மணிப்பூரில் 52 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக.. அண்ணாமலையின் அடுத்த பொய் !

பரவிய செய்தி
மணிப்பூரில் 52 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். 2013ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவின் வாக்கு 0.5 சதவீதம். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 52 சதவீதம். – தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதின் ஒரு பகுதியைத் தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் முழு வீடியோ Kolahalas TV என்ற youtubeல் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் மணிப்பூரில் பாஜகவின் வாக்கு சதவீதத்தினை பற்றி சில தரவுகளை குறிப்பிடுகிறார்.
"உபியில் பாஜக ஜெயித்தால் கங்கையில் குதித்தி விடுவேன் … என்று கூறிய ஜர்னலிஸ்ட்…
எந்த ஏஸி ரூம்ல உட்கார்ந்து என்ன யோசிக்கிறார்கள்…".கள நிலவரம் மாறிவிட்டது, மக்கள் பாஜகவின் ஆளுமையை விரும்புகிறார்கள், தமிழகத்தில் 39தொகுதியிலும் பாஜக வெல்லும்"
-மாநில தலைவர்
திரு. @annamalai_k pic.twitter.com/45E5uO7uEI— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 9, 2022
அவர் பேசியது: பாஜகவைச் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்கிறார்கள். மணிப்பூரில் 52 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அது ஒரு கிறிஸ்தவ மாநிலம். அங்கு 2013ல் 0.5 சதவீதமாக இருந்த பாஜவின் வாக்கு சதவீதம், 9 வருடத்தில் 52 சதவீதமாகியுள்ளது எனப் பேசியுள்ளார்.
மேலும், பத்திரிகையாளர் ராணா அய்யூப் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போதுதான் விடுதலையாகி உள்ளதாக அண்ணாமலை குறிப்பிடுகிறார்.
உண்மை என்ன ?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மணிப்பூர் பற்றியும், அங்கு பாஜக பெற்ற வாக்கு சதவீதம் பற்றியும் பேசியது குறித்து இணையத்தில் தேடினோம்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சம எண்ணிக்கையிலேயே உள்ளனர். அப்புள்ளி விவரத்தின் படி, இந்துக்கள் – 41.39 சதவீதமும், கிறிஸ்தவர்கள் – 41.29 சதவீதமும் உள்ளனர். மீதமுள்ள 17.32 சதவீதம் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் என பல்வேறு மதத்தினர் உள்ளனர்.
இத்தரவிலிருந்து மணிப்பூரில் 52 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் என அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது தவறானது என்பதை அறிய முடிகிறது.

மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு 2022ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 32 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
2022 தேர்தலில் ஒட்டுமொத்தமாக பாஜக 37.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல 2012ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக 2.12 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஆனால், அண்ணாமலை 2013ல் 0.5 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக 9 வருடங்களுக்குப் பிறகு 52 சதவீதம் வாக்குகளைப் பெற்றதாகத் தவறான தகவலினை பேசியுள்ளார்.
மேலும், 2002 கால கட்டத்தில் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்போது குஜராத்தில் நடைபெற்ற கலவரம் பற்றி “குஜராத் கோப்புகள்” என்ற புத்தகத்தை ராணா அய்யூப் எழுதியுள்ளார்.
ராணா அய்யூப், கொரோனா காலத்தில் குடிசை பகுதி மக்களுக்கு உதவி செய்வதற்காக Ketto இணையதளத்தின் மூலமாக நிதி திரட்டினார். அதில் ரூ.2.69 கோடி வசூலானது. அப்பணத்தினை அவர் வசூல் செய்த காரணத்திற்காக பயன்படுத்தாமல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவர் மீது வழக்குப் பதிவு செய்தது குறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் கைது செய்யப்பட்டு விடுதலையாகி உள்ளதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.
மேலும் படிக்க : கோவை கார் வெடிப்பு வழக்குப் பதிவு பற்றி அண்ணாமலை சொன்ன பொய் !
மேலும் படிக்க : உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு
இதற்கு முன்னதாக அண்ணாமலை கோவை கார் வெடிப்பில் NIA வழக்கு பதிவு செய்தது தொடர்பாகவும், தமிழ் நாடு உளவுத்துறையில் உயர் பதவிகளில் அதிகப்படியாக கிறிஸ்தவ மதத்தினை சார்தவர்கள் உள்ளனர் என பொய்யான தகவல்களை பேசி இருந்தார். அவை குறித்து யூ டர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், 2022ல் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 52 சதவீதம் வாக்கு பெற்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது உண்மையல்ல. 2022 மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக 37.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.