மதுரையில் கொரோனாவா ?| எண்ணெய் பலகாரம், கோழியால் கொரோனா பரவுகிறதா?

பரவிய செய்தி

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு.கார்த்திக் ஆறுமுகம் வாலிபனுக்கு கொரோனா வைரஸ் உள்ளது என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. எண்ணெய் பலகாரங்களால் கொரோனா வைரஸ் பரவுகிறது. எனவே மக்கள் கவனமாக இருக்கக்கோரி மத்திய அரசு வலியுறுத்துகிறது. கொரோனா வைரஸ் திருமங்கலம் பிராய்லர் கோழிக் கடைகளில் உள்ள அனைத்து கோழிகளையும் தாக்கி உள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்கியவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக திருமங்கலத்தில் உள்ள பிராய்லர் கோழிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாக கூறி வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல் வேகமாக பரவி வருவதால், அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.

Advertisement

வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவலில் பொருந்தாத தகவலை முன் வைத்து பரப்பி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தாலும், மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கிய சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா என ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

2020 பிப்ரவரி 21-ம் தேதி வெளியான செய்தியில் ” மதுரையில் இருவருக்கு கொரோனா அறிகுறி ” என்ற தலைப்பில் வெளியான செய்திக் கிடைத்தது. அதில், ” விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்தபோது சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எந்த தொற்று அறிகுறியும் இல்லை என சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், திடீரென இருவருக்கும் காய்ச்சல் உருவானநிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரசிற்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தாக்கம் இருக்கலாம் என்ற அடிப்படையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது ” என வெளியாகி இருக்கிறது.

சீனா உள்ளிட்ட வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வரும் மக்கள் முழுமையான சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனினும், சீனாவில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து குணமாகிய சம்பவங்களும் உள்ளன.

இதையெல்லாம் தாண்டி, இங்குள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாகவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் அறிகுறியா என்ற சந்தேகத்திலேயே சோதனைகள் செய்யப்படுவதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்க : பெங்களூரில் பிராய்லர் கோழிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

Advertisement

இதற்கு முன்பாகவே, பெங்களூரில் சிக்கனில் கொரோனா வைரஸ் பரவியது என வதந்தியை பரப்பி இருந்தார்கள். சமீபத்தில் நெய்வேலி பகுதியில் 17 வயது சிறுவன் சிக்கனில் கொரோனா வைரஸ் இருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தியை பரப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ளான். அது தொடர்பாக யூடர்ன் சித்தரிக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தோம்.

கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக பரவக்கூடியது என எச்சரிக்கைகள் செய்யப்பட்டு மாஸ்க் அணியுமாறு கூறப்பட்டது. ஆனால், கோழி, எண்ணெய் பலகாரம் மூலமாக பரவியதாக ஆதாரமில்லாத தகவலை பரப்புகின்றனர். மத்திய அரசும் அவ்வாறு எந்தவொரு தகவலையும் அளிக்கவில்லை. தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதால் வதந்தியை பரப்புபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button