This article is from Jan 24, 2020

மங்களூர் விமான நிலையத்தில் குண்டு வைத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைதா ?

பரவிய செய்தி

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆதித்யராவ் கைது. ஏற்கனவே, இருமுறை பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான நபர்.

Twitter link | archived link 

மதிப்பீடு

சுருக்கம்

மங்களூர் விமான நிலையத்தில் குண்டு வைத்த சம்பவம் தொடர்பாக சரணடைந்த நபரையும் குறித்தும், அதனுடன் பரவும் தவறான நபர் குறித்தும், கேரளாவில் வெடிகுண்டை வீசிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர் குறித்தும் விரிவாக படிக்க.

விளக்கம்

மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆதித்யராவ் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

Facebook link | archived link 

Facebook link | archived link 

திமுக ஐடி விங் மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபரின் புகைப்படத்தை மட்டும் காண்பித்து ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் எனப் பதிவிட்டு உள்ளனர். மேலும் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கைதான நபரின் புகைப்படத்துடன் பாஜகக் கட்சியைச் சேர்ந்தவரும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்தை இணைத்து, இவர் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஆகையால், இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பதிவிட தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த பையில் வெடிகுண்டு இருப்பதை சோதனையின் போது போலீசார் கைப்பற்றினர். இந்த வெடிகுண்டை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தது யார் என கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆராய்ந்து பார்த்ததில், ஆட்டோவில் வந்த மர்ம நபர் வெடிகுண்டு பையை வைத்து விட்டு சென்றது பதிவாகி இருந்தது.

இதையடுத்து, கேமராவில் பதிவாகி இருந்த நபர் குறித்து தேடுதலை போலீசார் தீவிரப்படுத்தினர். போலீசார் விசாரணை முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் பொழுதே, ஆதித்யா ராவ் என்பவர் பெங்களூர் அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் மற்றும் எம்பிஏ பட்டதாரியான ஆதித்யாராவ் இதற்கு முன்பாக 2018-ல் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்திற்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார்.

செய்திகளில், விமான நிலையத்திற்கு குண்டு வைத்த சம்பவம் தொடர்பாக சரண் அடைந்த ஆதித்யாராவ் பாஜக கட்சியையோ அல்லது ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், விமான நிலையத்திற்கு குண்டு வைத்தவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என மற்றொருவரின் புகைப்படம் தவறாக இணைக்கப்பட்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது. அவரின் பெயர் சந்தீப் லோபோ.

Facebook link | archived link 

புத்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், பாஜகவின் தொழில்நுட்ப பிரிவின் தக்சினா  கன்னடா பிரிவில் பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான சந்தீப் லோபோ தன்னுடைய முகநூல் பக்கத்தில், தன்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தவறான செய்திகள் பரவி வருவதாக போலீசாரிடம் அளித்த புகாரினை புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தார்.  பாஜக தக்சினா கன்னடா  முகநூல் பக்கம் புகார் அறிக்கை மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.

மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யாராவ் உடைய புகைப்படத்துடன், பாஜகவைச் சேர்ந்த சந்தீப் லோபோ புகைப்படத்தையும் இணைத்து தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். திமுக ஐடி விங் பதிவிட்டது போன்று ஆதித்யாராவ் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என எங்கும் வெளியாகவில்லை. ஆதாரமில்லாத தவறான தகவலை பரப்பி உள்ளார்கள்.

கேரளா சம்பவம் : 

ஜனவரி 21-ம் தேதி கேரளாவின் கண்ணூர் ஆர்எஸ்எஸ் அலுவலகம் அருகே இருந்த காவல்துறை சோதனை சாவடியின் மீது வெடிகுண்டை வீசிய பிரபேஷ் என்ற ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். ஜனவரி 16-ம் தேதி இரவில் காவல்துறை சோதனை சாவடி அருகே குண்டு வீசிய நபரின் செயல் சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளதை டைம்ஸ் நவ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி உள்ளன.

Youtube link | archived link 

” ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் முன்பாக இருந்த போலீஸ் சோதனை சாவடியில் ஹர்லிங்க் ஸ்டீல் பாமை பிரபேஷ் வீசியதாக போலீசார் தெரிவித்து உள்ளார்கள். சிசிடிவி காட்சியின் மூலம் பிரபேஷை கோவையில் கைது செய்து உள்ளனர். அவரின் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது “.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக கைதாகிய ஆதித்யாராவ் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என திமுக ஐடி விங் தவறான தகவலை பரப்பி உள்ளது. அதேபோல், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆதித்யாராவ் என பிற மொழிகளில் பரவிய மற்றொரு நபர் சந்தீப் லோபோ ஆவார்.

இதற்கிடையில், கேரளாவில் போலீஸ் சோதனை சாவடியில் குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. இவற்றையெல்லாம், தவறாக புரிந்து கொண்டு தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader