மதுரையில் AIIMS கட்ட JICA-விடம் கடன் பெறத் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக நாராயணன் திருப்பதி சொன்ன பொய்!

பரவிய செய்தி

மதுரையில் AIIMS கட்ட தமிழ்நாடு அரசு ஜப்பான் JICA-விடம் கடன் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால்தான் மருத்துவமனை கட்ட தாமதமாகிறது. – நாராயணன் திருப்பதி (பாஜக)

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாட்டில் உள்ள மதுரையில் எய்ம்ஸ் (AIIMS -India Institute of Medical Sciences) மருத்துவமனை அமைப்பது தொடர்பாக 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு அறிவித்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து 2019, ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்காகப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜகவின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையின் இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

இதன் தொடர்ச்சியாகத் தந்தி டிவியில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி ‘தமிழகத்தில் எடுபடுமா மோடியின் தீவிர தி.மு.க. எதிர்ப்பு?’ என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் கலந்து கொண்ட நாராயணன் திருப்பதி “JICA-வுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது யாரு? தமிழ்நாடு அரசாங்கம் JICAவுடன் அதாவது, Japan International Cooperation Agency ஜப்பான் அரசாங்கத்தின் நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. நீங்கள் (தமிழ்நாடு அரசு) ஏன் ஜப்பானிடம் கேட்கவில்லை. மற்ற மாநிலங்கள் அனைத்தும் மத்திய மாநில அரசு நிதியிலிருந்து இதனைக் (எய்ம்ஸ்) கட்டுகின்றன. 

ஆனால், தமிழ்நாடு அரசு மட்டும் மாநில அரசு நிதியை ஜப்பான் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் மாநில அரசு போடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசு ஜப்பானிடம் இருந்து கடன் வாங்குங்கள் என்று சொல்லவில்லை. மாநில அரசு செலுத்த வேண்டிய நிதியை ஜப்பானிய அரசிடம் கடன் வாங்குகிறது” என்று கூறியுள்ளார். 

நாராயணன் திருப்பதி விவாத நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை அவரது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். 

உண்மை என்ன ?

மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான JICA-வுடனான (Japan International Cooperation Agency) ஒப்பந்தம் குறித்த முக்கிய வார்த்தைகள் கொண்டு இணையத்தில் தேடினோம். மதுரை எய்ம்ஸ் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI) பாண்டியராஜா என்பவரின் கேள்விக்கு 2020, டிசம்பர் மாதம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பதில் அளித்துள்ளது. 

அதை அடிப்படையாகக் கொண்டு ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்ட செய்தியில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான செலவு தொடர்பாக JICA அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேசி வருகின்றனர். மொத்த செலவில் 85 சதவீதம் JICA வழங்க இந்தியா மற்றும் ஜப்பான் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் நடைபெற உள்ளது. இதுவரை (2020, டிசம்பர்) மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தில் ரூ.9.6 கோடி செலவில் எல்லை சுவர் கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023, ஆகஸ்ட் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசுகையில், ”மதுரையில் ரூ.1,977 கோடியிலான எய்ம்ஸ்-க்கு ரூ.1,627 கோடிக்கான கடன் JICA-விடம் இருந்து பெற்று ஒன்றிய அரசு கட்டுகிறது. ஒன்றிய அரசின் செலவில் கட்டப்படுகிறது. ஒன்றிய அரசு இக்கடனைத் தீர்த்து வைக்கும். தமிழ்நாடு அரசுக்கு இது மூலமாக எந்த கடன் உபாதையும் இல்லை. இந்த கடன் ஒன்றிய அரசின் கடன்” எனக் கூறியுள்ளார். அதாவது JICA-விடம் இருந்து ஒன்றிய அரசுதான் கடன் பெறுகிறது என நிதி அமைச்சரே தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 15ம் தேதியும் நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்குச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், ’JICA-விடம் இருந்து Extra Budgetary Resource (EBR) மூலம் நிதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜப்பன் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே 2021, மார்ச் 26ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்த திட்ட மதிப்பான ரூ.1977.8 கோடியில் 82 சதவீதம் JICA கடனாகவும் மீதி இந்திய அரசின் நிதியிலிருந்தும் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PIB தளத்தில் 2023, டிசம்பர் 19ம் தேதி குறிப்பிட்டுள்ள தகவலின்படி மதுரை எய்ம்ஸ்-க்கு என ஒதுக்கப்பட்ட ரூ.1,977.8 கோடியில் இதுவரை ரூ.18.37 கோடி ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. 

மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்காக ஜப்பான் JICA-வுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக ஒன்றிய அரசே பல இடங்களில் தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் அமைக்க மாநில அரசுகள் அதற்கான நிலத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்த வேண்டும். ஆனால், பாஜக தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியோ தமிழ்நாடு அரசுதான் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் அதனால்தான் மருத்துவமனை கட்ட தாமதமாகிறது என்றும் தவறான தகவலைப் பேசியுள்ளார். 

மேலும் படிக்க : நடிகர் வெங்கடேசன் கால் உடைக்கப்பட்ட வழக்கில் கைதானவர் பாஜக இல்லை எனப் பொய் சொன்ன நாராயணன் திருப்பதி !

இதற்கு முன்னர் நாராயணன் திருப்பதி சொன்ன பொய்கள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !

முடிவு : 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காகத் தமிழ்நாடு அரசு ஜப்பான் JICA-வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக நாராயணன் திருப்பதி சொன்ன தகவல் தவறானது. JICA-வுடன் ஒன்றிய அரசுதான் ஒப்பந்தம் செய்துள்ளது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader