இனி தமிழர்கள் நிதிப் பங்கீடு, கல்வி உரிமை எனப் போராடக் கூடாது என மதுரை ஆதீனம் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
தமிழுக்கும் தமிழின் தொன்மைக்கும் உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கிவிட்டார். இதுவே தமிழர்களுக்குப் போதுமானது. இனியாவது நிதிப் பங்கீடு, கல்வி உரிமை என எதற்கும் உதவாத விஷயங்களுக்காக போராடுவதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் – மதுரை ஆதீனம்
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் நேற்று (மே 29) புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோலை நிறுவுவதற்காக தமிழ்நாட்டின் 20 சைவ ஆதீனங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி சுதந்திரத்தின்போது ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலை, தமிழ் மந்திரங்கள் ஓதி, பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர், “தமிழுக்கும் தமிழின் தொன்மைக்கும் உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கிவிட்டார். இதுவே தமிழர்களுக்குப் போதுமானது. இனியாவது நிதிப் பங்கீடு, கல்வி உரிமை என எதற்கும் உதவாத விஷயங்களுக்காக போராடுவதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.” என்று கூறியதாக சாணக்கியா சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்தி தொடர்பாக மதுரை ஆதீனம் பேசியுள்ளாரா எனத் தேடியதில், ANI தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் அளித்த பேட்டியின் வீடியோவை மே 28 அன்று வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.
#WATCH | I feel very proud to participate in the inauguration ceremony of the new Parliament building. PM Modi has always stood proudly with the Tamil culture and Tamil people. Modi ji is the first PM who invited Tamil Adheenams and proudly encourages the Tamil culture in the… pic.twitter.com/JYPV3nF5vf
— ANI (@ANI) May 28, 2023
அதில், “14 பிரதமர்கள் இருந்தார்கள், 14 பிரதமர்களும் இங்கு தமிழ் ஒலிக்க செய்யவில்லை. வெள்ளையர்கள் விரட்டப்பட்டார்களே தவிர, அவர்கள் செய்த அந்த நாடாளுமன்ற கட்டிடம் முடக்கப்படவில்லை. அவர்கள் செய்த நாடாளுமன்றத்திலேயே இவர்கள் இருந்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி தேசபக்தி உடையவர் என்பதை இன்றைய தினம் நிரூபித்துவிட்டார்.
மேலும் தமிழ்நாட்டில் தான் மருதுபாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி, பாரதியார், பாரதிதாசன், பூலித்தேவன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். அதன் மூலமாகத் தான் எங்களை வரவழைத்து பெருமை சேர்த்துள்ளார். நரேந்திர மோடிக்கும், தமிழுக்கும் நிறைய தொடர்பு உண்டு. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் வீடு இழந்திருந்த தமிழர்களுக்கு, நரேந்திர மோடி அரசு பதவியேற்று பிறகுதான் வீடு கட்டித் தரப்பட்டது.” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்த செய்தியை சாணக்கியா வெளியிட்டுள்ளதா எனத் தேடியதில், கடந்த மே 28 அன்று மதுரை ஆதீனம் குறித்து மோடியும் தமிழும் என்னும் தலைப்பில் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
மோடியும் தமிழும்…#PMModi #Aadheenam #madurai pic.twitter.com/MkXvBEySMu
— சாணக்யா (@ChanakyaaTv) May 28, 2023
அதில் “14 பிரதமர்கள் இருந்தார்கள், ஆனால் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலிக்க செய்யவில்லை. தேசபக்தி உடையவர் என்பதை பிரதமர் நரேந்திர மோடி இன்று நிரூபித்துவிட்டார். நரேந்திர மோடிக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு உண்டு. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் வீடு இழந்திருந்த தமிழர்களுக்கு, நரேந்திர மோடி அரசு பதவியேற்று பிறகுதான் வீடு கட்டித் தரப்பட்டது – மதுரை ஆதீனம்” என்று குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.
முடிவு :
நம் தேடலில், நிதிப் பங்கீடு, கல்வி உரிமை என எதற்கும் உதவாத விஷயங்களுக்காக போராடுவதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.