This article is from Dec 26, 2020

ம.பியில் விவசாயிகளிடம் நெல் வாங்க மறுத்த நிறுவனம்| விரிவானத் தகவல் !

பரவிய செய்தி

புதிய வேளாண் மசோதாவின் அடிப்படையில் மத்திய பிரதேசத்தை சார்ந்த பிரஜேஷ் பட்டேல் என்னும் விவசாயி பார்ச்சூன்(அதானி) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார், 20 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது, நெல் நன்றாக விளைந்தும் இப்போது அதை தனது குடோனில் வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஏனெனில் நெல்லில் குறைபாடு உள்ளது என்று கூறி நெல்லை வாங்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது,இரண்டு முறை ஆய்வக பரிசோதனை செய்தும் அந்த பரிசோதனை அறிக்கையை கூட அந்த விவசாயிடம் வழங்க மறுத்துவிட்டது அந்நிறுவனம். கார்ப்பரேட்டுடன் ஒப்பந்தம் செய்தால் இதான் நிலை இப்போது புரிகிறதா விவசாயிகள் ஏன் வீதியில் இறங்கி உள்ளார்கள் என்று.

மதிப்பீடு

விளக்கம்

டெல்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகையில், அங்கிருந்து சுமார் 900 கி.மீ தொலைவில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் ஹோசங்கபாத் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பல நெல் விவசாயிகளிடம் இருந்து ஒரு நிறுவனம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகி நெல் வாங்க மறுத்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

” டெல்லி-என்.சி.ஆரை மையமாகக் கொண்ட நிறுவனம், பாகந்தி கிராமத்தில் உள்ள நெல் விவசாயிகளிடம் இருந்து விளைப்பொருட்களை நடைமுறையில் உள்ள சந்தை விலையில் இருந்து கூடுதலாக ரூ.50 செலுத்தி வாங்கிக் கொள்வதாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்து உள்ளது. அறுவடை செய்யப்பட்ட மாதிரிகளில் அபாயகரமான இரசாயன ஹெக்சா இருப்பதாக போலியான காரணத்தைக் கூறி அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, புதிய வேளாண்  சட்டங்களின் கீழ் மாஜிஸ்திரேட் வழக்கை எடுத்துள்ளார் என மத்திய பிரதேச அரசாங்கம் தெரிவித்தது. புதிய ஒப்பந்த வேளாண் சட்டத்தின் கீழ் உள்ளூர் நிர்வாகம் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த பிறகே 12 விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கியது. இது புதிய வேளாண் சட்டங்களின் பலன் என பாஜக தலைவர்கள் மேற்கோள் காட்டி பேசி உள்ளனர். ” என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” ஆனால், 10 நாட்களுக்குப் பிறகு, பிராந்தியத்தைச் சேர்ந்த மற்ற விவசாயிகளிடம் இருந்து நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். பாகந்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புஷ்பராஜ் சிங் என்பவரின் புகாரின் பெயரிலேயே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நெல் விலை உயர்ந்ததால் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது என தெரிவித்து உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் சந்தை விலை குவிண்டாலுக்கு ரூ.2400 முதல் ரூ.2500 வரை இருந்தது, எங்களுடைய விளைப் பொருட்கள் எங்கள் வீட்டு வாசலில் இருந்தே வாங்கப்பட்டது மட்டுமல்லாமல் வாக்குறுதி அளிக்கப்பட்ட போனஸும் வழங்கப்பட்டது. ஆனால், இம்முறை ரூ.2900-த்தை தொட்ட தருணத்தில் நிறுவன அதிகாரிகள் எங்கள் அழைப்புகளை எடுக்கவில்லை. புதிய சட்டங்கள் இருப்பதால் இனி மண்டியின் கட்டுப்பாட்டில் இல்லாததால் இம்முறை நிறுவனத்தால் அதைச் செய்ய முடிந்தது என அவர் குற்றம்ச்சாட்டியதாக ” NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” கடந்த 3 ஆண்டுகளைப் போலவே, எங்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையில் இடைத்தரகர்களாக பணியாற்றிய அதே உள்ளூர் வர்த்தகர்களிடம் இருந்து எங்களுக்கான விதைகள் மற்றும் உரங்களை நாங்கள் பெற்றோம். ஆனால், இந்த ஆண்டுதான் எங்கள் நெல்லின் மாதிரியில் அபாயகரமான இராசயனத்தைக் கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டது ” என கடகாத் பகுதியை சேர்ந்த பிரஜேஷ் படேல் தெரிவித்ததாக இடம்பெற்று உள்ளது. இவரின் பெயரும், புகைப்படமுமே வைரலாகும் பதிவுகளில் இடம்பெற்று உள்ளது.

விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்க மறுத்த ஹோசங்காபாத்தில் உள்ள டெல்லியை மையமாகக் கொண்ட நிறுவனம் ஃபார்ச்சூன் நிறுவனம் என அடையாளம் காணப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், டெல்லியை மையமாகக் கொண்ட ஃபார்ச்சூன் நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நெல் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மாதிரிகளில் ஹெக்சா எனும் ஆபத்தான இரசாயனம் இருப்பதாகக் கூறி நெல்லை வாங்க மறுத்ததும், அதே நிறுவனம் சந்தை விலையை விட ரூ.50 அதிகம் கொடுத்து நெல்லை வாங்கிக் கொள்வதாக மேற்கொண்ட ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்துள்ளது.

விவசாயிகளின் புகார்களின் அடிப்படையில் புதிய வேளாண் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு பிறகே அந்நிறுவனம் 12 விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்தது. அந்நிறுவனத்தின் ஒப்பந்த மீறலால் மத்தியப் பிரதேச விவசாயிகள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader