புகைப்பிடிப்பதை நிறுத்த தலைக்கு கூண்டு| மனைவியின் ஐடியாவா ?

பரவிய செய்தி
புகைப்பழக்கத்தை நிறுத்த மனைவியின் ஐடியா ! சாப்பிடுவதற்கு மட்டுமே கதவு திறக்கும்.
மதிப்பீடு
விளக்கம்
கணவனின் புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு அவரின் தலை முழுவதும் கூண்டால் மூடி, உணவு உண்பதற்கு மட்டுமே கூண்டைத் திறக்கும் மனைவியின் செயல் புகைப்படத்துடன் நீண்ட வருடங்களாகவே சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பரவி வருகிறது. புகைப்பிடிப்பதை தடுக்கும் நவீனக் கருவி எனக் கூறியும் கிண்டல் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் அப்புகைப்படத்தை காண்பித்து உண்மைத்தன்மை குறித்து கேட்டு இருந்தனர். ஆகையால், வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார், எங்கு இருக்கிறார்கள், எதனால் இப்படி செய்தார் என்பதை விரிவாக தெரிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி டெய்லி மெயில் இணையதளத்தில் புகைப்பிடிப்பதை நிறுத்த தன் தலையில் கூண்டோடு சுற்றும் நபரின் விரிவான தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
” துருக்கி நாட்டைச் சேர்ந்த 42 வயதான இப்ராஹிம் யுசில் என்பவர் தன்னுடைய தலைக்கு ஒரு கூண்டினை உருவாக்கி உள்ளார். 16 வயதில் இருந்து 26 ஆண்டுகளாக புகைப்பிடித்து வரும் இப்ராஹிம் நாளொன்று 2 பாக்கெட் சிகரெட்டை புகைக்கும் பழக்கத்தைக் கொண்டவர். தன்னுடைய புகைப்பழக்கத்தை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் பயனில்லை. ஒரு கட்டத்தில் மோட்டார் பைக் ரைடர்ஸ் தலைகவசத்துடன் சுற்றுவதை பார்த்து புகைப்பழக்கத்தை நிறுத்த தன் தலைக்கே கூண்டினை தயாரித்து உள்ளார்.
முதலில் கூண்டிற்கான சாவி தன்னிடம் இருந்ததால் சில சமயங்களில் கூண்டினைத் திறந்து சிகரெட் பிடித்து உள்ளார். ஆகையால், கூண்டிற்கான சாவியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டார். தேவைப்படும் சமயத்தில் மட்டும் குடும்பத்தில் இருப்பவர்கள் கூண்டினை திறந்து விடுவர் ” என வெளியாகி இருக்கிறது.
துருக்கியைச் சேர்ந்த இப்ராஹிம் புகைப்பிடிப்பதை நிறுத்த தனக்கு தானே தலைக்கு கூண்டினை தயாரித்து மாட்டிக் கொண்டுள்ளார். அதற்கான சாவியை மட்டும் தன் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார். கணவனை திருத்த மனைவியின் யோசனை என சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. எனினும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்பது முற்றிலும் உண்மையே.
2013-ல் வெளியான செய்திகளை பிறகு இப்ராஹிம் தன் புகைப்பிடிப்பு பழக்கத்தில் திருந்தினாரா அல்லது அந்த கூண்டினை இன்றளவும் தலையில் மாட்டிக் கொண்டு சுற்றி வருகிறாரா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.