மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் பிளாஸ்டிக் இருக்கையில் அமர வைத்ததாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
கார் கொடுத்தோங்கிறதுக்காக ஈக்குவலா சேர் கொடுப்போம்னு எதிர்பார்க்காதீங்க நல்ல சேர் நான்கு சும்மா கிடந்தாலும் “பிளாஸ்டிக்” சேர் தான் உங்க தகுதிக்கு கொடுப்போம் – சின்னவர் உதய்
மதிப்பீடு
விளக்கம்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளிக்கப்பட்டது.
கார் கொடுத்தோங்கிறதுக்காக ஈக்குவலா சேர் கொடுப்போம்னு எதிர்பார்க்காதீங்க
நல்ல சேர் நான்கு சும்மா கிடந்தாலும் “பிளாஸ்டிக்” சேர் தான் உங்க தகுதிக்கு கொடுப்போம்
-உதய்ணா pic.twitter.com/M9KfhZEDhu
— KNR Sivaraj (@knrsivaraj80) July 5, 2023
இந்நிலையில், மாரி செல்வராஜ், வடிவேலு, உதயநிதி இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, உதயநிதி சோபாவில் அமர்ந்து கொண்டு மாரி செல்வராஜுக்கு பிளாஸ்டிக் இருக்கை கொடுக்கப்பட்டதாகப் பரப்பி வருகின்றனர். அப்பதிவுகளில், ‘கார் பரிசளித்தோம் என்பதற்காகச் சரி சமமாக இருக்கை (chair) கொடுப்போம் என எதிர் பார்க்காதீர்கள். உங்கள் தகுதிக்கு பிளாஸ்டிக் இருக்கைதான் கொடுப்போம்’ என உதயநிதி சாதிய மனநிலையில் கூறுவது போல் பதிவிட்டுள்ளனர்.
கருப்பு பிளாஸ்டிக் சேர் ? pic.twitter.com/eqr4HVvrHb
— Selva Kumar (@Selvakumar_IN) July 5, 2023
இம்மாதிரியான பதிவுகளை அதிமுக கௌரி சங்கர், பாஜக செல்வ குமார் முதற்கொண்டு பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களைப் படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்தும், மரியாதை செலுத்தியும் வருகின்றனர். அப்படி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அதிவீரனாக நடித்த சூர்யா ஆகியோரையும் படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.
அதன்படியே கதையின் முக்கிய கதாபாத்திரமான வடிவேலுவையும் அவரது வீட்டில் படக்குழுவினர் சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்த படங்கள் மற்றும் வீடியோவினை உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் 11 வினாடியில் வடிவேலுக்கு பின்னுள்ள சுவரில் அவரது புகைப்படம் இருப்பதைக் காண முடிகிறது.
அதேபோல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் டிவிட்டர் பக்கத்திலும் நடிகர் வடிவேலு உடனான மாமன்னன் படக்குழுவினர் சந்திப்பு புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. அந்த அறையில் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யின் பெரிய படம் ஒன்று இருப்பதைக் காண முடிகிறது. உதயநிதியின் வீட்டில் வடிவேலுவின் இத்தனை புகைப்படங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.
Thank you #Vadivelu sir for being part of #MAAMANNAN.
With your performance, you touched the hearts of many. You didn’t just play the character, you lived it.
It was an honour to work with you sir, and we are forever grateful for it. @mari_selvaraj @Udhaystalin… pic.twitter.com/sBz71uT68b
— Red Giant Movies (@RedGiantMovies_) July 5, 2023
இவர்களின் சந்திப்பு குறித்து ABP நாடு, சினி உலகம், Trend Talks ஆகிய யூடியூப் பக்கங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிலும் அது வடிவேலுவின் வீடு என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். இவற்றிலிருந்து அது வடிவேலுவின் வீடு என்பது உறுதியாகிறது.
மேலும் மாரி செல்வராஜுக்கு பிளாஸ்டிக் இருக்கை வழங்கப்பட்டதாகப் பரவக் கூடிய பதிவுகளில் கூறப்படுகிறது. ஆனால், அதே போன்ற பிளாஸ்டிக் இருக்கையில்தான் வடிவேலும் அமர்ந்துள்ளார்.
உதயநிதியும் மாரி செல்வராஜும் மாமன்னன் திரைப்படத்தில் அதிவீரனாக நடித்த சூர்யா என்பவரை சந்தித்து லேப்டாப் பரிசளித்துள்ளனர். அப்போது மூவரும் ஒரே சோபாவில் அமர்ந்திருக்கும் படங்களையும் உதயநிதியின் டிவிட்டர் பக்கத்தில் காண முடிகிறது. இவற்றைக் கொண்டு பார்க்கையில் உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு இடத்திலும் மாரி செல்வராஜிடம் ஜாதிய பிற்போக்குத்தனத்துடன் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.
முடிவு :
நம் தேடலில், தனது வீட்டில் உதயநிதி சோபாவில் அமர்ந்து கொண்டு மாரி செல்வராஜூக்கு பிளாஸ்டிக் இருக்கை அளித்ததாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. அது நடிகர் வடிவேலுவின் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். மாரி செல்வராஜ் அமர்ந்துள்ள அதே மாதிரி இருக்கையில்தான் வடிவேலுவும் அமர்ந்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.