அவதூறு வழக்கில் மாரிதாஸிற்கு ஒன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
சன் நியூஸ் தலைமை ஆசிரியர் குணசேகரன் அவர்கள் போட்ட மானநஷ்டஈடு வழக்கில் தீா்ப்பு 1 1/2 கோடி அபராதம் கட்ட சின்ன தலைவர் அண்ணன் டகால்டி மாரிதாஸ் அவர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..இனி பொய் செய்திகள் பரப்ப கூடாது என்றும் அறிவுரை
மதிப்பீடு
விளக்கம்
யூடியூபர் மாரிதாஸ் நியூஸ்18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை ஆசிரியர் குணசேகரன், மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் மற்றும் மூத்த செய்தியாசிரியர் ஆசீப் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோவில், நியூஸ் 18 தொலைக்காட்சியின் ஊழியர்கள் பலரும் திராவிடர் கழகம் மற்றும் திமுகவின் பின்னணியில் இருப்பதாக என பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
இது சர்ச்சையாக உருவெடுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியூஸ் 18 செய்தி நிறுவனம் மாரிதாஸ் மீது 1.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின், குணசேகரன் நியூஸ் 18-ல் இருந்து வெளியேறினார். எனினும், அந்த வழக்கில் விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கில்தான், மாரிதாஸிற்கு எதிராக நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில் ஒன்றரை கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், பொய் செய்திகளை பரப்பக்கூடாது என்றும் உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
மாரிதாஸ் மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக எந்த தகவலும் இல்லை. சொல்லப்போனால், மாரிதாஸ் மற்றும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இடையேயான அவதூறு வழக்கு தற்போதும் நீதிமன்ற விசாரணையிலேயே உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் வழக்கு குறித்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணையில் யூடியூபர் மாரிதாஸ் சமரசம் செய்து கொள்வதற்காக நெட்வொர்க் 18-ஐ அணுகி இருக்கிறார். அதுதொடர்பாக, நியூஸ் 18 முன்னாள் ஆசிரியர் குணசேகரனும் சமரச உடன்பாடு பெற்றாரா என நீதிபதி கேட்டு இருந்தார்.
No compromise from my side. I was a victim of malicious slander and agenda-driven abuse. The fight for justice will continue with same vigour. அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் எதிரான, நீதிக்கான போராட்டம் சமரசமின்றி தொடரும். உங்கள் பேரன்புக்கு நன்றி. #MediaFreedom #FightAgainstSlander https://t.co/Q7OOsuTIxr
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) March 5, 2021
இந்நிலையில், ஊடகவியலாளர் குணசேகரன், ” என் தரப்பில் இருந்து எந்த சமரசமும் இல்லை. தீங்கிழைக்கும் அவதூறு நோக்கம் கொண்ட செயல்களால் நான் பாதிக்கப்பட்டேன். எனவே, அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் எதிரான, நீதிக்கான போராட்டம் சமரசமின்றி தொடரும் ” என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் படிக்க : மாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.
கடந்த ஆண்டு நியூஸ் 18 நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தொடர்பாக தன்னுடைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டு நெட்வொர்க் 18 தனக்கு அனுப்பிய இமெயில் என மாரிதாஸ் வெளியிட்டார். ஆனால், அது மோசடி இமெயில் என ஆதாரத்துடன் நாம் கட்டுரை வெளியிட்டோம். அந்த மோசடி இமெயில் தொடர்பாக வழக்கும் பதியப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், யூடியூபர் மாரிதாஸ் மீதான குணசேகரன் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 1 1/2 கோடி அபராதம் விதித்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. வழக்கு இன்னும் விசாரணையிலேயே உள்ளது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.