இந்தியாவையே மிரள வைக்கும் விவசாயிகளின் பேரணி!

பரவிய செய்தி
மகாராஷ்டிராவையே மிரள வைத்த 25,000 விவசாயிகளின் மாபெரும் பேரணி. விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சட்டசபையை முற்றுகையிட உள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
விவசாயிகளின் பிரம்மாண்டமான பேரணியால் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் நெருக்கடி. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ். 50000 மேற்பட்ட விவசாயிகள் , மக்களும் ஆதரவு .
விளக்கம்
இந்தியாவில் விவசாயிகள் தொடர்பாக எழும் கோரிக்கைகள் நீண்ட காலமாக தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் பல திட்டங்களை அறிவித்தாலும் அதன் பயன் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவது இல்லை. அதனால் நாட்டில் விவசாயிகள் சார்பில் பல்வேறு போரட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய தொடர் போராட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
அதேபோன்று, மகாராஷ்டிராவில் 25,000 விவசாயிகள் தொடங்கிய மாபெரும் பேரணி இந்தியாவையே மிரள வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ” பாரதிய கிசான் சபா ” (ஏஐகேஎஸ்) என்ற விவசாயிகளின் அமைப்பு நாசிக் முதல் மும்பை வரை ஒரு நீண்ட பேரணியை நடத்தி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி நாசிக்கில் தொடங்கிய இப்பேரணி 12-ம் தேதி தலைநகர் மும்பையை வந்தடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தை முற்றுகையிட எண்ணி தொடங்கிய இப்பேரணியின் தொடக்கத்திலேயே இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சுமார் 180 கி.மீ தொலைவை 5 நாட்களாக பயணித்து வந்தவர்கள் 11-ம் தேதி மும்பை கேஜே சோமையா மைதானத்தில் குவிந்தனர். இப்பேரணிக்கு ஆதரவு அளித்து பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்த வண்ணமே உள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவு பெருகுவதால் பேரணியில் 50,000-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.
பேரணியின் பின்னணி :
விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் புகார்களை தெரிவித்தனர். விவசாயிகள் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சட்டசபையை முற்றுகையிட இப்பேரணியை தொடங்கியுள்ளனர் விவசாயிகள்.
- விவசாயிகளின் கடன் ரத்து என்று கூறி வெளியாகும் புள்ளி விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை. வங்கிகள் திவாலானதால் 10 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, விவசாயிகளின் மின் கட்டணம் மற்றும் விவசாய கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
- இந்த பிரம்மாண்டமான பேரணியில் அதிகம் இருப்பது நாசிக்கின் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களே. பழங்குடியினர் பல காலங்களாக விவசாயம் செய்தாலும், நிலங்களின் உரிமை வனத்துறையினரிடமே உள்ளது. எனவே, பழங்குடி மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும்.
- மாநில அரசின் கடன் சுமை 2 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும், விவசாயிகளுக்கு செலவிட்ட தொகைகள் முழுமையாக சென்றடையவில்லை.
- சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதாக இல்லையெனினும், உற்பத்தி செலவை கணக்கிட்டு சட்டபூர்வமாக அளிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச விலையும் சரியாக வழங்கப்படவில்லை.
- மகாராஷ்டிரா மாநிலத்தின் வேளாண் உற்பத்தி 44 சதவீதம் சரிந்துள்ளது என்று பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- பருத்தி பயிர்கள் பூச்சிகளால் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் வறட்சி மற்றும் பூச்சி தாக்கத்தை தாங்கும் ஒட்டுரக பயிர்களை உருவாக்க வேண்டும். ஆனால், இதற்கான மத்திய அரசு எத்தகைய முயற்சியும் எடுக்கவில்லை.
- கால்நடை பராமரிப்பு மையங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால், நோய் தாக்குதலால் இறக்கின்ற கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சட்டமன்றம் முற்றுகை :
விவசாயிகளின் பிரம்மாண்டமான பேரணியால் மும்பையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. விவசாயிகளின் பேரணிக்கு குடிமக்கள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.
