பாஜகவினர் பகிரும் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் படம்.. இது எடுக்கப்பட்டது மதுரை கல்லூரி அல்ல, ராமநாதபுரம் !

பரவிய செய்தி
மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் ! செங்கல் திருடன் எங்கே.?
மதிப்பீடு
விளக்கம்
மதுரை தோப்பூரில் வரவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிவடையாத காரணத்தினால் மதுரை எய்ம்ஸ் தொடர்ந்து அரசியல் ரீதியான பேசு பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2021 தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் செங்கலை காண்பித்து மதுரை எய்ம்ஸ் எனப் பேசியது வைரலாகியது. தற்போது 2023 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் உதயநிதி தனது பிரச்சாரத்தில் செங்கலை காண்பித்து பேசி இருந்தார்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்தவர்கள் ” மதுரை எய்ம்ஸ் மாணவர்கள்.. செங்கல் திருடனுக்கு அனுப்பி வைங்க ” எனக் கூறி இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றன. அப்புகைப்படத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு துவங்க விழா என இடம்பெற்று இருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் !
செங்கல் திருடனுக்கு அனுப்பி வைங்க. pic.twitter.com/NMauzsGyKP
— M.Raghava krishna.B,E. (@MRagavakrishna) February 27, 2023
மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் !
செங்கல் திருடன் எங்கே.? pic.twitter.com/wy6Z3DNsBn
— புதிய பாரதம் (@new_bharatham) February 27, 2023
உண்மை என்ன ?
தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. 2026ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடிவடைந்து விடும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
2023 பிப்ரவரி 21ம் தேதி நாட்டில் புதிதாக கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பணிகள் குறித்து எழுப்பப்பட்ட ஆர்டிஐ கேள்விக்கு, ” ரூ1977.8 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள தமிழ்நாட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ12.35 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக ” ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது.
பாஜகவினரால் பரப்பப்படும் புகைப்படம் குறித்து தேடுகையில், 2023 பிப்ரவரி 26ம் தேதி மதுரை எய்ம்ஸ் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில், ” மதுரை எய்ம்ஸ் கல்லூரி 2022-23 கல்வியாண்டு மாணவர்களுக்கான துவக்க விழாவில் ஆந்திரா எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் கலந்து கொண்டதாக ” புகைப்படங்கள் உடன் பதிவாகி உள்ளது.
The first ever Fresher’s Day – INICIO of AIIMS Madurai was organised with great elan and in most befitting manner.
Director & CEO @mangalAiimsAP was the Chief Guest.Students put up a splendid show and showed their multi farious talents.@mansukhmandviya@MoHFW_INDIA@OfficeOf_MM pic.twitter.com/uf0QWzji3a— AIIMS,MADURAI (@madurai_aiims) February 26, 2023
மதுரை எய்ம்ஸ் முகநூலில் பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பில், “ இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கலையரங்கம் ” எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுந்த போது, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மதுரை எய்ம்ஸ் வரவேற்கிறது என்கிற பேனர் மற்றும் மாணவர்கள் அமர்ந்து இருக்கும் இரு புகைப்படங்களை பகிர்ந்தும் விமர்சித்து இருந்தார்.
ஆனால், அது தற்காலிகமாக இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு நடத்தப்படும் வகுப்புகள் என்றும், இன்னும் 2 ஆண்டுகளுக்கு அங்கு தான் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என மதுரை எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்து இருந்தார் என்றும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : மதுரை எய்ம்ஸ் செங்கல் பற்றி ஹெச்.ராஜா போட்ட ட்வீட்.. உண்மை என்ன ?
இதற்கு முன்பாக, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% முடிந்ததாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தவறான தகவலை பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95% முடிந்ததாக பொய் சொல்லும் பாஜக !
முடிவு :
நம் தேடலில், பாஜகவினர் பரப்பி வரும் புகைப்படத்தில் இருப்பது மதுரை எய்ம்ஸ் மாணவர்களே. ஆனால், மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் மதுரையில் எடுக்கப்பட்டது அல்ல, தற்காலிகமாக வகுப்புகள் நடைபெறும் இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்டது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கான நிதி வெறும் 12 கோடி மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.