ம.பி-யில் பாலியல் வன்கொடுமை நடந்த 7 வயது சிறுமியின் புகைப்படமா ?

பரவிய செய்தி
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வாயிலில் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்த 7 வயது சிறுமி கற்பழிப்பு. நாடு முழுக்க கண்டனம் இல்லை, போஸ்டர் இல்லை, போராட்டம் இல்லை, மீம்ஸ் இல்லை. ஏனெனில், கற்பழித்தவன் முகமது இர்பான். பாதிக்கப்பட்டது ஹிந்து குழந்தை.
மதிப்பீடு
சுருக்கம்
மத்தியப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிகிச்சை பெறுவதாக தவறான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
விளக்கம்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தையின் புகைப்படத்துடன், மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வாயிலில் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்த 7 வயது சிறுமி கற்பழிப்பு. நாடு முழுக்க கண்டனம் இல்லை, போஸ்டர் இல்லை, போராட்டம் இல்லை, மீம்ஸ் இல்லை. ஏனெனில், கற்பழித்தவன் முகமது இர்பான். பாதிக்கப்பட்டது ஹிந்து குழந்தை என எழுதப்பட்ட மீம் ஆனது ” இந்து மதத்தை பற்றி அறிவோம் ” எனும் முகநூல் குழுவில் பகிரப்பட்டு இருந்தது.
குழந்தையின் படம் :
சிகிச்சை பெறும் குழந்தையை பற்றி ஆராய்வதற்கு புகைப்படம் கொண்டு தேடுகையில் செய்தி தளங்களில் தகவல்கள் ஏதும் கிடைக்க பெறவில்லை. மாறாக, ஹிந்தி பதிவு ஒன்றில் ” உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தையின் உயிரை காப்பாற்றுங்கள். அதற்கு நீங்கள் பண உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை. லைக் செய்தால் 1ரூ, கமெண்ட் செய்தால் 50ரூ, ஷேர் செய்தால் 500ரூ ஃபேஸ்புக் வழங்கும் ” என ஷேர்சர்ட் பதிவு ஒன்று பரவி இருந்தது.
இதன் அடிப்படையில் பரவும் மீம் பதிவில் இருக்கும் குழந்தையின் புகைப்படம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்டது என்றும், பாலியல் வன்புணர்வு செய்திக்கும் குழந்தைக்கும் தொடர்பில்லை என அறிய முடிகிறது.
மத்தியப் பிரதேச சிறுமி :
புகைப்படம் தவறு என நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் செய்தி உண்மையே ! கடந்த 2018 ஜூன் மாதம் மத்தியப்பிரதேசத்தில் மன்த்சவூர் எனும் பகுதியில் பள்ளியின் வாசலில் தனது தந்தைக்காக காத்திருந்த 7 வயது சிறுமியை இர்பான் மற்றும் ஆசிப் என்ற இருவர் கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்து, குழந்தையின் கழுத்தை அறுத்து தூக்கி வீசி உள்ளனர்.
விரிவாக படிக்க : சிறுமியை வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு இஸ்லாமிய அமைப்பு உதவியதா ?
எனினும், அக்குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றி விட்டனர். சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் இர்பான் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
” ஆகஸ்ட் 2018-ல் இந்த வழக்கின் நீதிமன்ற தீர்ப்பில் குற்றவாளிகள் இர்பான் மற்றும் ஆசிப் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது ”
முடிவு :
ஓராண்டிற்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், அதனுடன் தவறான தகவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தை என தவறான புகைப்படங்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லீம்கள் நிதி திரட்டுவதாக வதந்திகள் என தவறான தகவல்களை பரப்பி மத வன்மத்தை விதைக்கின்றனர். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் காணும் செய்திகள் அதிகம் மதம் சார்ந்து கூறுவதால் முடிந்தவரை செய்தி உண்மையா என அறிந்து பகிருங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.