மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்டதாக தவறாகப் பரவும் சர்ச்சை பாடல் !

பரவிய செய்தி
சர்ச்சைக்குரிய தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உடைய நீலம் பண்பாட்டு மையத்தின் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல். 8 வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை வாந்தி எடுக்க வைத்தேன் என வரிகள் பாடியவர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
இயக்குனர் பா.ரஞ்சித் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் ஏற்பாடு செய்து இருந்தார். மதுரையில் நடைபெற நிகழ்ச்சியில் எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மேடையில் கானா பாடலை பாடும் இளைஞரின் பாடலில், ” 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை வாந்தி எடுக்க வைத்தேன் ” என சர்சையைக்குரிய வகையிலும், மோசமான வார்த்தைகள் பயன்படுத்தி இருந்தது கண்டனத்தைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்டது என பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகி வரும் சர்ச்சைக்குரிய கானா பாடலின் வீடியோ கடந்த 2020-ம் ஆண்டு டோனி ராக் எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ காட்சி கண்டனத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகவே அதை மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இணைத்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
The folk song being shared is an old video & not from Margazhiyil Makkal Isai. I stand corrected & regret for not cross-checking.
Time to report this content in YouTube & elsewhere. pic.twitter.com/ds5xmkbjYu
— SG Suryah (@SuryahSG) December 22, 2021
தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில், இந்த பாடல் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்ததாக பதிவிட்டு பின்பு நீக்கி இருக்கிறார். மேலும், இந்த கானா பாடல் பழைய வீடியோ, மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியைச் சேர்ந்தது அல்ல. தவறை திருத்திக் கொள்வதாக ” பதிவிட்டு இருக்கிறார்.
பெண் பிள்ளைகளை தவறாக சித்தரிப்பவர்களையும், இதுபோன்ற வரிகளை கொண்டு பாடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த பாடல் இடம்பெற்ற வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
முடிவு :
நம் தேடலில், பா.ரஞ்சித் உடைய நீலம் பண்பாட்டு மையத்தின் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல் எனப் பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோவிற்கும், மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சிற்கும் சம்பந்தமில்லை. அந்த பாடல் கடந்த ஆண்டு ஒரு யூடியூப் சேனலில் வெளியானது என அறிய முடிகிறது.
அப்டேட் :
கண்டனத்தை பெற்று வைரலாகி வரும் கானா பாடலின் வீடியோ கடந்த ஆண்டு பதிவான யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.