பேரணியால் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் நெருக்கடி உருவாகியதால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ்.
முழுமையான கடன் ரத்து, பழங்குடியினருக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மும்பையை உலுக்கிய விவசாயிகளுக்கு நாடு முழுவதும் ஆதரவுகள் பெருகி வருகிறது.
நேற்று இரவு மும்பையை அடைந்த பேரணியினர் திங்கள் காலையில் சட்டமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். ஆனால், இன்று காலை 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறுவதால், அவர்களுக்கு எவ்வித இடையூறும் அளிக்காமல் தெற்கு மும்பையில் உள்ள அசாத் மைதானத்தில் தங்கியுள்ளனர். இதையறிந்த மும்பைவாசிகள் பேரணியில் பங்குபெறுபவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்தனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா அரசு பேரணி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளனர். எனினும், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில் சட்டமன்றத்தை முற்றுகையிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பல தொழிலதிபர்களுக்கு பல்லாயிரம் கோடி கடன் வழங்குவதும், அவர்கள் நாட்டை விட்டு ஓடுவதும் அல்லது நிறுவனம் திவாலாகிய நிலையை அடைவதும் என்கிற சூழல் இருக்கிறது. இப்படி பல்லாயிரம் கோடியை ஒரு நபருக்கு வழங்கி, அந்த நிறுவனம் முறையாக செயல்படாமல் வங்கிகளை ஏமாற்றுவதும், முறையாக வட்டி கட்டாமல் முறையாக திருப்பி செலுத்தாததால் வங்கிகளே திவாலாகும் சூழ்நிலைக்கு இட்டு செல்வதும் தொடர் கதையாக வரும் சூழலில் இத்தனை ஆயிரம் விவசாயிகளுக்கு, இந்த பல்லாயிரம் கோடி செலவிட்டு இருந்தால் விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் செழித்திருக்கும் என்கிற பெரும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த சிந்தனையில் சிந்தித்து பார்த்தால் உண்மையில் விவசாய கடன் என்கிற பெயரில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தே வருகிறது. நாட்டில் உள்ள பல்லாயிரம் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும், தனது வாழ்வாதாரத்தை பெருக்கவும் பல்வேறு போராட்டங்களை எடுத்து வருகிறார்கள். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் என்ற வார்த்தையை தாண்டி அவர்களுக்கு முறையான திட்டங்களை செயல்படுத்துவதில், கடன் தள்ளுபடி அல்லது கடன் உதவி போன்றவற்றில் நடைமுறை சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள்.
வங்கிகளின் மிகப்பெரிய பலம் குறைந்து வருகிறது. வங்கிகளே கேள்விக்குறியாக உள்ள இந்த சூழலில், இது மாதிரியான விசயங்களில் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் நாடு விவசாயத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் என்று மக்கள் பேசுகிறார்கள். விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளது. நீர் ஆதார பிரச்சனை, நதி நீர் பிரச்சனை, பருவ மழை பிரச்சனை, மழை நீர் வடிகால்கள் அமைத்து நிறைய குளம் மற்றும் ஏரி அமைக்காத சிக்கல், உரங்களில் உள்ள சிக்கல், உரங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் வாங்க வேண்டிய கட்டாயம்.
இயற்கை விவசாயம் போன்றவற்றை செய்வதற்கு முனைந்து வரும் வேளையில் விதை முதலியவற்றை கார்ப்ரேட் நிறுவனங்களிடம் பெற வேண்டிய கட்டாயம். இப்படியான சூழலை சந்தித்து வருகிறார்கள். இவ்வளவு சிக்கலையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிற தேசத்தை முறையான வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல விவசாயிகளுக்கு மானியம், முறையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதே சிறந்தது.
திரிபுரா தோல்வியை கேலி செய்து வந்தவர்களுக்கு இதன் மூலம் பதில் தந்துள்ளது கம்யூனிஸ்டு என்றே கூறலாம் , வெற்றி தோல்வியை தாண்டி எளிய மக்களோடு துணை நிற்கும் அமைப்பு என அந்த கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர் .