மன்னர் ராணா பிரதாப்பின் 50 கிலோ போர்வாள் இதுவா ?

பரவிய செய்தி
இது மொகலாயர்களை கதறவிட்ட மஹாராஜா ராணா ப்ரதாப் அவர்களின் போர்வாள். இதன் எடை 50 கிலோ.!
மதிப்பீடு
விளக்கம்
இந்திய நிலப்பரப்பு ஒற்றுப்பட்ட பகுதியாக மாறுவதற்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான மன்னர்கள் சிறு சிறு பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். கிபி1572-97 வரை மேவார் பகுதியை ராஜ்புட் அரசர் ராணா பிரதாப் ஆட்சி செய்து வந்துள்ளார். இவர் மகாராணா பிரதாப் என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஆட்சி செய்தது தற்போதைய வடமேற்கு இந்திய மற்றும் பாகிஸ்தானின் கிழக்கு பகுதியாக அமைந்து இருந்தது.
முகலாய பேரரசர் அக்பர் தங்கள் பகுதியை கைப்பற்றும் முயற்சியை எதிர்த்து போரிட்டதால் ராஜஸ்தானில் பெரிய ஹீரோவாக மரியாதை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மகாராணா பிரதாப் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. இப்படி வரலாற்று சுவடுகளில் இடம்பெற்ற மகாராணா பிரதாப் உடைய 50 கிலோ போர்வாள் இதுவே என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில், இந்த போர்வாள் மகாராணா பிரதாப் உடைய போர்வாளா என்பதில் சந்தேகம் இருந்தது. காரணம், வாளில் கைப்பிடியில் ” அரபிக் ” போன்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. வாள் உறையின் வடிவமைப்பும் வித்தியாசமாக அமைந்து உள்ளது. ஆகையால், வைரலாகும் வாளின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு histoireislamique எனும் இஸ்லாமிய வரலாறு குறித்த இணையதளத்தில் இப்புகைப்படம் பதிவாகி இருந்தது.
” கிரனாடாவின் நாஸ்ரித் அரசின் மன்னர் போப்தில் (பன்னிரெண்டாம் முகமது) உடைய வாள், ஆனால் இந்த வாள் 1400-ல் உருவாக்கப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸ்பெயின் நாட்டின் கடைசி இஸ்லாமிய மன்னரும், கிரனாடாவின் 12-வது அபு அப்துல்லா முகமது உடைய வாள் என்பதை அறிய முடிந்தது. இவர் போப்தில் என்றும் அழைக்கப்பட்டு உள்ளார். அதை வைத்து தேடிய பொழுது, இந்த வாள் பிரான்சில் உள்ள குளுனி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராணா பிரதாப் உடைய போர்வாள் குறித்து தேடிய பொழுது, 2018-ல் எகனாமிக் டைம்ஸ் செய்தியில் மேவார் அரசர் இரட்டை வாளைப் பயன்படுத்தி உள்ளதாகவும், ஒவ்வொரு வாளும் 25 கிலோ எடைக் கொண்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் ராணா பிரதாப் அருங்காட்சியத்தில் அவரின் வாள் வைக்கப்பட்டு உள்ள வீடியோவை கீழே காணலாம்.
முடிவு :
நம் தேடலில், மகாராணா பிரதாப் உடைய 50 கிலோ எடை கொண்ட போர்வாள் என வைரல் செய்யப்படும் புகைப்படம் ஸ்பெயின் நாட்டின் கடைசி இஸ்லாமிய மன்னரின் போர்வாள் என்றும், ராணா பிரதாப் உடைய உண்மையான இரட்டை வாளை காண முடிந்தது.