டி-ஷர்ட்டில் காதல் வசனம்: விசிக லோகோ, திருமாவளவன் படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பப்படும் புகைப்படம் !

பரவிய செய்தி

இப்படி ஒரு தலைமுறையை உருவாக்கி வச்சது தான் திருமாவளவன் சாதனை.. 

Twitter link | Archive twitter link

மதிப்பீடு

விளக்கம்

இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர் ஒருவரின் டி-ஷர்ட்டில் “ ஓடி வர நீ…! ரெடினா தூக்கிட்டுப் போய் தாலிகட்ட நானும் ரெடி …!” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.அதற்கு மேலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்திரை இருக்கிறது. அவரது பைக் நம்பர் பிளேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர். திருமாவளவனின் புகைப்படமும் இருக்கிறது.

Advertisement

Archive twitter link 

திருமாவளவன் இளைஞர்களைத் தவறாக உருவாக்கியுள்ளார் என்றும், இதுவே அவரது சாதனை என சமூக வலைத்தளங்களில் பாமக கட்சியினை சேர்ந்தவர்கள் உட்படப் பலரும் இப்படத்தை பரப்பி வருகின்றனர்.

Advertisement

உண்மை என்ன ?

அப்புகைப்படத்தில் உள்ள டி-ஷர்ட்டில் P.S.Dikkan என எழுதப்பட்டுள்ளது. அப்பெயரில் பேஸ்புக்கில் தேடினோம். PS Dikkan Thala என்ற பெயரில் அந்த பேஸ்புக் ஐடி உள்ளது. அவர் தருமபுரி மாவட்டம் என ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். அவரது நண்பர்கள் பட்டியலில் பாமக கட்சியை சேர்ந்தவர்களையும் அதிகம் பார்க்க முடிகிறது. 

மேலும், அவ்வண்டி எண்ணினை RTO vehicle information app-ல் தேடினோம். P.சரவணன் என்ற பெயரில் தருமபுரி RTO அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. P.சரவணன் என்ற பெயரினையே PS எனச் சுருக்கி வைத்துள்ளார்.

அப்புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடிய போது, 2021 மார்ச் மாதம் முதலே பாமகவை சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதைக் காண முடிகிறது. 

அதில் “ ஓடி வர நீ…! ரெடினா தூக்கிட்டுப் போய் தாலிகட்ட நானும் ரெடி …!” என்பது மட்டுமே  எழுதப்பட்டுள்ளது. அந்த டி-ஷர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்திரை இல்லை. அதே போல் அவ்வண்டியின் நம்பர் பிளேட்டில் திருமாவளவனின் புகைப்படமும் இல்லை. அம்மா, அப்பா என்ற வாசகத்துடன் வண்டியின் எண் மட்டுமே உள்ளது.

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக மார்ச் மாதம் தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டது. அதில் அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்” என்ற தலைப்பில் திருமண நிதி உதவி அளிப்பது பற்றிய கூறப்பட்டு இருந்தது.

அத்திட்டத்தின்படி, கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடராக அல்லது மலைவாழ் பழங்குடியினராக இருக்கும் நிலையில், அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் பணமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் அளிக்கப்படும்.

Facebook link 

திமுகவின் தேர்தல் அறிக்கையினையும், அந்த இளைஞரின் டி-ஷர்ட்டில் எழுதி இருந்த அவ்வாசகத்தினையும் சேர்த்து, 2021, மார்ச் மாதம் பாமக சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். பாமகவின் பிரச்சார புகைப்படத்திலும் அந்த டி-ஷர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்திரை இல்லை.

மார்ச் மாதத்திற்கு பிறகே, அந்த டி-ஷர்ட்டில் விடுதலை சிறுத்தைகளின் முத்திரையும், வண்டி நம்பர் பிளேட்டில் திருமாவளவனின் புகைப்படமும் எடிட் செய்து பரப்பி வருகின்றனர். 

பாமக நட்பு வட்டாரத்தில் உள்ள ஒருவரின் டி-ஷர்ட்டில் எழுதப்பட்டு இருந்த வசனத்தை, 2021 தேர்தல் பிரச்சாரத்திற்காக பாமகவினர் பயன்படுத்தி உள்ளனர். அதே புகைப்படத்தை தற்போது எடிட் செய்து, அந்த நபர் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர் எனத் தவறான தகவலினைப் பரப்பி வருகின்றனர்.

முடிவு: 

நம் தேடலில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர் ஒருவரின் டி-ஷர்ட்டில் காதல் வாசகத்திற்கு மேலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்திரையையும், வாகனத்தின் நம்பர் பிளேட்டில் திருமாவளவன் படத்தையும் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

கூடுதல் தகவல் : 

இது தொடர்பாக PS Dikkan என்பவரைத் தொடர்பு கொண்டு பரவக்கூடிய புகைப்படம் குறித்து விசாரித்தோம். அவர் கூறியதாவது, ” சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய புகைப்படத்தில் இருப்பது நான்தான். ஆனால், எனது டி-ஷர்ட்டில் “ஓடி வர நீ…! ரெடினா தூக்கிட்டுப் போய் தாலிகட்ட நானும் ரெடி” என்ற வாசகம் மட்டுமே உள்ளது.

நான் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவன். யாரோ சிலர் எனக்கு தெரியாமல் பின்னால் இருந்து புகைப்படம் எடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்திரை, திருமாவளவனின் புகைப்படத்தினை வைத்து எடிட் செய்து தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்.
இதனால் எனது வாகனத்தையும் விற்றுவிட்டேன். மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் ” தெரிவித்தார்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button