மாணிக் சர்க்காரின் மனைவி வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணமா ?

பரவிய செய்தி
ஏழை முதல்வரான மாணிக் சர்க்காரின் மனைவியின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கான பணம் எப்படி வந்தது.
மதிப்பீடு
சுருக்கம்
மாணிக் சர்க்காரின் மனைவியான பாஞ்சாலி பட்டச்சார்ஜி ஓய்வு பெற்ற மத்திய அரசின் ஊழியர் ஆவார். தாம் ஓய்வு பெறும் போது வழங்கப்பட்ட பணத்தை வங்கி கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாக வைத்துள்ளார்.
விளக்கம்
1993 ஆம் ஆண்டில் திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற மாணிக் சர்க்கார் தொடர்ந்து 20 ஆண்டு காலம் மிகவும் எளிமையான முதல்வராக வாழ்ந்து வந்துள்ளார்.
மாணிக் சர்க்கார் தனது தேர்தல் வாக்குமூலத்தில், கிருஷ்ணாநகரில் தனக்கும் தன் தங்கை மற்றும் சகோதரர்களுக்கு சொந்தமான நிலத்தில் 0.0118 ஏக்கர் தமது பங்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சொந்த வீடு, நிலம் மற்றும் பிற சொத்துக்கள் இன்றி வாழ்ந்து வரும் மிகவும் எளிமையானவர். மேலும், இதுவரை வருமானவரி விவர அறிக்கை தாக்கல் செய்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கத்தின்படி, முதல்வரின் ஊதியமாக கிடைக்கும் 26,315 ரூபாயை முழுவதுமாக கட்சிக்கு வழங்கி விடுகிறார். கட்சியின் சார்பில் சலுகையாக வழங்கப்படும் மாதம் 9,700 ரூபாயில் தான் தனது வாழக்கையை நடத்தி வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஹரிபதா தாஸ் தெரிவித்துள்ளார்.
” 2018-ம் ஆண்டு தேர்தலின் போது மாணிக் சர்க்கார் அளித்த வாக்குமூலத்தில், கை இருப்பு தொகை ரூ.1, 520 மற்றும் அகர்தலாவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் இருப்பு தொகையாக ரூ.2,410 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் “.
எளிமையான மனிதராக வாழ்ந்து வரும் மாணிக் சர்க்கார் தனது மனைவியை விட ஏழ்மையானவர் என்பதை அவரின் தேர்தல் வாக்குமூலத்தின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் இத்தகைய எளிய மனிதரின் மனைவியின் வங்கி கணக்கில் எப்படி லட்சக்கணக்கில் பணம் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வலம் வருகிறது.
” மாணிக் சர்க்காரின் மனைவியான பாஞ்சாலி பட்டச்சார்ஜி ஓய்வு பெற்ற மத்திய அரசின் ஊழியர் ஆவார். சென்ட்ரல் சோசியல் வெல்ஃபர் போர்டில் பணியாற்றி வந்தனர். 2011 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற போது கிடைத்த ஓய்வூதிய பணத்தை வங்கி கணக்குகளில் சிறு சிறு தொகையாக பிரித்து நிரந்தர வைப்பு தொகையாக வைத்துள்ளார்.
2018-ம் ஆண்டின் மாணிக் சர்க்காரின் தேர்தல் வாக்குமூலத்தில், தன் மனைவியின் கையில் 20,140 ரூபாய் பணமும், எஸ்.பி வங்கி கணக்குகளில் மொத்தம் 12,15,714 ரூபாய் சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு தொகையாக இருக்கிறது. இவருக்கு தோரயமாக 21 லட்சம் மதிப்பில் அசையாத சொத்தும், 60,000 மதிப்பில் 20 கிராம் தங்கம் இருப்பதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவர் அரசு வழங்கும் கார்களை பயன்படுத்தாமல் பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் மற்றும் இவர்களை சார்ந்தவர்கள் என்று யாரும் இல்லை. இவ்விருவரின் வாழ்க்கை முறை, மாணிக் சர்க்காரின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர் கட்சியினரும் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
எளிமையான அரசியல் தலைவருடைய வங்கி கணக்கில் லட்சக்கணக்கான பணம் எவ்வாறு வந்தது என்று பரவியவை, 2013-ல் மாணிக் சர்க்கார் தேர்தல் வாக்குமூலத்தில் அளித்த விவரங்கள் ஆகும். 2018-ல் அளித்த வாக்குமூலத்தில் தனது மனைவியின் சொத்து விவரங்கள் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனினும், அவையனைத்தும் பாஞ்சாலி பட்டச்சார்ஜியின் அரசு பணியின் ஓய்வில் கிடைத்த பணம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு வீட்டை காலி செய்துள்ளார் மாணிக் சர்க்கார். சொந்தமாக வீடு ஏதும் இல்லை. அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனால், அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மனைவியுடன் தங்கியுள்ளார். இதையறிந்த திரிபுராவின் தற்போதைய முதல்வர், பதவி விலகிய போதிலும் மாணிக் சர்க்கார் ஒரு எதிர் கட்சி தலைவர் ஆவார். எனவே அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியராக வேலை செய்து நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தை கூட கேள்விக்கு உட்படுத்துவது அநாகரிகமானது. ஒரு நேர்மையானவரை எப்படியாவது கறைபடிந்த கரம் என நிரூபிக்க முயற்சிப்பது அபத்தம்.
உடையும் சிலை, வெடிக்கும் வன்முறை !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.