தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை ஒன்றிய அரசுக்கு கொடுக்க வேண்டும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் அதிக மருத்துவ இடங்களை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா
மதிப்பீடு
விளக்கம்
வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் அதிக மருத்துவ இடங்களை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா கூறியதாக தமிழ்நாடு பாஜகவின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஏன்…கோடிக்கணக்கில் செலவு செய்து ராமர் கோவில் கட்டுவார்கள் கும்பமேளா நடத்துவார்கள்.ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட மாட்டானுங்க.தமிழ்நாட்டில் உள்ளவற்றை அபகரிப்பானுங்க.இதைக் கூட கேட்க வக்கில்லாதவர்கள்தான் சூத்திர சங்கிகறள் மற்றும் ஜோம்பிகள். pic.twitter.com/h8EoHiT7Zl
— இரத்தினவேலு வசந்தா. (@vasantalic) June 10, 2023
இவனுங்க மருத்துவக்கல்லூரி கட்டமாட்டானுங்க,
நம்மள மதிக்கவும் மாட்டானுங்க.
ஆனால் இவனுங்களுக்கு நாம மெடிக்கல் காலேஜ் சீட்டுகள வீட்டுத் தரனுமாம்.
இத்தனை வருஷமா ஒன்றிய அரசா இருந்து என்னத்த புடுங்கினாங்க 😠😠
😄இந்தலெட்சணத்தில மருத்துவகல்லூரி அங்கீகாரத்தை ரத்துபண்ணுவோம்ன்னு மிரட்டுறது. pic.twitter.com/eq4saozgiK— சிந்தனை (@mdunis59) June 10, 2023
மேலும் அப்பதிவுகளில், “கோடிக்கணக்கில் செலவு செய்து ராமர் கோவில் கட்டுவார்கள், கும்பமேளா நடத்துவார்கள், ஆனால் ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட மாட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ளவற்றை மட்டும் அபகரிப்பார்கள்” என்று கூறி அந்த நியூஸ் கார்டு பரவி வருவதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான BJP Tamilnadu பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து அவர்கள் எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இந்த செய்திகள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா ஏதாவது தகவல் வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்து அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கதிலும் தேடினோம், அதில் பரவி வரும் கார்டில் குறிப்பிட்டிருப்பது போன்று ஜூன் 11 அன்று எந்த கருத்துகளையும் அவர் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக மேலும் தேடியதில், ஒன்றிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வெளியிடும் The Press Information Bureau (PIB), தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ( PIB_India), மன்சுக் மாண்டவியா குறித்த செய்திகளை இறுதியாக கடந்த ஜூன் 03 அன்று வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
Union Minister @mansukhmandviya addresses Global Vaccine Research Collaborative Discussion on Vaccine Research and Development, a G20 co-branded event
“The development and deployment of effective vaccines can help to mitigate the impact of pandemics, and we must prioritize… pic.twitter.com/cFODm9z8h5
— PIB India (@PIB_India) June 3, 2023
அதில், “மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா G20-இன் தடுப்பூசிகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிகழ்வில், உலகளாவிய தடுப்பூசி ஆராய்ச்சி பற்றிய கூட்டு விவாதம் பற்றி பேசினார். அதில் “சிறந்த தடுப்பூசிகளை உருவாக்குவதும், அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் பெருந்தொற்றுகளின் (pandemics) தாக்கத்தை குறைக்க உதவும், எனவே இந்த நோக்கத்தை அடைய நாம் ஆராய்ச்சி முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று பேசினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்
– மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா@mansukhmandviya pic.twitter.com/LRhbLxjZUr
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 6, 2023
இதுகுறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் தேடுகையில், கடந்த ஜூன் 06 அன்று “தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா” என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவி வருவது போன்ற நியூஸ் கார்டை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம், ஜூன் 06 அன்று BJP Tamilnadu வெளியிட்ட நியூஸ் கார்டை, தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று மன்சுக் மாண்டவியா கூறியதாக எடிட் செய்து சிலர் தவறாக வெளியிட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று மன்சுக் மாண்டவியா கூறியதாக பரவி வரும் தமிழ்நாடு பாஜகவின் நியூஸ் கார்டு போலியானது என்பதையும், தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என அவர் கூறியதை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.