This article is from Sep 30, 2018

கேரளா மலம்புழா அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டதா ?

பரவிய செய்தி

பாலக்காடு தமிழகத்தோடு இருந்த போது 1955-ல் காமராஜர் கட்டிய மலம்புழா அணை தான் இன்று பெரும் வெள்ளத்தில் இருந்து பாலக்காட்டை பாதுகாத்து வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

காமராஜர் காலத்தில் திறக்கப்பட்ட மலம்புழா அணை உட்பட 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி நீர் திறக்கப்பட்டதை அடுத்து கேரளா மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

விளக்கம்

கேரளா மாநிலத்தில் மக்களின் இயல்வு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு கனமழை மொழிந்து பல மாவட்டங்களில் வெள்ள நீர் கரையுரண்டு ஓடுகிறது. கனமழையால் மலைப்பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை உண்டாக்கி உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பேரிடர் மீட்புக் குழு தீவிர மீட்பு பணியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கேரளாவில் உள்ள மலம்புழா அணை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றி வருவதாகவும், அந்த அணையை கட்டியது ஐயா காமராஜர் தான் என்கிற தகவல் வைரலாகி வருகிறது.

மலம்புழா அணை :

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மலம்புழா அணை. பாலக்காட்டில் இருந்து 10கி.மீ தொலைவிலும், கோயம்புத்தூரில் இருந்து 45கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பாக பாலக்காடு மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாலக்காடு பகுதி வயல்வெளிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பு.

” பாலக்காடு பகுதியில் அணையை கட்டுவதன் மூலம் அம்மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை ஏற்படுத்தி தர இயலும் என்பதால் பிரதப்புழா நதியின் துணை நதியான மலம்புழாவில் அணையை கட்ட அன்றைய மெட்ராஸ் மாகாண அரசு 1949-ம் ஆண்டில் முடிவு செய்தனர். அதன்பின் 1949 மார்ச்சில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் அடிக்கல் நாட்டினார். காமராஜர் 1954-இல் மதராஸ் முதல்வராக பதவி ஏற்றார். மலம்புழா அணையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பிறகு 1955-ல் அக்டோபர் 5-ம் தேதி முதல்வர்ஐயா காமராஜர் அவர்கள் அணையைத் திறந்து வைத்தார் “.

மலம்புழா அணையின் கொள்ளளவு 236.69 மில்லியன் கன மீட்டர், நீர்ப்பிடிப்பு பகுதியானது 147.63 சதுர கிலோமீட்டர், முழு நீளம் 2,069 மீட்டர், உயரம் 115.6 மீட்டர். மலம்புழா அணை கேரளாவில் உள்ள மிகப்பெரிய நீர்பாசன தேக்கமாகும். நீர்பாசனம், குடிநீர், தொழிற்சாலை, மின் உற்பத்தி, மீன் பிடித்தல், நீர் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மலம்புழா அணை பயன்படுத்தப்படுகிறது.

அரை நுற்றாண்டை கடந்து சிறந்து விளங்கும் மலம்புழா அணை மெட்ராஸ் மாகாணத்தின் மூலம் கட்டப்பட்டு ஐயா காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இன்று வரை அப்பகுதி மக்களுக்கு நன்மை விளைவித்து வருகிறது.

கேரளாவில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் இருந்து மக்கள் பகுதிகள் மூழ்காமல் இருக்க மலம்புழா அணையிலும் நீர் தேக்கப்பட்டு இருந்துள்ளது. எனினும், கேரளாவில் தொடர்ந்து கனமழை மொழிவால் அணைகள் நிரம்பியதன் காரணமாக பல அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

” கேரளாவில் உள்ள 40 அணைகளில் மலம்புழா அணை உட்பட மொத்தம் 24 அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகையால், அணைகளில் இருந்து வெளியேறிய நீரின் தாக்கத்தாலும் வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட பல பகுதிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது “

தன் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் இன்றளவும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்து காலத்தால் அழியாப் புகழைப் பெற்றுள்ளார் ஐயா காமராஜர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader