This article is from Jul 03, 2019

சிறுமியை வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு இஸ்லாமிய அமைப்பு உதவியதா ?

பரவிய செய்தி

திவ்யாவின் தந்தை செய்தியாளர்களிடம் சொன்னது நாங்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வந்தோம் . என் 7 வயது மகளை இர்பான் என்ற நாய் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து வீசி உள்ளான். என்னுடன் ஆதரவாக நிற்காவிட்டாலும் பரவாயில்லை ? அவனை ஜாமினில் எடுப்பதற்கு தெருவில் உள்ள இஸ்லாமியர்களிடம் பணம் வசூலுத்துக் கொண்டுள்ளனர். அவர்களும் பணம் கொடுக்கின்றனர். இது தான் மனிதாபிமானமா ?

மதிப்பீடு

சுருக்கம்

மன்த்சாவூரில் 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக மனு ஒன்றை அளித்து இருந்தனர். சம்பவம் குறித்து விரிவாக அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விளக்கம்

கடந்த 2018 ஜூன் 26-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் மன்த்சவூர்(Mandsaur) பகுதியில் பள்ளி விட்ட பிறகு பெற்றோருக்காக காத்திருந்த 7 வயது சிறுமியை இர்பான் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் கடத்திச் சென்று யாரும் இல்லாத இடத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, சிறுமியின் கழுத்தை அறுத்து தூக்கி வீசி விட்டு சென்றுள்ளர்.

பள்ளிக்கு அருகே இருந்த பகுதியில் இரவு நேரத்தில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சிறுமி இந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுமி காப்பாற்றப்பட்டார். இது தொடர்பான விசாரணையில் சிசிடிவி காட்சிகள், சாட்சியங்கள் மூலம் இர்பான் மற்றும் ஆசிப் என்ற இரு குற்றவாளியையும் காவல்துறை கைது செய்தனர்.

சிறுமியின் மருத்துவ அறிக்கையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது, மேலும் குற்றவாளிகளின் டி.என்.ஏ மாதிரிகளும் ஒத்துப் போக்கியதால் இருவரின் மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒருங்கிணைந்த முஸ்லீம் குழுவான சம்பூர்ண முஸ்லீம் சமாஜ் உறுப்பினர்கள் சிறுமிக்கு நடத்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்தத்தோடு, குழந்தைகள் மற்றும் பெண்கள் தைரியமாக நடமாட உடனடியாக நீதி வழங்க வேண்டும் மற்றும் இவ்வாறான தவறான செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என அம்மாநில ஆளுநர், அம்மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அளித்தனர்.

நீமுச் மாவட்டத்தின் Waqf Board-ன் முன்னாள் தலைவராக இருந்த பாபு சலீம், அப்பகுதியில் வாழும் முஸ்லீம் மக்கள் இரு பரிந்துரை வைப்பதாக கூறினார். ஒன்று இர்பான் உடனடியாக தூக்கிலிடப்பட்ட வேண்டும், இரண்டாவது அவனின் உடலை புதைக்க இடம் அளிக்க கூடாது என firstpost செய்திக்கு தெரிவித்து இருந்தார். சிறுமியின் தந்தை, முஸ்லீம் அமைப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டுவதாக கூறியதாக எங்கும் ஆதாரங்கள் இல்லை.

” ஆகஸ்ட் 2018-ல் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் இர்பான் மற்றும் ஆசிப் ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிபதி நிஷா குப்தா மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார் “.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு வீடு, சிறுமியின் தந்தைக்கு கடை மற்றும் சிறுமியின் கல்வி செலவு உள்ளிட்டவையை அம்மாநில அரசு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால், தற்பொழுது அவர்கள் வசித்து வந்த வீட்டை காலி செய்யும்படி அறிவித்த காரணத்தினால், கடைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார்கள்.

முடிவு :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து ஓராண்டு ஆகிய நிலையில் தற்பொழுது தவறான செய்தியுடன் பரப்பி வருகிறார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக முஸ்லீம் அமைப்புகள் பணம் திரட்டுவதாக கூறுவதில் உண்மை இல்லை. குற்றவாளிகளுக்கு எதிரான மனுவை முஸ்லீம் அமைப்பினர் ஆளுநருக்கு அனுப்பி உள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் முஸ்லீம் மக்களும் குற்றவாளிக்கு எதிராக இருப்பதாக இர்பான் வசித்த வார்டின் கவுன்சிலர் ஹனீப் ஷேக் தெரிவித்து இருந்தார். ஆக, பணமும் வழங்கவில்லை.

மேலும் படிக்க : மத கலவரம் உள்பட போலிச் செய்திகளை வெளியிடும் TNnews24 இணையதளம் !

இதற்கு முன்பாக திருபுவனம் ராமலிங்கம் கொலை சம்பவத்தின் போதும் முஸ்லீம் ஜமாத் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டுவதாக வதந்தியை பரப்பினர். தற்பொழுதும் அதேபோன்று வதந்தியை பரப்பி மதரீதியான வன்மத்தை உருவாக்க முனைகின்றனர்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader