மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95% முடிந்ததாக பொய் சொல்லும் பாஜக !

பரவிய செய்தி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துள்ளன – பாஜக தேசிய தலைவர் நட்டா
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த போது மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளதாக தெரிவித்தார் என தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
மதுரையில் பாஜகவின் பல்துறை வல்லுனர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நட்டா பேசுகையில், ” மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டது. கூடுதலாக, தொற்று நோய் பிரிவுக்காக ரூ.164 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இம்மருத்துவமனை 750 படுக்கைகள் மற்றும் ஐசியூ வசதியுடன் கூடிய 25௦ படுக்கைகள் அமைய உள்ளன. மாணவர் சேர்க்கையும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது ” எனப் பேசி இருக்கிறார்.
நட்டாவின் பேச்சையடுத்து, கட்டுமானப் பணிகளே தொடங்கப்படாத மதுரை எய்ம்ஸ் உடைய கட்டுமானப் பணிகள் 95% எப்படி முடிவடைந்தது என கண்டனங்களும், கடும் விமர்சனங்களும் அரசியல் கட்சியினராலும், சமூக வலைதளவாசிகளாலும் எழுப்பப்பட்டு வருகிறது.
உண்மை நிலவரம் என்ன ?
கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏறத்தாழ 90 சதவீத சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளன.
2022 ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 6 மாதங்களில் தொடங்கும் என தெரிவித்து உள்ளார் என தி இந்து நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
2022 ஏப்ரல் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தயாராக இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என மதுரை எய்ம்ஸ் சிஇஓ தெரிவித்து இருந்தார். ஆகையால், இந்த வருடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பயில தேர்வான மாணவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக நடைபெற்றது.
மேலும் படிக்க : மதுரை எய்ம்ஸ் செங்கல் பற்றி ஹெச்.ராஜா போட்ட ட்வீட்.. உண்மை என்ன ?
பாஜக ஆட்சி
புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் @manickamtagore போனோம்.கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம். pic.twitter.com/dB8GeMWrzf
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 23, 2022
We went to the Thoppur AIIMS Madurai site … we found nothing . #MaduraiAIIMS pic.twitter.com/9CBxHEs6Mt
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 23, 2022
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிவடைந்து விட்டதாக பாஜக தெரிவித்த தகவலால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் ஆகிய இருவரும் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பகுதியில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு 95% கட்டுமானப் பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என பதிவிட்டு உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 95% முடிந்துள்ளன என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக பாஜக கூறும் தகவல் பொய்யானது என அறிய முடிகிறது.