10 ஆண்டு ஆட்சியில் மன்மோகன் சிங் காஷ்மீர் சென்றதில்லை என வலதுசாரி ஆதரவாளர் விவாத நிகழ்ச்சியில் பேசிய பொய் !

பரவிய செய்தி
“10 வருட கால ஆட்சியில் மன்மோகன்சிங் காஷ்மீர் போனதேயில்லை” – எஸ்.எஸ்.ஸ்ரீராம் வலதுசாரி
மதிப்பீடு
விளக்கம்
தந்தி டிவியில் கடந்த 7ம் தேதி ‘ராகுல் வருகை பா.ஜ.க.வுக்கு பின்னடைவா?’ என்ற தலைப்பில் ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வலதுசாரி ஆதரவாளராகக் கலந்து கொண்ட எஸ்.எஸ்.ஸ்ரீராம் பேசுகையில் “10 வருடம் சொந்த பிரதமரே (மன்மோகன் சிங்) காஷ்மீருக்கு போக முடியவில்லையே.
ப்ரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா 10 வருடம் UPA அரசாங்கம். அந்த 10 வருடத்தில் அவர் காஷ்மீர் செல்லவில்லை. பிறகு என்ன நீங்கள் பெரியதாக ஆட்சி செய்து விட்டீர்கள்? உங்கள் நாட்டில் இருக்கும் ஊருக்கே உங்களது பிரதமரால் போக முடியாமல் இருந்த நிலை இன்று மாறியுள்ளது” எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் காஷ்மீர் சென்றது கிடையாது என வலதுசாரி ஆதரவாளரான எஸ்.எஸ்.ஸ்ரீராம் பேசியது தொடர்பாக ஆய்வு செய்தோம். அதில், மன்மோகன் சிங் பல்வேறு நேரங்களில் காஷ்மீர் பயணம் செய்ததை அறிய முடிந்தது.
‘News X’ என்னும் யூடியூப் பக்கத்தில் 2009, அக்டோபர் மாதம் 28ம் தேதி ‘Manmohan Singh visits Jammu and Kashmir’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் நிலைத்தகவலில் ‘தெற்கு மற்றும் வடக்கு காஷ்மீரை இணைக்கும் புதிய ரயில் சேவையைப் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், 2009 அக்டோபரில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து இந்தியா டுடே செய்தியிலும் வெளியாகி இருக்கிறது.
அடுத்ததாக ‘மன்மோகன் சிங் காஷ்மீர் பயணம்’ என்ற தலைப்பில் ‘தினமலர்’ 2010, ஜூன் மாதம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங், இரு நாள் பயணமாக இன்று காஷ்மீர் புறப்பட்டுச் செல்கிறார்’ என்றுள்ளது.
மேலும் ‘காஷ்மீருக்குச் சுயாட்சி வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அவர் அமைத்த சாகீர் அகமது கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும் அவர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அவருடன் ஒன்றிய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவுகான் ஆகியோர் உடன் செல்கின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல், 2013, ஜூன் மாதம் 25ம் தேதி மன்மோகன் சிங் காஷ்மீர் சென்றது தொடர்பாக விகடனில் வெளியான செய்தியில் ‘காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் புதிய ரயில் சேவையை இன்று (25ஆம் தேதி) தொடங்கி வைத்தார்’ என்றுள்ளது.
அன்றைய தினத்தில் அவர் காஷ்மீர் சென்றது தொடர்பாக ‘பிபிசி’ தமிழிலும் செய்தி வெளியாகியுள்ளது. அதில், ‘காஷ்மீரில் இந்தியப் படையினர் 8 பேர் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டு ஒரு நாள் கடந்துள்ள நிலையில் பிரதமரின் இந்த பயணம் அமைகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவிய நேரத்திலும் மன்மோகன் சிங் அங்குச் சென்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
இவற்றிலிருந்து மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ஒரு முறை கூட காஷ்மீருக்குச் செல்லவில்லை என வலதுசாரி எஸ்.எஸ்.ஸ்ரீராம் பேசியது பொய்யான தகவல் என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவரது ஆட்சிக் காலத்தில் ஒரு முறை கூட காஷ்மீர் செல்லவில்லை என வலதுசாரியான எஸ்.எஸ்.ஸ்ரீராம் பேசியது தவறான தகவலாகும். அவர் பலமுறை சென்றுள்ளதை ஊடகங்களில் வெளியான செய்திகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.