2014க்கு பிறகே மணிப்பூரில் கலவரங்கள், மரணங்கள் குறைந்ததாக பொய் பேசும் அண்ணாமலை மற்றும் அமித் மால்வியா!

பரவிய செய்தி

மணிப்பூர் என்பது எப்போதும் அமைதியை தன் பக்கத்தில் வைத்திருக்காத ஒரு மாநிலம். 2014-க்கு முன்பு நாம் பார்த்தோம் என்றால் மணிப்பூரில் எத்தனை சாவுகள் என்பது நமக்கு தெரியும். Military Fights, கொலை எல்லாவற்றையுமே பார்த்திருக்கோம். குறிப்பாக 2014-க்கு பின்பு தான் மணிப்பூர் அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

Youtube Link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முப்பதுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில், பழங்குடியினரல்லாத மெய்தி (Meetei or Meitei) இன மக்கள், தங்களுக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் இடையே பல்வேறு கலவரங்கள் கடந்த மே மாதத்திலிருந்தே தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட வழக்கில், காவல்துறையானது சம்பவம் நடந்த 77 நாட்களுக்கு பிறகு தற்போது முக்கிய குற்றவாளியான ஹீரும் ஹேரா தாஸ் (32) உட்பட 4 பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று சோழிங்கநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது “மணிப்பூரின் கடந்த காலம் நமக்கு நன்றாக தெரியும். மணிப்பூர் என்பது எப்போதும் அமைதியை தன் பக்கத்தில் வைத்திருக்காத மாநிலம். 2014-க்கு முன்பு நாம் பார்த்தோம் என்றால் மணிப்பூரில் எத்தனை சாவுகள் என்பது நமக்கு தெரியும். Military Fights, கொலை எல்லாவற்றையுமே பார்த்திருக்கோம். குறிப்பாக 2014-க்கு பின்பு தான் மணிப்பூர் அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். 

இதே போன்று  பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான அமித் மால்வியா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூலை 21 அன்று “மணிப்பூர் வன்முறை பற்றி காங்கிரஸ் கட்சியினர் விவரிக்கிறார்கள்? அவர்களுடைய சாதனைகளைப் பார்த்திருக்கிறீர்களா? தற்போதைய கலவரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அதிகாரத்தில் இருப்பதற்காக ஒரு இனக்குழுவை மற்றொரு இனத்தவருக்கு எதிராக நிறுத்துவதுதான் காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்த ஒரே வழி. இரண்டு ஆட்சியிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளை இங்கே பாருங்கள்.” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Archive Link:

அதில் “மோடி அரசாங்கத்தின் கீழ் மணிப்பூரில் குறைந்த உயிரிழப்புகள்:” என்னும் தலைப்பில் 4 வரைபடங்களையும் (Bar charts) குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் இந்த தகவல்களை பாஜகவினர் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரப்பி வருவதையும் காண முடிந்தது.

உண்மை என்ன ?

முதலில் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வரைபடங்களை ஆய்வு செய்து பார்த்ததில், அவை தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய முடிந்தது.

இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்கு முதலில், இந்தியாவில் கடந்த 2001 முதல் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் மத்தியில் கடந்த 1998 முதல் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு, கடந்த மே 2004 வரை ஆட்சியமைத்தது. பின்னர் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த மே 2004 முதல் மே 2014 வரை பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் 2014 மே முதல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தற்போது ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் “மோடி அரசாங்கத்தின் கீழ் மணிப்பூரில் குறைந்த உயிரிழப்புகள்:” என்னும் தலைப்பில் அவர் பதிவு செய்துள்ள விவரங்களை ஆய்வு செய்ததில், பின்வரும் உண்மைகளை கண்டறிய முடிந்தது.

  • கடந்த 2009-இல் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த UPA தலைமையிலான அரசு, மணிப்பூரில் நடந்த கலவரங்களையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இதனை 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வரைபடத்தில் உள்ள தரவுகளின் மூலம் உறுதி செய்யலாம்.
  • 2014-இல் குறைந்துள்ள மணிப்பூரின் உயிரிழப்புகள் மோடி தலைமையிலான NDA கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 2015-இல் இவை கணிசமான அளவுகள் உயர்ந்துள்ளதை காண முடிகிறது.
  • இதே போன்று 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இந்த உயிரிழப்புகள் மிகவும் குறைந்து காணப்படுகிறன. இந்த ஆண்டுகளில் கொரோனா மிகத் தீவிரமாக இருந்ததையும், அப்போது மக்கள் வெளியே வரக்கூடாது என்று ஊரடங்கு போடப்பட்டிருந்ததையும் அறிந்து கொள்ள முடிந்தது.
  • மேலும் இந்த தரவுகள் அனைத்தும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் வருடாந்திர அறிக்கையின் (Annual Report from Ministry of Home Affairs) தரவுகளோடு ஒத்துப்போகிறன.
  • ஆனால் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் ஆண்டு அறிக்கையானது, கடந்த 2021-2022 இல் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பின்பு எதுவும் வெளியிடப்படவில்லை.  2021-இல் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் மணிப்பூரில் நடந்த உயிரிழப்புகள், கலவரங்கள் குறித்து எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. எனவே நமக்கு இதுவரை கடந்த 2020 மார்ச் வரை நடந்த மணிப்பூர் தொடர்பான கலவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • அமித் மால்வியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2020-இல் இருந்து குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எங்கிருந்து எடுக்கப்பட்டவை என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தை குறிப்பிடவில்லை.

மணிப்பூர் கலவரம் குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுவது என்ன?

மணிப்பூரில் இதுவரை நடந்துள்ள கலவரங்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புகள், மேலும் அங்கு இதுவரை கைது செய்யப்பட்டுள்ள கலவரக்காரர்கள் ஆகியோரின் விவரங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் ஆய்வு செய்து பார்த்ததில் பின்வரும் தகவல்கள் கிடைத்தன.

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரங்களில் இதுவரை ஏற்பட்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகள்: 

மணிப்பூரில் கடந்த 2002-இல் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2003-இல் 50 ஆகவும், 2004-இல் 88 ஆகவும் இருந்து கடந்த 2005-இல் 158 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது ஆட்சியை முடிக்கும் போது கடந்த 2013-இல் இது 28-ஆக கணிசமான அளவு குறைந்துள்ளதையும் நமது ஆய்வில் அறிய முடிகிறது.

பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது, பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கின் காரணமாக இந்த எண்ணிக்கை மீண்டும் குறைந்துள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் கடந்த 2021-2022 இல் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பின்பு எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனவே அதிகாரப்பூர்வமாக இதுவரை 2020 மார்ச் வரை மட்டுமே நமக்கு தரவுகள் கிடைத்துள்ளன.

மணிப்பூர் கலவரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 142-ஆக உயர்ந்துள்ளது என்பதை குறிபிட்டுள்ளது.

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரங்கள்: (2004 முதல் 2020 மார்ச் வரை)

இதே போன்று கடந்த 2013-இல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது 225 என்ற எண்ணிக்கையில் உள்ள மணிப்பூர் கலவரங்கள் பாஜக ஆட்சிக்கு பின்பு 278-ஆக உயர்ந்துள்ளது.

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புகள்: (2004 முதல் 2020 மார்ச் வரை)

இந்த தரவுகளை ஆய்வு செய்து பார்த்ததில், 2010-2014 வரை குறைந்த பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகள் கடந்த 2015-இல் கணிசமாக உயர்ந்துள்ளதையும் காண முடிகிறது.

மணிப்பூரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள/ சரணடைந்துள்ள/கொல்லப்பட்டுள்ள கலவரக்காரர்களின் விபரங்கள்: (2004 முதல் 2020 மார்ச் வரை)

இதன் மூலம் UPA தலைமையிலான ஆட்சியின் போது இதுவரை கிட்டத்தட்ட 10,539 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், 1359 கலவரக்காரர்கள் சரணடைந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. இதன் மூலமே இதற்கு அடுத்து வரும் ஆண்டுகளில் கலகக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

முடிவு:

நம் தேடலில், 2014-க்கு பின்பு தான் மணிப்பூர் அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியவை தவறானவை

இதே போன்று அமித் மால்வியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மோடி அரசாங்கத்தின் கீழ் மணிப்பூரில் குறைந்த உயிரிழப்புகள்:” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் காங்கிரஸ் ஆட்சியில்(UPA 2) இருந்தே குறைய தொடங்கி உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader