மலபார் கோல்டு இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்குவதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
மலபார் கோல்டு வாடிக்கையாளருக்கு முக்கிய அறிவிப்பு;- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, குறிப்பு: இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும்
மதிப்பீடு
விளக்கம்
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனத்தால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையானது இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக, மலபார் அறக்கட்டளையின் மேடையில் பர்தா அணிந்து வரிசையாக கல்வி உதவித் தொகையுடன் இருக்கும் மாணவிகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
முஸ்லீம் ஒருவரால் நடத்தப்படும் மலபார் கோல்டு நிறுவனத்தில் நகை வாங்குவது இந்துக்கள், ஆனால் கல்வி உதவித் தொகை வழங்குவது இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் எனக் கூறி இப்படத்தை பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
We Buy Gold from #Malabar gold and they sponsor and give scholarship to only Muslim students.
Wow.. Well done #Hindus pic.twitter.com/u4XH8L07IQ
— யாதும் ஊரே யாவரும் கேளிர் (ஹிந்து 🚩) (@srinivaca) January 19, 2023
உண்மை என்ன ?
” மலபார் உதவித்தொகை ” குறித்து தேடுகையில், 2023 ஜனவரி 21ம் தேதி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் யூடியூப் சேனலில் ‘Educational Scholarship Program | CSR Initiative | Malabar Group’ எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் வைரல் செய்யப்படும் புகைப்படம் 1:03வது நிமிடத்தில் இடம்பெற்று இருக்கிறது. மேலும், வீடியோவில் இஸ்லாமிய மாணவிகள் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்த மாணவிகளும் உதவித்தொகை பெறும் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
யூடியூப் வீடியோவின் நிலைத்தகவலில், ” இந்த நிதியாண்டில் மட்டும் கர்நாடகாவில் உள்ள தகுதியான 4000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையானது மலபார் அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. சிஎஸ்ஆர் கொள்கையின் ஒரு பகுதியாக எங்கள் இலாபத்தில் 5% தொண்டு நோக்கங்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பயனாளிகளாக சமூகத்தின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளனர் ” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
2023 ஜனவரி 18ம் தேதி, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் கிரீஸ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், கர்நாடகாவின் மங்களூரில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவிகளின் புகைப்படங்களின் தொகுப்பை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களிலும் இஸ்லாமிய மாணவிகள் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்த மாணவிகளும் இருப்பதை பார்க்கலாம். வைரல் செய்யப்படும் புகைப்படமும் மங்களூரைச் சேர்ந்தது.
2023 ஜனவரி 18ம் தேதி மதுரையில் மலபார் கோல்டு நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 214 மாணவிகளுக்கு ரூ.19 லட்சத்து 14 ஆயிரத்தை உதவித்தொகையாக வழங்கிய நிகழ்வில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். அங்கும் மதம் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை.
முடிவு :
நம் தேடலில், மலபார் கோல்டு நிறுவனம் இஸ்லாமிய மாணவிகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. மலபார் அறக்கட்டளை சார்பில் சிஎஸ்ஆர் நிதியில் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.