தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து மன்மோகன் சிங் கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி
90 சதவீதம் இந்துக்கள் வாழும் தமிழகத்தில் பாஜகவால் ஒரு எம்பி சீட்டு கூட வெற்றி பெற முடியவில்லை காரணம்.. தமிழகத்தில் இருந்து படித்த இளைஞர்கள் நாசா, google, Microsoft போன்றவற்றிற்கு நிர்வாகியாக செல்கிறார்கள். அவர்கள் பாஜகவில் சேர்வதில்லை – டாக்டர் மன்மோகன்சிங்
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், தமிழகத்தில் வாழும் பெரும்பான்மையான இந்துக்கள் பாஜகவில் சேர்வதில்லை, மாறாக பெரு நிறுவனங்களின் நிர்வாகியாக செல்கிறார்கள் எனும் கருத்தைக் கூறியதாக சமூக வலைதளங்களில் தமிழில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
பகிரப்படும் பதிவுகளில் இடம்பெற்று இருப்பது போல் மன்மோகன்சிங் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிலை குறித்து பேசியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கும் வெளியாகவில்லை. மாறாக, ட்விட்டர்வாசிகள் இப்பதிவை ஒத்தக் கருத்தினை பதிவிட்டு இருக்கிறார்கள்.
Almost 90% Hindu’s in Tamil Nadu. BJP doesn’t get 1 seat.
Their children go to NASA, Google, Microsoft, not to RSS.
— Raksha Ramaiah 🇮🇳 (@RakshaRamaiah) February 12, 2020
Advertisement
” 90% இந்துக்கள் இருக்கும் தமிழகத்தில் பாஜகவால் 1 எம்பி சீட்டு கூட பெற முடியவில்லை. அவர்களின் குழந்தைகள் நாசா, கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றிற்கு செல்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ்-க்கு இல்லை ” என ரக்சா ராமையா என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இதே கருத்தை மன்மோகன்சிங் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியதாக சர்ச்சை எழுந்தது, பின்னர் அது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அல்ல பக்கம் என செய்திகள் வெளியாகின.
2020 ஜூன் மாதத்தில் மன்மோகன்சிங் பெயரில் பரவிய போலியான ட்விட்டர் பக்கம் குறித்து தி பிரிண்ட் இணையதளத்தில் வெளியான செய்தியில், சர்ச்சையான ட்வீட்கள் வெளியான பிறகு மன்மோகன்சிங் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கு போலியானது என சந்தேகம் எழுந்ததாக தற்போது வைரலான கருத்தைக் குறிப்பிட்டு உள்ளார்கள்.
மன்மோகன்சிங் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கு பின்னர் ரசிகர்கள்குழு என மாற்றப்பட்டது. பிரபலமானவர்களின் பெயரில் ரசிகர்கள், நையாண்டி பக்கங்கள் தொடங்குவது வழக்கமான ஒன்று என ஏஎல்டி இணையதளத்தின் நிறுவனர் ப்ரதிக் சின்ஹா ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
It is the most common strategy to gain followers on Twitter. Make an account impersonating a famous individual. Get thousands of followers before someone asks the question, “Are you real?”. Add parody or fan after that. It is amazing how incompetent @Twitter is in such matters. https://t.co/cCy3Cm0M2z
— Pratik Sinha (@free_thinker) June 19, 2020
மன்மோகன்சிங் பெயரிலும் பல போலியான ட்விட்டர் பக்கங்கள் இயங்கி வருகிறது. அவற்றில் வெளியாகும் பதிவுகளை உண்மை என நினைத்து பகிர்ந்து விடுகிறார்கள். தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து மன்மோகன்சிங் தெரிவித்ததாக வெளியானதும் போலியான ட்விட்டர் பக்கத்தில்தான் தவிர அவருடைய கருத்து அல்ல.
முடிவு :
நம் தேடலில், 90 சதவீதம் இந்துக்கள் வாழும் தமிழகத்தில் பாஜகவால் ஒரு எம்பி சீட்டு கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் தமிழகத்தில் இருந்து படித்த இளைஞர்கள் நாசா, கூகுள், மைக்ரோசாப்ட் போன்றவற்றிற்கு நிர்வாகியாக செல்கிறார்கள் மற்றும் அவர்கள் பாஜகவில் சேர்வதில்லை எனும் கருத்தினை டாக்டர் மன்மோகன்சிங் கூறவில்லை என்பதையும், அவர் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியானது என்பதையும் அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.