மணிப்பூரில் 3 பேர் தலையை வெட்டிக் கொலை செய்யும் காட்சி என வாட்சாப்பில் பரவும் மெக்சிகோ வீடியோ!

பரவிய செய்தி
மணிப்பூரில் மூன்று ஆண்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதாக வாட்சாப்பில் பரவுகிறது. குறிப்பு: கொலை செய்யும் வீடியோ என்பதால் வீடியோவை பதிவிடவில்லை.
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமீப காலமாகவே மணிப்பூர் தொடர்பான பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதைப் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் தற்போது மணிப்பூரில் மூன்று ஆண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று வாட்சாப்பில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் துண்டு துண்டாக உடல்கள் சிதறிக் கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை, நமது யூடர்ன் வாட்சாப் எண்ணிற்கும் வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராயச் சொல்லி வாசகர்கள் அனுப்பி இருந்தனர்.உண்மை என்ன?
வாட்சாப்பில் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ மணிப்பூரில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது.
Gorecenter எனும் இணையதளத்தில், “3 பேரை கொன்று குவிக்கும் மக்கள் கூட்டம்” என்ற தலைப்பில் கடந்த 2022 டிசம்பர் 18 அன்று பரவி வரும் வீடியோவை பதிவிட்டு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் “போதைப்பொருள் கடத்தல் குழு உறுப்பினர்கள் சிலர், ஏற்கனவே இறந்த ஆண்களின் 3 உடல்களைத் தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் இந்த வீடியோவில் சிரிப்பதைக் கேட்க முடிகிறது, எனவே அவர்கள் வெளிப்படையாக இந்தச் செயலை ரசிக்கிறார்கள்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, இந்த வீடியோ தொடர்பான மற்றொரு செய்தியையும் இதே இணையதளப் பக்கத்தில் காண முடிந்தது. அதில் “மூன்று பேர் சித்திரவதை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டனர்” என்ற தலைப்புடன் 2022 டிசம்பர் 15 அன்று வெளியிடப்பட்ட இந்த செய்திக்குறிப்பில் வீடியோவில் இடம்பெற்றுள்ள அதே காட்சிகள் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
அதில் “மெக்சிகோவைச் சேர்ந்த மூன்று ஆண்களான இவர்கள் – ஒரு விரோதக் குழுவைச் சேர்ந்தவர்கள் (members of a hostile cartel) – இவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டு துண்டுகளாக வெட்டப்பட்டனர். இதையடுத்து, அவர்களின் உடல்கள் சாலையோரம் எச்சரிக்கை செய்தியுடன் விடப்பட்டுள்ளது.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மணிப்பூரில் கிறிஸ்தவ பெண்ணை ஆர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்யும் காட்சி எனப் பரவும் பிரேசில் வீடியோ!
மேலும் படிக்க: மணிப்பூரில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடிப்பதாகப் பரவும் மத்தியப் பிரதேச வீடியோ !
முடிவு:
நம் தேடலில், மணிப்பூரில் மூன்று ஆண்களின் தலையை வெட்டிக் கொல்வதாக வாட்சாப்பில் பரவும் வீடியோ மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல, மெக்சிகோவைச் சேர்ந்தது என்பதையும் அறிய முடிகிறது.