மதுரை எம்.பியின் உண்மையான கோரிக்கையே மாற்றிய ஃபேஸ்புக் பதிவு.

பரவிய செய்தி
மதுரை ரயில் நிலையம் முகப்பு பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ள கோபுரம் ஒரு குறிப்பிட்ட மத அடையாளமாக இருப்பதால் அதனை அகற்ற தென்னக ரயில்வே மேலாளரிடம் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை.
மதிப்பீடு
விளக்கம்
மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கையில், மதுரையில் உள்ள ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருக்கும் கோபுரம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக இருப்பதால் அதனை நீக்க சொல்லி இருப்பதாக செய்தி சேனலின் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது.
ஃபேஸ்புக் தளத்தில் பதிவான செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். நியூஸ் 7 தமிழ் செய்தி சேனலின் நியூஸ் கார்டு லோகோ உடன் இருக்கும் செய்தியில் முதலில் ” மதுரை MP சு.வெங்கடேஷ் கோரிக்கை ” எனவும், கீழே MP சு.வெங்கடேஷன் கோரிக்கை எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், நியூஸ் கார்டில் குறிப்பிட்டது போன்று செப்டம்பர் 3-ம் தேதி நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் செய்தி குறித்து தேடிய பொழுது அன்றைய தினத்தில் அப்படியொரு செய்தியே வெளியாகவில்லை.
சமீபத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தென்னக ரயில்வேவிற்கு ஏதேனும் கோரிக்கையை அனுப்பி உள்ளாரா என்பது குறித்து தேடிய பொழுது, தவறான செய்தி குறிப்பிட்ட அதே நாளில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார்.
” சென்னை-மதுரை நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலுக்கு ” தமிழ் சங்கம் ” என பெயர் மாற்றுவதற்கான கோரிக்கை மனுவை தென்னக ரயில்வே மண்டலத்தின் பொது மேலாளரிடம் வழங்கி உள்ளார் ” -எம்பி சு.வெங்கடேசன்.
தென்னக இரயில்வே மண்டலத்தின் பொது மேலாளரிடம் தேஜஸ் ரயில் வண்டியின் பெயரை மதுரை தமிழச்சங்க ரயில் என்று மாற்றுவதற்கான கோரிக்கையை 15 எம்.பி க்கள் கையெழுத்திட்டு வழங்கினோம்.#mdurailway pic.twitter.com/iXmYrNGi2d
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 4, 2019
இது குறித்து தன டிவிட்டர் பக்கத்தில், ” தென்னக இரயில்வே மண்டலத்தின் பொது மேலாளரிடம் தேஜஸ் ரயில் வண்டியின் பெயரை மதுரை தமிழச்சங்க ரயில் என்று மாற்றுவதற்கான கோரிக்கையை 15 எம்.பி க்கள் கையெழுத்திட்டு வழங்கினோம் ” எனப் பதிவிட்டு கோரிக்கை மனுவையும் இணைத்து உள்ளார்.
முடிவு :
மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மதுரை ரயில் நிலையத்தில் இயங்கும் ” தேஜஸ் ” என்ற ரயிலுக்கு ” தமிழ் சங்கம் ” என பெயர் மாற்ற அனுப்பிய கோரிக்கை மனுவை ரயில் நிலைய முகப்பு பகுதியில் இருக்கும் கோபுரத்தை அகற்ற சொன்னதாக திரித்து வதந்தி பரப்பி வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.