மணிப்பூரில் பழங்குடியின பெண்களின் வன்கொடுமை வழக்கில் அப்துல் ஹிலீம் என்பவர் கைது என தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி
மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை ஒருவர் கைதான நிலையில் தற்போது மேலும் மூவர் கைது; மக்கள் புரட்சிகர கட்சியை சேர்ந்த அப்துல் ஹிலிம் என்பவரை கிழக்கு இம்பால் காவல்துறையினர் கைது செய்தனர்..
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முப்பதுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில், பழங்குடியினரல்லாத மெய்தி (Meetei or Meitei) இனமக்கள், தங்களுக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் இடையே பல்வேறு கலவரங்கள் கடந்த மே மாதத்திலிருந்தே தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மெய்தி இனைத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட வழக்கில், காவல்துறையானது சம்பவம் நடந்த 77 நாட்களுக்கு பிறகு தற்போது முக்கிய குற்றவாளியான ஹீரும் ஹேரா தாஸ் (32) உட்பட 4 பேரை கைது செய்துள்ளது.
இந்நிலையில் “மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மக்கள் புரட்சிகர கட்சியை சேர்ந்த அப்துல் ஹிலிம் என்பவரை கிழக்கு இம்பால் காவல்துறையினர் கைது செய்தனர்” என்று கூறி புதியதலைமுறை மற்றும் ANI செய்திகள் தங்களுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் நியூஸ் கார்டு மற்றும் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இனி ஒருத்தனும் வாய் தொறக்க மாட்டாங்க..
என்னனா? சிக்கியது.. 👇
மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை வழக்கில் அப்துல் ஹிலிம் என்ற பொறுக்கியை மணிப்பூர் காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளான்.மதச்சார்பற்றவர்கள் மணிப்பூரைப் பற்றி பேசுவதை மெதுவாக நிறுத்தும் நேரம் இது. #Manipur pic.twitter.com/01uwINOesg
— லட்சுமி 💃🚩 (@Deppaa2) July 21, 2023
இனி ஒருத்தனும் வாய் தொறக்க மாட்டாங்க.. 🤐😷
என்னனா? சிக்கியது.. 👇
மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை வழக்கில் அப்துல் ஹிலிம் என்ற பொறுக்கியை மணிப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதச்சார்பற்றவர்கள் மணிப்பூரைப் பற்றி பேசுவதை மெதுவாக நிறுத்தும் நேரம் இது. 🤫🏃♂️#Manipur pic.twitter.com/nE04a0zmny
— 🏍️Pulsar_220🏍️ (@Pulsar220_) July 20, 2023
மேலும் இந்தியா முழுவதும் இந்த செய்தியை சிலர் அப்துல் ஹிலீம் என்ற பெயரிலும், சிலர் அப்துல் கான் என்ற பெயரிலும் முஸ்லீம் இளைஞர் ஒருவர் மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மணிப்பூர் காவல்துறையினர் தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அப்துல் ஹிலீம் குறித்து கடந்த ஜூன் 20 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் “PREPAK Pro உறுப்பினர் ஒருவர் கைது: இன்று PREPAK Pro உறுப்பினரில் ஒருவரான கிழக்கு இம்பாலின் குமிடோக் எபம் மாபன் கிராமத்தைச் சேர்ந்த Md இபுங்கோ என்ற அப்துல் ஹிலிம் (38 வயது) s/o (L) டொம்பா கான், கிழக்கு இம்பால் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தப் பதிவில் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமைகள் செய்யப்பட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் அவர்கள் குறிப்பிடவில்லை.
One PREPAK Pro Cadre Arrested:
Today one cadre of PREPAK Pro namely Md Ibungo @ Abdul Hilim (38 yrs) s/o (L) Tomba Khan of Khumidok Epum Mapan Imphal East was arrested by Imphal East District Police.
