மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !

பரவிய செய்தி
மணிப்பூரில் உச்ச கட்ட மதவெறி வன்முறை மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை வன்முறையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்ட நிகழ்வு மாற்று மதத்தில் பிறந்தது அந்த பெண் செய்த குற்றமா வாக்குவங்கிக்காகவும் உங்களுடைய பதவி பல உயிர்களை கொல்லாதீர்கள்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், தற்போது முதலமைச்சர் என் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் பழங்குடியினரல்லாத மெய்தியினருக்கு (Meetei or Meitei) பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கப்பட போவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து பல கலவரங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆயுதமேந்திய ஒரு கும்பல் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு குக்கி கிறிஸ்தவப் பெண்ணை சித்திரவதை செய்து பின்னர் சாலையின் நடுவில் சுட்டுக் கொன்றதைக் காட்டும் 2:20 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவலாகப் பரவி வருகிறது.
இந்திய ஒன்றியத்தின் மிகப்பெரிய கொடுங்கோலன் ஆட்சியில் மணிப்பூரில் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் நடுரோட்டில் வைத்து சுடும் காணொளி சிறுபான்மை இனத்தவர்களை கொல்வதை ஆதரித்து
பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?? @thirumaofficial @VanniKural @VckBalaji @aloor_ShaNavas @U2Brutus_off pic.twitter.com/Pt7koZVVH1— வீ.ம.முதல்வன் விசிக 💙❤️🖤 (@KummarPram) June 19, 2023
மேலும் குவாஹாட்டியில் உள்ள அமர் அசோம் என்ற அசாம் செய்தித்தாளும் சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறிப்பிடும் வைரலான வீடியோவின் படத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி தாளை மொழிபெயர்ப்பு செய்து பார்த்ததில், அதில் “மணிப்பூர் அழிந்தது! தெருவில் ஒரு இளம்பெண் சுட்டுக்கொலை” என்னும் தலைப்பில் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவை ஹிந்துஸ்தான் டைம்ஸின் மூத்த உதவி ஆசிரியரான உத்பல் பராஷரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காண முடிந்தது.
அதில் அமர் அசோம் செய்திதாளில் வெளிவந்துள்ள அந்த சிறுமியின் வீடியோ தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரண்டு பழைய செய்திக் கட்டுரையின் ஸ்கிரீன்ஷாட்களை குறிப்பிட்டு “இன்றைய அமர் அசோம் செய்தித்தாள் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பான செய்தி, ஆறு மாதத்திற்கு முன்பு மியான்மரில் நடந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Manipur: Today’s Amar Asom uses a six-month-old photo from a video of a woman killed on the road in Myanmar and carries a news report claiming the incident happened in Manipur. #Irresponsible #AmarAsom #Manipur #Myanmar pic.twitter.com/JruR7lKGTC
— Utpal Parashar (@utpal_parashar) June 19, 2023
இது குறித்து மேலும் தேடியதில், இந்த வீடியோ தொடர்பாக டிசம்பர் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு கட்டுரைகளை இர்ராவதி மற்றும் மிஸ்ஸிமா ஆகிய இணையதளங்களில் காண முடிந்தது. அதில், “இராணுவ ஆட்சிக் குழுவின் தகவலறிந்த மற்றும் பியூ சா ஹ்டீ போராளியாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண், ஆயுதம் ஏந்திய பலரால் சாலையில் அடித்துக் கொல்லப்பட்டதைக் காட்டுகிறது.
அந்த பெண் ஆய் மார் துன், வயது 24 (ஆசிரியை) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்ளூர் PDF உறுப்பினர்களை கைது செய்து கொல்ல வழிவகுத்த இராணுவ ஆட்சிக்குழுவிற்கு தகவல் கொடுத்ததற்காக ஜூன் மாதம் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து சிஎன்ஐ மியான்மர் வெளியிட்டுள்ள செய்தியில், “இராணுவ நெறிமுறைகள் மற்றும் விதிகளின்படி இந்த சம்பவம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதால், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதில் ஈடுபட்டவர்கள் மீது திறம்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று National Unity Government (NUG) அறிக்கை வெளியிட்டுள்ளது. மியன்மாரில் சகாயிங் பிராந்தியத்தின் தமுவில் ஒரு தெருவில் பெண் படுகொலை செய்யப்பட்டதை விசாரித்து, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள NUG அரசாங்கத்தின் கேபினெட் அமைச்சரான யு ஆங் மியோ மின், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மட்டுமன்றி, உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து Ludunwayoo இணையதளம் 2022 டிசம்பர் 04 அன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: மணிப்பூர் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு எனப் பரவும் கேம் வீடியோ !
மேலும் படிக்க: ‘என் மாநிலம் பற்றி எரிகிறது’ : மேரி கோம்.. மணிப்பூரில் தொடரும் கலவரங்கள்… காரணம் இது தான்!
முடிவு:
நம் தேடலில், மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ தொடர்பான தகவல்கள் தவறானவை. மேலும் இந்த வீடியோ மணிப்பூரில் எடுக்கப்பட்டது அல்ல. 2022 டிசம்பரின் போது மியான்மரில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ.