மலேசிய போலீசில் பணியாற்றும் தமிழ் பெண் கொலை என பரவும் வாட்ஸ் அப் வதந்தி !

பரவிய செய்தி
ஒரு தமிழ் பெண் சூப்ரண்ட் ஆப் போலீசாக இருக்காங்க மலேசியாவில். அந்த தமிழ் பெண்ணுக்கு நடந்த கொடூரத்தை பாருங்க. அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவரை கீழே தள்ளி காலை வச்சதுக்கு பெரிய போராட்டம். இன்னிக்கு மலேசியாவுல ஒரு தமிழ் பெண்ண கொடூரமா அடித்து கொலை பண்ணிருக்காய்ங்க.
(குறிப்பு : கொலை செய்யும் வீடியோ என்பதால் வீடியோவை பதிவிடவில்லை)
மதிப்பீடு
விளக்கம்
மலேசியாவில் போலீசாக பணியாற்றி வரும் தமிழ் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து உள்ளதாக பின்னணியில் தமிழில் பேசும் 1 நிமிட வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் உலாவி வருகிறது.
வீடியோவின் தொடக்கத்தில் கை, வாய் கட்டப்பட்டு உள்ள பெண்ணை பாறையை போட்டு, கம்பால் அடித்து கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. பின்னர் மலேசிய போலீஸ் உடையில் இருக்கும் பெண் ஒருவரின் சில புகைப்படங்கள் வரிசையாக காண்பிக்கப்படுகின்றன.
உண்மை என்ன ?
வீடியோவில் முதலில் இடம்பெற்ற காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஆகஸ்ட் மாதமே hoodsite எனும் இணையதளத்தில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரேசில் நாட்டில் நிகழ்ந்ததாக கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
2020 ஆகஸ்ட் மாதம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த Thalia Torres de Souza எனும் பெண்ணை அங்குள்ள கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்தும் வெளியிட்டு உள்ளனர்.
மலேசியாவில் காவல்துறையில் பணியாற்றி வரும் தமிழ் பெண் கொலை செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவுடன் இணைக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் குறித்து தேடுகையில், பெண் கொலை செய்யப்படும் வைரல் வீடியோவில் இருப்பது மலேசிய போலீஸ் அல்ல என மலேசிய போலீசார் அளித்த விளக்கம் மலாய் மெயில் உள்ளிட்ட செய்திகளில் செப்டம்பர் மாதம் வெளியாகி இருக்கிறது.
பிரேசில் நாட்டில் நிகழ்ந்த கொலை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ உடன் மலேசிய பெண் போலீஸ் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தி மலேசியாவில் போலீஸ் பணியில் உள்ள தமிழ் பெண் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸ் அப் வதந்தியை பரப்பி வருகிறார்கள்.