This article is from Mar 30, 2018

கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட மது பற்றி பரவிய வதந்தி.

பரவிய செய்தி

கேரளாவில் உணவை திருடினார் என சிலர் ஒன்றுக் கூடி மது என்ற இளைஞனை அடித்தே கொன்றனர். பழங்குடியினர் எனக் கூறும் மதுவின் சிறு வயதில் கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.

மதிப்பீடு

சுருக்கம்

ஃபைசி டென்சன் என்பவரின் புகைப்படத்தை மதுவின் புகைப்படம் என்ற தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளக்கம்

பாலக்காடு அருகே அட்டப்பாடியின் கடுகுமன்னா கிராமத்தை சேர்ந்த மது என்ற இளைஞன் அரிசி மூட்டையை திருடினார் என்று சந்தேகப்பட்டு அடித்தே கொன்ற சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 27 வயதான மது என்ற இளைஞன் பசியின் காரணமாக உணவுப் பொருட்களை திருடியதாக் கூறி, அவரது கைகளை கட்டி வைத்து பலர் கொடூரமாக தாக்கியுள்ளனர். பலரின் கொடூர தாக்குதலால் நிலைகுலைந்த மது போலீசாரின் வாகனத்திலேயே உயிரிழந்தார்.  

இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட மதுவின் கைகள் கட்டப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அனைவருக்கும் கடும் கோபத்தை தூண்டியது. இதைத் தொடர்ந்து இக்கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கொடூரமாக தாக்கப்பட்டு இறந்த மதுவின் சிறுவயது புகைப்படம் எனக் கூறி ஓர் படமானது சமூக வலைத்தளங்களில் பரவி அதிகளவில் ஷேர் செய்யப்பட்டது. அதில், மது எனக் கூறி வட்டமிட்டு காட்டப்பட்டவர் கேக் வெட்டுவது போன்று இடம்பெற்றிருக்கும். அதனுடன் மலையாள மொழியில் , மதுவின் தந்தை இறந்ததால் தான் இந்நிலைக்கு தள்ளப்பட்டான் என்றெல்லாம் கூறி சிறு கதையும் அதனுடன் பரவி வருகிறது. ஆனால், அவை அனைத்தும் தவறாக பரப்பப்படும் வதந்திகளே!!

திருவனந்தபுரத்தை சேர்ந்த  36 வயதான ஃபைசி டென்சன் என்பவரின் இளமைக் கால புகைப்படத்துடன் சில கதைகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டில் கொச்சியில் உள்ள KHRD கல்லூரியில் ஃபைசி டென்சொன் தனது மூன்று வருட ஹோட்டல் மேலாண்மை படிப்பை பயின்று வந்துள்ளார். கல்லூரியின் இறுதி நாள் விழாவின் போது கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த தருணத்தை நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஃபைசி உடைய நண்பர் அபிலாஷ் என்பவர் இப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதை ஃபைசிலும் ஷேர் செய்துள்ளார். ஆனால், சமூக நல ஆர்வலர் ஒருவர் ஃபைசி படத்தை மதுவின் புகைப்படம் எனக் கூறி கருத்து தெரிவித்திருந்தார் என்பதை அவரின் கல்லூரியில் படித்த ஜூனியர் கூறிய பின்பே இது பற்றி அவருக்கு தெரிந்துள்ளது. இதன் பிறகு ஃபைசியின் ஜூனியர் மூலம் அந்த சமூக நல ஆர்வலர்க்கு தகவல் தெரிவித்த பிறகு அப்பதிவு நீக்கப்பட்டது.

சமூக வலைத்தளத்தில் ஃபைசி படங்கள் வலம் வருகிறது என்பதை அறிந்த பின்னர், வலைத்தள பக்கங்களில் பரவி வரும் படங்கள் குறித்து தனது விளக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார் ஃபைசி டென்சன்…

சிலர் ஆடம்பர வாழ்வுக்கு கொள்ளையடித்து சுகபோகமாக வாழும்  இவ்வுலகில் தான் பலர் உணவின்றி பசியால் இறக்கும் நிலை உருவாகிறது. இதில் கூட வதந்தியை பரப்பி ஒரு மனிதனின் இறப்பை இழிவுபடுத்தும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader