மணிப்பூரில் கிறிஸ்தவ பெண்ணை ஆர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்யும் காட்சி எனப் பரவும் பிரேசில் வீடியோ!

பரவிய செய்தி
ஒரு கிறிஸ்தவ பெண்ணை RSS கும்பல் கொடூரமாக கொலை செய்யும் வீடியோ. குறிப்பு: கொலை செய்யும் வீடியோ என்பதால் வீடியோவை பதிவிடவில்லை.
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், காவல்துறையானது சம்பவம் நடந்த 77 நாட்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி ஹீரும் ஹேரா தாஸ் (32) என்பதை கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் மணிப்பூரில் கிறிஸ்தவப் பெண் ஒருவர் ஆர்எஸ்எஸ் கும்பலால் கொலை செய்யப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கை, வாய் கட்டப்பட்டு உள்ள பெண்ணின் தலையில் பாறையை போட்டும், மரக்கோடரியால் அடித்தும் கொலை செய்வது போன்றும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீஃபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2020-இல் இருந்தே இந்தியாவில் நடந்தது என்று கூறி சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
இந்த வீடியோவில் உள்ள பெண் அணிந்திருக்கும் ஆடை Fortaleza Esporte Clube என்ற பிரேசிலியன் கால்பந்தாட்ட குழுவின் அதிகாரப்பூர்வ ஜெர்சி என்பதை அறிய முடிந்தது.
மேலும், வீடியோவில் இருக்கும் பெண் 23 வயதான தலியா டோரஸ் டி சௌஸா (Thália Torres de Souza) என்பதை Documentingreality வெளியிட்டுள்ள புகைப்படங்களின் மூலமும் உறுதிப்படுத்த முடிந்தது. இவர் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல. பிரேசில் நாட்டை சேர்ந்தவர்.
Sobralagora என்ற ஊடகம் கடந்த 2020 செப்டம்பர் 02 அன்று வெளியிட்ட செய்தியில், “2020 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சீரா (Ceará) பகுதியில் 17 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில், மாநிலத்தில் ஏற்கனவே 228 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் ” எனக் கூறப்பட்டு உள்ளது.
Hoodsite எனும் இணையதளத்திலும் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரேசில் நாட்டில் நிகழ்ந்ததாகக் கூறி இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க: மலேசிய போலீசில் பணியாற்றும் தமிழ் பெண் கொலை என பரவும் வாட்ஸ் அப் வதந்தி !
கடந்த 2020-லும் இதே வீடியோ மலேசியாவில் உள்ள ஒரு தமிழ் பெண் கொல்லப்பட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறாக பரவி வந்தது. அப்போதும் இது குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மேலும் படிக்க : மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் கைதானவர் ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பதாகப் பரவும் தவறான தகவல் !
முடிவு :
நம் தேடலில், மணிப்பூரில் கிறிஸ்தவப் பெண் ஒருவரை ஆர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்யும் காட்சி எனப் பரவி வரும் வீடியோ தவறானவை. இந்த வீடியோ கடந்த 2020-ல் பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.