— Manipur Police (@manipur_police) July 20, 2023
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட நான்கு குற்றவாளிகளின் விபரங்கள் குறித்து தேடியதில், மணிப்பூர் காவல்துறையின் மற்றொரு ட்வீட் கிடைத்தது. அதில் “வைரல் வீடியோ வழக்கில் நான்கு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்: தௌபால் மாவட்டத்தின் நோங்போக் செக்மாய் PS இன் கீழ் கடத்தல் மற்றும் கூட்டுப் பலாத்காரம் என்ற கொடூரமான குற்றத்தின் கீழ் மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இதுவரை மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில காவல்துறை மேற்கொண்டு வருகிறது. சோதனைகளும் தொடர்கின்றன” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Four main accused arrested in the Viral Video Case :
03 (three) more main accused of the heinous crime of abduction and gangrape under Nongpok Sekmai PS, Thoubal District have been arrested today. So total 04 (four) persons have been arrested till now.
1/2
— Manipur Police (@manipur_police) July 20, 2023
மேலும் இந்த இரண்டு பதிவுகளும் மணிப்பூர் காவல்துறையினரால் கடந்த ஜூலை 20 அன்று இரண்டு வெவ்வேறு பதிவுகளின் கீழ் தனித்தனி செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இதன் உண்மை தன்மை அறியாமல் ANI மற்றும் புதியதலைமுறை செய்திகள் இரண்டையும் இணைத்து தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இது குறித்து இந்தியா டுடே NE வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்த சம்பவத்தின் முதல் குற்றவாளி 32 வயதுடைய ஹீரும்ஹேரா தாஸ் மெய்தி என்று உறுதிபடுத்தியுள்ளது.
மேலும் மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநில செய்தி தொடர்பாளரான பூஜா மேத்தா மற்றும் மணிப்பூர் காவல்துறையின் ட்வீட் பதிவுகளில் இருந்து, முக்கிய குற்றவாளி தௌபால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளர் என்பதையும் உறுதிபடுத்த முடிகிறது.
ஆனால் மணிப்பூர் காவல்துறையினர் அப்துல் ஹிலிம்மை கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். கூகுள் வரைபடத்தில் கிழக்கு இம்பால் மாவட்டத்திற்கும் தௌபாலுக்கும் இடையே உள்ள தூரத்தை தேடும் போது இரண்டும் 34 கி.மீ. தொலைவு வித்தியாசத்தில் இருந்ததை அறிய முடிந்தது.
மேலும் அப்துல் ஹிலீம் மணிப்பூர் வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்ட ANI, தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு செய்தி வெளியிட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
அந்த செய்தி குறிப்பில் “செய்தியை திரும்பப் பெறுவது மற்றும் மன்னிப்பு கோருவது பற்றிய குறிப்பு: நேற்று மாலை, மணிப்பூர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் குறித்து கவனக்குறைவாக ANI ஆல் ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது. வைரல் வீடியோவில் காட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மணிப்பூர் காவல்துறை வெளியிட்ட பிற கைதுகள் தொடர்பான முந்தைய ட்வீட்டுடன் குழப்பமடைந்ததால், இந்த தவறு நடந்துள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பிழையை உணர்ந்து ட்வீட் உடனடியாக நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட பதிப்பு உடனடியாக வெளியிடப்பட்டது. பிழைக்கு வருந்துகிறோம்.”என்று குறிப்பிட்டுள்ளது.
Note on Story retraction and APOLOGY: Yesterday evening, inadvertently a tweet was posted by ANI regarding arrests undertaken by the Manipur Police. This was based on an erroneous reading of tweets posted by the Manipur police as it was confused with an earlier tweet regarding…
— ANI (@ANI) July 21, 2023
சமீப காலமாகவே வலதுசாரிகள் பலரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இது போன்ற வகுப்புவாதத்தைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ‘என் மாநிலம் பற்றி எரிகிறது’ : மேரி கோம்.. மணிப்பூரில் தொடரும் கலவரங்கள்… காரணம் இது தான்!
மேலும் படிக்க: மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !
முடிவு:
நம் தேடலில், மணிப்பூரில் குக்கி பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அப்துல் ஹிலீம் என்ற முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக ANI மற்றும் புதிய தலைமுறை வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதையும், அந்த முஸ்லீம் இளைஞர் வேறொரு வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.