கர்ப்பம் கண்டறியும் சோதனை கருவியில் தந்தை யார் என அறிய முடியுமா ?

பரவிய செய்தி
தாய்மை அடைந்ததாக நினைக்கும் பெண் காலை நேரத்தில் தன் சிறுநீரை அந்த சோதனை கருவியில் 30 முதல் 60 நொடிகள் நனைய விட்டால் ” அந்த கருவியில் ஒரு கோடு விழுந்தால் கர்ப்பமில்லை, அதுவே இரு கோடுகள் விழுந்தால் கர்ப்பமுற்று இருக்கிறார் ” என்பது பொருள்.
சோதிக்கப்பட்ட கருவியை அதை அப்படியே தந்தையின் சிறுநீரில் 30 முதல் 50 நொடி நனைய விட்டால் ” அந்த கருவியில் இருந்த இரு கோடுகளும் அழிந்தால் அந்த கர்ப்பத்திற்கு அந்த ஆண் காரணமில்லை ” என்பது பொருள்.
மதிப்பீடு
விளக்கம்
பெண்கள் கர்ப்பமடைந்தோமா என வீட்டில் தாங்களே சோதனை செய்து பார்க்க ” Pregnancy Test Kit ” பயன்படுத்துவர். அதில், பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளாரா என்பதை தாண்டி, அந்த கர்ப்பத்திற்கு அவரின் கணவர் தந்தையா, இல்லையா என்பதையும் பார்க்க இயலும் எனக் கூறிய முகநூல் பதிவு ஒன்றை பார்க்க முடிந்தது.
இது குறித்து டாக்டர்.பிரவீன் குமார் எம்பிபிஎஸ், எம்.டி கூறுகையில், ” இந்த சோதனை hCG ஹார்மோனை அடிப்படையாக கொண்டது. இது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உற்பத்தியாகும். பெரும்பாலும், பிளசென்டா(தொப்புள் கொடி) உருவாகும் பொழுது. இது சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த சோதனை கருவி இரு நிலைகளை கொண்டுள்ளது . கண்ட்ரோல் எப்பொழுதும் பாசிடிவ் ஆக வருகிறது, ஆகையால் எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. hCG ஹார்மோன்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் பொழுது மட்டுமே சோதனை பாசிடிவ் ஆக இருக்கும். அப்படி ஹார்மோன் வரும் பட்சத்தில் கருவியில் இரு கோடுகள் தென்படும் ” எனக் கூறியுள்ளார்.
மேலும், ஆண்களால் சாதாரணமாக சிறுநீர் வழியாக hCG ஹார்மோன்களை வெளியேற்ற முடியாது. ஆண்கள் பிளசென்டா கொண்டிருப்பதில்லை. அரிதாக, சில புற்றுநோய்கள் இத்தகைய ஹார்மோனை வெளியிடும் பொழுது பாசிடிவ் ஆக இருக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆண்களின் சிறுநீர் கருவியில் உருவான கோடுகளை அழிக்க வாய்ப்பில்லை. ஆண்களின் சிறுநீரில் hCG ஹார்மோன்கள் வரும் பட்சத்தில் புற்றுநோய் இருப்பதாக அறியப்படுகிறது.
பிறக்கும் குழந்தைக்கு அப்பெண்ணின் கணவர் தந்தையா அல்லது இல்லையா என்பதை டி.என்.ஏ சோதனையின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இதைத்தவிர, பிறவற்றால் 100 சதவீதம் சரியான முடிவை அளிக்க இயலாது என மருத்துவர் தெரிவித்து உள்ளார்.
hCG :
hCG அல்லது human Chorionic Gonaditropin எனும் ஹார்மோனை ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் தங்களது உடலில் சிறிதளவில் கொண்டிருப்பர். ஆனால், பெண்கள் கர்ப்பமடையும் நேரத்தில் hCG ஹார்மோன்கள் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். கர்ப்பமாக இருக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு பெண்ணின் இரத்தத்தில் hCG ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும்.
கர்ப்ப சோதனை கருவியில் ” c “ எனும் கண்ட்ரோல் குறியீடு எப்பொழுதும் இருக்கும், அதற்கு அருகில் தோன்றும் கோட்டை ” T “ என்பர். அதுவே சோதனை முடிவாகும். இவ்விரு கோடுகளும் தெரியும் பட்சத்தில் முடிவு பாசிடிவ் ஆக கர்ப்பமுற்று இருப்பதாக அர்த்தம். ” c ” குறியீடு மட்டும் தென்பட்டால் கர்ப்பமில்லை என குறியீடு குறித்து தெரிவிக்கின்றனர். பெண்களின் கர்ப்பம் குறித்து மருத்துவமனையில் சிறுநீர் சோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனையும் மேற்கொள்வர்.
முடிவு :
சோதனை கருவியில் பெண்களின் hCG ஹார்மோன்கள் அடிப்படையில் கர்ப்பமாக இருக்க வாய்ப்புள்ளதா என அறிய முடியும். அதற்கான குறியீடு குறித்த தகவல் சரியானது. ஆனால், பெண்ணின் கணவர் தந்தையா, இல்லையா என உறுதிப்படுத்த முடியாது. அதற்கு டி.என்.ஏ சோதனைகள் மட்டுமே சரியானது.
ஆண்களால் hCG ஹார்மோன்களை சிறுநீர் மூலம் வெளியிட முடியாது. அப்படி வெளியாகினால் புற்றுநோய் பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளன. ஆண்களின் சிறுநீரால் பெண்களின் கர்ப்ப சோதனை கருவியின் கோடுகளை அழிக்க முடியாது என மருத்துவரே தெளிவுப்படுத்தி உள்ளார். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பரவும் செய்திகள் தவறானது என நிரூபிக்கப்பட்டு உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.