மதுரையில் வடமாநிலத்தவர்கள் வீடுகளில் குறியீடுகளை வைத்து கொள்ளையா ?

பரவிய செய்தி
படம் வரைந்து திருடும் வடமாநில கொள்ளையர்…உஷார், இந்த குறியீடுகள் உங்கள் வீட்டில் இருக்கிறதா ? மதுரை போலீஸ் எச்சரிக்கை.
மதிப்பீடு
விளக்கம்
வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி வருபவர்களில் சிலர் பகல் நேரங்களில் வீடுகளில் ஆள்நடமாட்டம் குறித்து நோட்டம் விட்டு குறியீடுகளை வரைந்து வைத்து கொள்ளையில் ஈடுபடுவதாக சமீபகாலமாக செய்தி நிறுவனங்கள் தொடங்கி சமூக ஊடகங்கள் வரையில் வைரலாகி வருகிறது.
ஜூலை 29-ம் தேதி வெளியான செய்தியில், ” மதுரை நகரில் உள்ள வீடுகளில் குறியீடுகள் வரைந்து கொள்ளை சம்பவங்களில் வடமாநில கும்பல் ஈடுபடுவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் ” என பெயர் அறியாத செய்தித்தாளில் வெளியாகி இருக்கிறது.
அந்த செய்தியில், ” மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் 24 மணி நேரமும் போலீசார் அதிகாரிகள் தலைமையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் சோதனையில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், வீடுகளில் இதுபோன்று குறியீடுகள் இருப்பதை பார்த்தால் போலீஸிற்கு தகவல் கொடுக்குமாறு எச்சரிக்கை செய்ததாக ” குறிப்பிட்டு உள்ளனர்.
செய்தியில் உள்ள குறியீடுகள் குறித்து எங்களுடைய தேடலில் குமுதம் முகநூல் பக்கத்தில் 2018-ல் குறியீடுகள் வைத்து வடமாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதாக பதிவிட்டு இருந்தனர். இதேபோன்று சில பதிவுகளில் குறியீடுகள் மற்றும் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது. ஆக, நீண்ட காலமாக இதே குறியீடுகள் சமூக வலைதளங்களில் பரவி கிடக்கிறது என்பதை அறிய முடிந்தது.
தற்பொழுது மதுரை நகரை மையமாக கொண்டு செய்தி வெளியாகி இருந்ததால் மதுரை நகரின் ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் குறித்த செய்திகளை தேடினோம். அதில், ” மதுரையில் குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை : மதுரை காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு” என்ற செய்தி மட்டுமே நமக்கு கிடைத்தது. வடமாநில கொள்ளையர்கள் குறித்த செய்திகள் வெளியாகவில்லை.
” இதையடுத்து, ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை youturn தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். மதுரையில் வடமாநில கொள்ளையர்கள் குறியீடுகளை வைத்து கொள்ளையில் ஈடுபடுவதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார் ” .
மேலும் படிக்க : சென்னை வீடுகளில் கொள்ளை கும்பல் மார்க் செய்து கொள்ளையா ?
கடந்த 2016-ல் பிற மாநிலங்களிலும் இதே குறியீடு குறித்த வதந்திகள் பரவி உள்ளன. சில ஆண்டுகளாக வடமாநில கொள்ளையர்கள் குறியீடுகளை வைத்து கொள்ளையில் ஈடுபடுவதாக பல புரளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற புரளிகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும்.
மேலும் படிக்க : சாய்பாபா பாட்டு பாடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளை அடிப்பதாக வதந்தி !
எனினும், கொள்ளை சம்பவங்கள் குறித்து வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமே. யார் மீதாவது சந்தேகங்கள் எழுந்தால் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம். நமது பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முடிவு :
மதுரையில் வடமாநில கொள்ளையர்கள் குறியீடுகளை வைத்து கொள்ளையில் ஈடுபடுவதாக வெளியான செய்தியை மதுரை நகர கமிஷனரே மறுத்து உள்ளதால் மக்கள் வதந்திகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.