அரபு நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர் பெயர் “மாண்டஸ்” புயலுக்கு வைக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

மாண்டஸ் புயலின் பெயர் காரணம்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கடந்த 9ம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ‘மாண்டஸ்’ என்ற புயல் கரையைக் கடந்தது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மாண்டஸ் எனப் பெயர் வைத்துள்ளது. அப்பெயர் வைக்கக் காரணம் எனப் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பலரும் பரப்பி வருகின்றனர். 

அதில், “இன்று தமிழகம் வரும் புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா ? டாக்டர் அப்துல்லா அல் மாண்டஸ் என்ற அரபு காரரின் பெயர் தான் அது. யார் இவர் ? ஐக்கிய அமீரக அரபு நாட்டில் பிறந்த இந்த அப்துல்லா அல் மாண்டஸ் தான் இப்போது உலக நாடுகளின் வானியல் ஆய்வு அமைப்புகளின் தலைவர். BSc, MSc, PhD என வானிலை ஆராய்ச்சி தொடர்பாகவே பல நாடுகளில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது பெயரைத் தான் இப்போது தமிழ்நாட்டில் அடிக்கும் புயலுக்கு பெயராக வைத்துள்ளார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

பரப்பப்படும் புகைப்படத்தில் டாக்டர். அப்துல்லா அல் மாண்டஸ் என்பவர் பெயரும், அவர் ஐக்கிய அமீரக அரபு நாட்டை சேர்ந்தவர் என்றும், உலக நாடுகளின் வானிலை ஆய்வு அமைப்புகளின் தலைவர் அவர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, உலக வானிலை ஆய்வு அமைப்பின் (World Meteorological Organization – WMO) தலைவரின் பெயர் குறித்து அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடினோம்.  அவ்வமைப்பின் பொதுச் செயலாளராக ஃபின்னிஷ் நாட்டினை சேர்ந்த பெட்டேரி தாலஸ் (Petteri Taalas) என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் அவ்வமைப்பில் உள்ள துணை பொதுச் செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளிலும் அப்துல்லா அல் மாண்டஸ் என்பவரின் பெயர்  இடம்பெறவில்லை.

மேலும், அப்பெயரினை இணையத்தில் தேடியதில், அப்துல்லா அல் மாண்டஸ் WMO-வின் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதிநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ‘அப்துல்லா அஹமத்’ என்பது அவரது முதன்மை பெயர் என்றும், ‘அல் மாண்டஸ்’ என்பது குடும்ப பெயர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பேஸ்புக் பக்கத்தில் Executive Director at National Center for Meteorology and Seismology” எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அப்துல்லா அல் மாண்டஸ்  என்பவர் WMO -வின் உறுப்பினர் மட்டுமே, தலைவர் அல்ல என அறிய முடிகிறது.

Mandous என்பதற்கான வார்த்தையின் அர்த்தம் குறித்து இணையத்தில் தேடினோம். மாண்டஸ் என்ற அரபு பெயருக்கு ‘புதையல் பெட்டி’ (Treasure box) என்பது பொருள். 

புயலுக்குப் பெயர் வைப்பது யார் ? 

புயலின் போக்கைக் கண்காணிக்கவும், அதனைக் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வசதியாகவும், புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் 2004ம் ஆண்டு தொடங்கியது. 2020ல் மாண்டஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருந்துள்ளது. 

உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய – பசிபிக் பகுதிக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் 13 நாடுகள் உள்ளன. அந்நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் குறித்து ஆலோசனை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆய்வு ஆராய்ச்சி துறை விளங்குகிறது. 

அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், தாய்லாந்து, இரான், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் புயலுக்குப் பெயர் வைப்பதற்காக முன்கூட்டியே தலா 13 பெயர்கள் வீதம் 169 பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளனர். ஆங்கில அகர வரிசைப்படி அப்பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புயலுக்கான பெயர் வைக்கப்படுகிறது.

பெயருக்கான நிபந்தனைகள் :

புயலுக்காகப் பரிந்துரைக்கப்படும் பெயர்; அரசியல் பிரபலம், கலாச்சாரம், மத நம்பிக்கை, இனம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கக் கூடாது. பெயர் உச்சரிக்க எளிமையாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 8 எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும்.

எந்த நாட்டு மக்களின் உணர்வையும் காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பது போன்ற விதிமுறைகள் உள்ளன. பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு. மேலும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. 

இந்தியா பரிந்துரைத்த பெயர்களில் நீர், முரசு என்ற தமிழ்ப் பெயர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், கடந்த 9ம் தேதி தமிழ்நாட்டில் கரையைக் கடந்த புயலுக்கு மாண்டஸ் என  டாக்டர்.அப்துல்லா அல் மாண்டஸ் எனும் அரபுக்காரரின் பெயரிலிருந்தே வைக்கப்பட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. மாண்டஸ் என்பதற்குப் புதையல் பெட்டி என்பதே அரபு மொழியில் பொருள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader