ஹெச்.ராஜாவின் பதிவு : விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமா ?

பரவிய செய்தி
முகநூலில் ஒரு நண்பரின் கேள்வி. மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினச்சேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாதா போது மனிதன் மட்டும் ஏன் இப்படி ? இதற்கு என்ன பதில் சொல்ல என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மதிப்பீடு
சுருக்கம்
விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்பது தவறு.
விளக்கம்
அண்மையில் உச்சநீதிமன்றத்தில் ஓரினச்சேர்க்கை இந்தியாவில் குற்றமா என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்திய சட்டம் 377-ன் படி குற்றமில்லை என வழங்கிய தீர்ப்பிற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் உருவாகியது. இந்த தீர்ப்பால் சட்டப்படி ஓரினச்சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.
இதையடுத்து, ஓரினச்சேர்க்கை தொடர்பான பதிவு ஒன்றை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
“ முகநூலில் ஒரு நண்பரின் கேள்வி. மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினச்சேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாதா போது மனிதன் மட்டும் ஏன் இப்படி ? இதற்கு என்ன பதில் சொல்ல “ என்று பதிவிட்டு இருந்தார்.
தாவரங்கள் , விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை எனக் கூறிய இக்கேள்வியே முதலில் தவறான ஒன்று. விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமா என்ற கேள்வி..? அதற்கு பதில் ஆம் என்பதே..!!
1999-ல் bruce begemihls என்பவர் எழுதிய “ Biological Exuberance “ என்ற புத்தகத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பல உயிரினங்கள் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
ஜப்பானின் குட்டை வால் குரங்குகள், சிவப்பு மாவு வண்டுகள், அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள லய்சன் அல்பட்ரோஸ் என்னும் கடல்வாழ் பெரிய பறவைகள், போனோபோஸ் குரங்குகள், ஆண் செம்மறி ஆடுகள் போன்றவை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
தன்பால் ஈர்ப்பு நியாயமா அல்லது தவறா என்ற கேள்விக்கு வரவில்லை. தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடவில்லை என்று கூறுவது தவறான தகவல்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.