This article is from Jun 13, 2020

மதுவந்தி போலி விசாவில் சென்று சிகாகோவில் கைதா ?

பரவிய செய்தி

திருட்டு விசாவில் 2019 வருடம் அமெரிக்காவிற்கு சென்று, சிக்காகோ விமான நிலைய போலீஸ் அதிகாரிகளின் சோதனையின் போது திருட்டு விசா என்று கண்டுபிடிக்கப்பட்டு பின்பு கைது செய்யப்பட்டு உடனே திருப்பி இந்தியாவிற்கு விரட்டி விடப்பட்டார் YG மகேந்திரனின் மகள் மதுவந்தி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த திருட்டு அமெரிக்க விசா தயாரித்த பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்று ஏன் இதுவரையில் எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை? ஏன் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த பைத்தியத்தை பாதுகாப்பது யார்?

Facebooklink | archive link 

மதிப்பீடு

விளக்கம்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், ரஜினி மனைவியின் சகோதரி மகளான மதுவந்தி கொரோனா பொது முடக்கத்தின் போது பிரதமர் மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து வெளியிட்ட வீடியோக்களால் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகியவர். மதுவந்தி 2019-ல் அமெரிக்காவிற்கு போலி விசாவில் சென்ற போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

மதுவந்தி போலி விசாவில் சென்றதால் அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைதாகி பின்னர் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என பகிரப்படும் பதிவுகளின் கீழே ஆதாரமாக indiaglitz இணையதளத்தில் வெளியான செய்தியை இணைத்து இருக்கிறார்கள்.

அதில் சென்று பார்க்கையில், ”  அமெரிக்காவில் மதுவந்தி கைது செய்யப்பட்டு, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுவந்தி ஊடகத்திற்கு விளக்கத்தில், அவர் அமெரிக்க சென்ற போது சிகாகோ விமான நிலையத்தில் அவருடைய விசாவில் தவறு இருப்பதாகவும், அதனால் அதிகாரிகள் இந்தியாவிற்கு திரும்பி சென்று சரியான ஆவணங்களுடன் வருமாறு கூறினார்கள். அங்கு கைது நடவடிக்கை ஏதும் நடக்கவில்லை, சென்னை வந்து புதிய விசாவிற்கு விண்ணப்பித்து உள்ளதாகவும், அது தயாரான பின்னர் திரும்பி செல்ல உள்ளதாகவும் கூறினார் ” என வெளியாகி இருக்கிறது.

இந்த செய்தியின் தலைப்பில் உள்ளதை மட்டும் நம்பி இதை ஆதாரமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், உள்ளே மதுவந்தி அளித்த தகவலை பார்க்கவில்லை. சிகாகோ விமான நிலையத்தில் மதுவந்தி கைது செய்யப்பட்டதாக கடந்த ஆண்டிலேயே சமூக வலைதளங்களில் பரவி உள்ளன. அதற்காக விளக்கம் அளித்து மதுவந்தி ஆங்கிலம் மற்றும் தமிழில் ஆடியோ பதிவை வெளியிட்டார் என சில இணையதள செய்திகளில் வெளியாகி இருக்கிறது. அவர் திருட்டு விசாவில் சென்றதாக எந்தவொரு செய்தியோ அல்லது ஆதாரங்களோ இல்லை.

” மதுவந்தி தனது குழுவுடன் நாடக புரோகிராமிற்காக சிகாகோ சென்ற போது விசா பிரச்சனை காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விசாவில் பிரச்சனை இருந்தது உண்மை, ஆனால் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் வீண் வதந்தி என மதுவந்தி தெரிவித்து இருக்கிறார் “.

மதுவந்தி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார் என சமூக வளைதளத்தில் பரவிய தகவலை மறுத்து மதுவந்தி அளித்த தகவலை வெளியிட்ட செய்தி இணையதளங்களும் தங்களின் தலைப்பில் மதுவந்தி கைதா ? என்பதற்கு பதிலாக கைது ? என்றே குறிப்பிட்டு உள்ளனர். செய்தி ஊடகங்களில் இதுபோன்ற குழப்பமான தலைப்பால் கூட மக்களிடம் செய்திகள் தவறாக செல்வதை பார்க்க முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader