார அமைப்பு விஷத்தை கலக்க லஞ்சம் வழங்கியதாக ஓர் தகவல் மீம் ஆக பதிவிடப்பட்டது. மேலும், இரு செய்திகளின் லிங்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த மீம் பதிவை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

Facebook link | archive link  

உண்மை என்ன ?

மடகாஸ்கர் நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா கோவிட்-19க்கு அறிமுகப்படுத்திய மூலிகை மருந்து, அந்நாட்டின் அதிபர் வெளியிட்ட மருந்திற்கு உலக சுகாதார அமைப்பிற்கும் இடையே உள்ள பிரச்சனை தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.

மடகாஸ்கரின் மூலிகை மருந்து : 

கடந்த மாதம் மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும் எனக்கூறி கோவிட் ஆர்கானிக் எனும் ஓர் மூலிகை மருந்தை அறிவித்தார். Malagasy Institute of Applied Research (IMRA) ஆல் உருவாக்கப்பட்ட இம்மூலிகை மருந்து மலேரியா சிகிக்கைக்கு பயன்படுத்தக்கூடிய ஆர்டெமிசியா எனும் தாவரம் மற்றும் பிற உள்நாட்டு மூலிகைகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த மருந்தினை செயல்திறனை சோதனை மூலம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சோதிக்கப்படாத ஒரு மருந்தினை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என உலக சுகாதார மையம் எச்சரித்து இருந்தது. அதேபோல், மூலிகை பானத்தை ” கடுமையாக சோதிக்க வேண்டும் ” என ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் கூறி இருந்தன.

மடகாஸ்கரின் அதிபர் ரஜோலினா கோவிட்-19 ஆர்கானிக் மருந்து என வெளியிட்ட மூலிகை மருந்தை டான்சானியா நாட்டின் அதிபர் மகுஃபுலின் தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுதலுக்கு இணங்க அந்த மருந்தை ரஜோலினா அனுப்பியுள்ளார். மகுஃபுலின் கொரோனா பாதித்த தன்னுடைய குழந்தைக்கு இஞ்சி, எலுமிச்சைச்சாறு மற்றும் நீராவி உள்ளிழுத்தல் போன்றவை மூலம் குணப்படுத்தியதாக மக்களிடையே பேசியவர். கொரோனா வைரசை சாத்தன் என்றும், மக்கள் வழிபாட்டு தலங்களில் பிராத்தனைகளை விடாமல் தொடர வேண்டும் எனக் கூறி இருந்தார்.

விரிவாக படிக்க : டான்சானியா அதிபர் தன் மகனுக்கு இஞ்சி, எலுமிச்சைக் கொடுத்து கொரோனாவை குணப்படுத்தியதாக கூறினாரா ?

ரஜோலினா வெளியிட்ட கோவிட் ஆர்கானிக்ஸ் என அழைக்கப்படும் மருந்தை வாங்க பல ஆப்பிரிக்க நாடுகளும் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தன.

விஷம் கலக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதா ? 

மூலிகை பணம் குறித்த உலக சுகாதார மையத்தின் எதிர்ப்பை மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா கேள்விக்குள்ளாகி இருந்தாலும், கோவிட் ஆர்கானிக் எனும் மூலிகை மருந்தில் விஷம் கலக்க உலக சுகாதார மையம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக அவர் எங்கும் குற்றம்சாட்டவில்லை. அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. எனினும், சில இணையதள செய்திகளை எடுத்து பகிர்வதையும் பார்க்க முடிகிறது. அந்த இணையதளங்களில் எங்கு கூறினார் என்றோ அல்லது அதற்கான ஆதாரமோ இல்லை.

ஆனால், பிரான்ஸ் 24 எனும் சேனலுக்கு ஆண்ட்ரி ரஜோலினா அளித்த நேர்காணலில், வைரலாகுவது போன்று எந்தவொரு குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகத்திலோ அல்லது அதிபரின் சமூக ஊடகத்திலோ அப்படி எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

மாறாக, அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகத்தின் இயக்குனர் லோவா ரானோரமோரோ AFP தளத்திற்கு மே 14-ம் தேதி தெரிவித்த தகவலில், ” மடகாஸ்கரின் ஜனாதிபதி கூறியதாக பரவும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானது, கோவிட்19 ஆர்கானிக்ஸ் மருந்து தொடங்கப்பட்டதில் இருந்து ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா கூறியதாக பல பொய்யான தகவல்கள் பரவி வருகிறது ” எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நமது தேடலில், மடகாஸ்கர் நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிட்-ஆர்கானிக் மருந்தில் விஷம் கலக்க உலக சுகாதார மையம் $20 மில்லியன் டாலர் லஞ்சம் தர முயற்சித்ததாக அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader