மணிப்பூரில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடிப்பதாகப் பரவும் மத்தியப் பிரதேச வீடியோ !

பரவிய செய்தி
மணிப்பூரில் இன்னுமொரு கொடுமையிலும் கொடுமை
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி சமூகத்தைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து கடந்த மே மாத தொடக்கத்திலிருந்து பெரும் வன்முறை மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் மணிப்பூர் மாநிலத்தில் எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்னொரு கொடுமை நடந்துள்ளதாக வாட்சப்பில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கூடி நின்று கொண்டிருக்கும் இடத்தில் பெண் ஒருவரைக் கயிறு கட்டி மரத்தில் தொங்க விட்டு சில ஆண்கள் கடுமையாகத் தாக்குகின்றனர்.
உண்மை என்ன ?
மணிப்பூரில் பெண் தாக்கப்படுவதாக வாட்சப்பில் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அந்த சம்பவம் 2021ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்தது என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து 2021, ஜூலை 2ம் தேதி ‘குயின்ட்’ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் 19 வயது பழங்குடியினப் பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அவர் தனது மாமியார் வீட்டை விட்டு வெளியேறி, உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இச்செயல் தங்களை இழிவுப்படுத்திவிட்டதாகக் கூறி, தந்தை கெல் பேல், உறவினர் புவன் பெல், கரம் பெல் மற்றும் தினேஷ் பெல் ஆகியோர் அப்பெண்ணை மரத்தில் தொங்க வைத்து அடித்துள்ளனர். ஜூன் 28, 2021 அன்று நடந்த அச்சம்பவத்தின் வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது என அலிராஜ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் விஜய் பக்வானி கூறியுள்ளார்.
இது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. அச்செய்திகளிலும் இதே தகவல்களை காண முடிகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின பெண்ணை அவரது குடும்பத்தினர் 2021ம் ஆண்டு தாக்கிய வீடியோவினை, தற்போது மணிப்பூரில் நடந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : மணிப்பூரில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காவலர்களைத் தாக்குவதாகப் பரவும் பொய் செய்தி !
மணிப்பூர் மாநிலம் பற்றிப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைத் தன்மையை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : மணிப்பூரில் கிறிஸ்தவ பெண்ணை ஆர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்யும் காட்சி எனப் பரவும் பிரேசில் வீடியோ!
முடிவு :
நம் தேடலில், பெண் ஒருவரை மரத்தில் தொங்க விட்டு பலர் அடிக்கும் வீடியோ மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்தது அல்ல. அது 2021ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. குற்றம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.