மதுரை மாணவி நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமனமா ?

பரவிய செய்தி

ஐ.நா. நல்லெண்ண தூதரான மதுரை மாணவி.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

மதுரையில் சலூன் கடையை நடத்தி வரும் சி.மோகன் தங்கள் பகுதியில் வசித்து வந்த பல ஏழை மக்கள் ஊரடங்கால் படும் கஷ்டத்தை அறிந்து தனது மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை முழுவதுமாக மக்களுக்காக செலவு செய்தார். அவரின் மகளும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். அவரின் சேவை மனப்பான்மையை பிரதமர் மோடி ” மனதின் குரல் ” நிகழ்ச்சியில் பாராட்டி பேசி இருந்தார்.

பிரதமர் பாராட்டிய சலூன் கடைக்காரர் என ஊடகங்களில் வெளியாகி பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து, மதுரை மாவட்ட பாஜகத் தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மோகனை நேரில் சந்தித்து பாராட்டியதோடு அவரது குடும்பத்தினருக்கே பாஜகவின் உறுப்பினர் அட்டையை வழங்கி விட்டு சென்றுள்ளனர். இதன்பிறகு, பிரதமரால் பாராட்டப்பட்ட மோகன் குடும்பம் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகியது. அதற்கு உடனடியாக மோகன் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததும் செய்தியாக வெளியாகி இருந்தது.

இப்படி இருக்கையில், பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் 13 வயதான மகள் நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டு உள்ளனர். இதையடுத்து, தமிழக காவல்துறை முகநூல் பக்கத்திலும் அந்த தகவல் பகிரப்பட்டு உள்ளது.

உண்மையை சொல்லப்போனால், ஐக்கிய நாடுகளின் சபை மாணவி நேத்ராவை நல்லெண்ணத் தூதரக நியமித்ததாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. ஐ.நாவின் நல்லெண்ணத் தூதரக நியமிக்கப்பட்டு உள்ளார் என பகிரப்படும் பதிவில் UNADAP எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

UNADAP (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம் ) என்பது ஓர் அரசு சாரா அமைப்பு ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தது அல்ல. ஐநாவின் லோகோவும், UNADAP உடைய லோகோவும் வெவ்வேறாக இருப்பதை காணலாம்.

UNADAP உடைய இணையதளத்தில் மதுரை மாணவி நேத்ரா UNADAP சார்பாக ஜெனிவா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ள UN CSO மாநாட்டில் வறுமை தொடர்பாக பேச வாய்ப்பு அளித்து உள்ளதாகவும், அவருக்கு ஊக்கத் தொகையாக 1 லட்சம் அளித்துள்ளது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மாணவி நேத்ரா தூதராக அறிவிக்கப்பட்டது UNADAP எனும் அரசு சாரா அமைப்பால், ஐ.நாவால் அல்ல. UN என இடம்பெற்று உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஊடகங்களும் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர் என தவறான செய்தியை வெளியிட்டு உள்ளனர்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button