மாமல்லபுரத்தில் தமிழ் புறக்கணிப்பா ?

பரவிய செய்தி
மாமல்லபுரம் சிற்ப பகுதியில் தொல்லியல் துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் ஹிந்தி , ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்று , தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடி மற்றும் சீனத் தலைவர் ஜின்பிங் சந்திப்பானது புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் நிகழ்ந்தது பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு பிறகு மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்தனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இருப்பதாகவும் , தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் மீம்ஸ் பகிரப்பட்டு. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் அதிகம் கேட்கப்பட்டு வருகிறது.
பகிரப்படும் மீம்ஸ் மற்றும் ஸ்க்ரீன்ஷார்ட்களில் இணையதளத்தில் வெளியாகிய செய்தி போன்று இடம்பெற்று இருந்தது. அதை வைத்து தேடிய பொழுது, 2019 அக்டோபர் 15-ம் தேதி தினமலர் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் அலுவலங்களில் உள்ள அறிவிப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெறச் செய்து , மாநில மொழிகளை புறக்கணிப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது . விடுமுறை நாளன்று மாமல்லபுரம் சிற்ப பகுதிகளை காண குவிந்த மக்கள், கடற்கரை கோவில் பகுதிக்கான நுழைவு சீட்டு எடுக்கும் இடத்தில் அறிவிப்பு பலகைகளில் தமிழ் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
மாமல்லபுரத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுவது முதல்முறையல்ல . 2018-ல் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் பகுதிக்கு செல்ல வழங்கப்படும் நுழைவுச் சீட்டில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்றது சர்ச்சையாகி, செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது .
இதற்கு அப்பொழுது பதில் அளித்த தொல்லியல்துறையின் மாவட்ட முதன்மை அதிகாரி தரணிதரண் கூறுகையில் , ” இந்திய அளவில் உள்ள தொல்லியல்துறை சார்பில் வழங்கப்படும் நுழைவுக் கட்டண சீட்டுகள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சிடும் வகையில் மென்பொருள் கொண்ட கணினிகள் மட்டுமே மத்திய அரசால் எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது . இதனால், தமிழில் அச்சிடும் மென்பொருள் இல்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் அலுவலங்களில் மாநில மொழிகள் இடம்பெறாமல் போவது அம்மாநில மக்களிடையே எதிர்ப்பை பெறக் கூடிய செயல் என மத்திய அரசு அறிய வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் மாநில மொழியான தமிழில் அறிவிப்பு இல்லை என்பது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அனைத்து மாநில மொழிகளுக்கும் மத்திய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.