மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சியினரிடம் ‘மோடி எங்களை பார்த்துக் கொள்வார்’ என மெய்தியினப் பெண் கூறியதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி
அனைத்து திராவிட தமிழ் போராளிகளே, தூக்கில் தொங்குங்கள்.. இத்தனை ஆண்டுகளாக திமுக எங்கே இருந்தது? நீங்கள் திரும்பி செல்லுங்கள், மோடிஜி எங்களைப் பார்த்துக் கொள்வார் என்று கனிமொழியிடம் இந்த மெய்தி பெண் கண்ணீர் விடுகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை திரும்பிவரும் நிலையில், மணிப்பூர் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள, I.N.D.I.A கூட்டணியைச் சேர்ந்த 21 எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த ஜூலை 29 அன்று மணிப்பூர் சென்றது.
இந்நிலையில் அங்கு சென்ற திமுக கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான கனிமொழியிடம் மெய்தி இனப்பெண் ஒருவர், இத்தனை ஆண்டுகளாக “திமுக எங்கே இருந்தது? நீங்கள் திரும்பி செல்லுங்கள், மோடிஜி எங்களைப் பார்த்துக் கொள்வார்” என்று கூறி கண்ணீர் விடுவதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் 2:17 நிமிட வீடியோ ஒன்றை இந்து மக்கள் கட்சியினர் உட்பட பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
கனிமொழியிடம் எதிர் கேள்வி கெட்ட மைத்தி இன பெண்!
ஒரு பெண்ணை வீட்டிலையே வைத்து எரித்து கொன்றதற்கு நீங்க குரல் கொடுக்கலை ஏன்?
பெண்களுக்காக வந்தீர்களென்றால் அந்த பிரச்னை நடந்து 2 வருடம் ஆகி விட்டது.. அப்போதெல்லாம் எங்கே போனீர்கள்.? அந்த வீடியோ வைரல் ஆனதற்கு பிறகே வந்துள்ளீர்கள்… pic.twitter.com/TjCbnPcdMQ
— Sk Palanikumar Yadav (@p_nikumar) August 1, 2023
கனிமொழியிடம் எதிர் கேள்வி கேட்டு வைச்சு செஞ்ச மைத்தி இன பெண் 🔥🔥🔥👌👌👌
இதை சற்றும் எதிர்ப்பாக்காமல் அக்கா வாய் அடைத்து நின்ற மோமண்ட் 🤗🤗🤗
ஒரு பெண்ணை வீட்டிலையே வைத்து எரித்து கொன்றதற்கு நீங்க குரல் கொடுக்கலை ஏன்?
பெண்களுக்காக வந்தீர்களென்றால், அந்த பிரச்னை நடந்து 2… pic.twitter.com/XrKkV7o1DP
— ArunmozhiVarman 🕉🚩🇮🇳🛕🎻 (@Arunmozhi_Raaja) August 2, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவின் முழு தொகுப்பு Republic World ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 29 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் 2:17 நிமிட வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், கூட்டத்தின் நடுவே மெய்தி இனப்பெண் ஒருவர், எம்பிக்களிடம் ஆங்கிலத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருப்பதை காண முடிந்தது. எனவே அந்த வீடியோவை தமிழாக்கம் செய்து பார்த்தோம்.
அதில், “அரசாங்கத்தால் எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஒன்றிய அரசால். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் ஏன் முன்கூட்டியே எழுப்ப முடியவில்லை. வீடியோ வைரலானதுக்கு பிறகு மட்டுமே அதைக் கொண்டு வருகிறீர்கள்? ஏன்? பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இதில் என்ன அக்கறை? இந்த ஒரு வைரல் வீடியோ மட்டும் ஏன் வெளியே கொண்டுவரப்பட்டது?
இதற்கு முன்பே வயதான பெண்ணுக்கும், வயதான மூதாட்டிக்கும் இப்படி நடந்துள்ளது. செரோவைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிரோடு தன் வீட்டில் எரிக்கப்பட்டார். அந்த விஷயத்தை ஏன் வெளியேக் கொண்டுவரவில்லை. அவர்கள் முற்றிலும் குற்றத்திற்கு எதிரானவர்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் என்றால், இதை ஏன் கொண்டு வரவில்லை?
மே 3ஆம் தேதி இரவும், மே 4 மற்றும் 5ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சூராசந்த்பூரிலேயே சிக்கியுள்ளனர். வன்புணர்வினால் பாதிக்கப்பட்டவர்களும் அங்குள்ளனர். சூராசந்த்பூரில் மெய்தி இனப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர். நாங்கள் எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறோம். நாங்கள் பெண்கள் என்பதால் பயப்படுகிறோம். அதனால்தான் நாங்கள் எதிர்த்து நிற்கவில்லை. உங்களுக்கு ஆதாரம் தேவைப்பட்டால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள்.
சரியா? மெய்திகள் எப்போதாவது குக்கிகளின் வீடுகளை எரித்துள்ளார்களா? அவர்கள்தான் எங்கள் வீடுகளை முதலில் எரித்தார்கள். எங்கள் எதிர் காலத்தை நாசம் செய்ய எங்கள் வீடுகளை அழித்தார்கள். நாங்கள் அங்கே வீடு வாசலுடன் இருக்கிறோம். எங்கள் எதிர்காலத்தை கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் பெற்றோர்கள் எங்களை வளர்க்கிறார்கள், பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். என்றாவது ஒரு நாள் நாங்கள் அதிகாரிகள் ஆகி குடும்பத்தை பார்த்துக்கொள்வோம் என்னும் நம்பிக்கையில். ஒரு குடும்பத்தை வழி நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. எங்கள் பெற்றோர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதை உருவாக்கி வந்தனர். அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது.
குக்கிகளின் வீட்டை மெய்திஸ் எரித்தனர் என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் இன்னும் கேட்கிறார்கள் என்றால், செயற்கைக்கோள் எதற்கு இருக்கிறது. அதில் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியும். அதை ஏன் பயன்படுத்தக்கூடாது? 89 நாட்களுக்குப் பிறகும் கூட அரசாங்கம் ஏன் இன்னும் செயல்படவில்லை?” என்று அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பேசியிருப்பதைக் காணமுடிந்தது.