மணிப்பூர் கலவரத்திற்கு காங்கிரசே காரணமென மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கூறியதாகப் பாஜகவினர் பரவும் பொய் !

பரவிய செய்தி

மணிப்பூர் பற்றி எரிய தனது ஓட்டு வங்கிக்காக பங்ளாதேஷ் & மியான்மர் ரோகிங்கியாக்களை ஊடுருவ வைத்த காங்கிரஸ்தான் காரணம் என்று அதே காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் தலைவர் ராகுல் (காந்தி) கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்..

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ணிப்பூரில் மெய்தி சமூகத்தைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மெய்தி மக்கள் அரசியல் அதிகாரத்தில் அதிக அளவில் உள்ளனர். மொத்தமுள்ள 60 சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 பேர் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் கூறிவந்தனர். 

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 

Archive link

இந்நிலையில், மணிப்பூரில் இத்தகைய சூழல் ஏற்படக் காங்கிரஸ் தான் காரணம் எனக் காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் தலைவர் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதி உள்ளதாக இந்தியா டுடே வீடியோ ஒன்றினை தமிழ்நாடு பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்பட அக்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் அப்பதிவுகளில் ராகுல் காந்தியின் பெயரை ராகுல் கான் என்றும் குறிப்பிட்டு பரப்புகின்றனர்.

Archive link  

உண்மை என்ன ? 

காங்கிரஸ் கட்சி மணிப்பூர் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியதாக பரப்பப்படும் தகவலில் இந்தியா டுடே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்திலேயே ‘MANIPUR REGIONAL PARTY BLAMES CONG FOR VIOLENCE’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது மணிப்பூரில் உள்ள பிராந்திய கட்சி ஒன்று மணிப்பூரில் நடக்கும் வன்முறைக்குக் காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான செய்தியை ‘இந்தியா டுடே’ கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. அவர்கள் டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவின் தலைப்பிலும் இதே தகவலைக் காண முடிகிறது.

Twitter link

இது பற்றி ‘இந்தியா டுடே’ இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடக்கத்திலேயே ‘மணிப்பூர் பேட்ரியாடிக் (Patriotic) கட்சியின் பொதுச் செயலாளர் நௌரம் மோகன் வடகிழக்கு மாநிலத்தின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மணிப்பூர் வருவதை கண்டித்த பதிவுகளையும் நௌரம் மோகன் டிவிட்டர் பக்கத்தில் காண முடிந்தது.

Archive link

அது மட்டுமின்றி ஜூலை 6ம் தேதி மணிப்பூர் தொடர்பாக ஒரு டிவீட் செய்துள்ளார். அதிலும், ‘கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சுயநல அரசியல்வாதிகள், புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ஆட்சியைக் கோருவர். ஆனால், இப்போதுதான் மெதுவாக அமைதி தொடங்குகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயப் பணிகள் வேகமெடுத்து வருகின்றன’ என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டு அமித்ஷாவை டாக் செய்துள்ளார். 

Twitter link

அது மட்டுமின்றி, 2014ம் ஆண்டு மோடியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு, மோடிக்கு ஆதரவாக வாக்கு கேட்டுள்ள பதிவுகளையும் அவரது பக்கத்தில் காண முடிகிறது. இவற்றைக் கொண்டு மணிப்பூர் கலவரத்திற்குக் காங்கிரஸ் காரணம் எனக் குற்றம் சாட்டியது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிப்பூர் தலைவர் இல்லை என்பதை அறிய முடிகிறது. 

Archive link  

நௌரம் மோகன் டிவிட்டர் பக்கம் முழுவதும் பாஜக ஆதரவு பதிவுகளாகவும், பாஜகவினர் பதிவுகளை பகிர்வதும் நிறைந்து இருக்கிறது. 

முடிவு : 

நம் தேடலில், மணிப்பூர் கலவரத்திற்குக் காங்கிரஸ் தான் காரணம் எனக் காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் தலைவர் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது பாஜக ஆதரவு நிலையில் உள்ள மணிப்பூர் பேட்ரியாடிக் (Patriotic) கட்சியின் பொதுச் செயலாளர் நௌரம் மோகன் என்பவர்தான் அத்தகைய கருத்து தெரிவித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader