This article is from Jul 15, 2019

கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் காலில் மூன்று விரல்கள் இல்லையா ?

பரவிய செய்தி

பெரும்பாலான மக்களுக்கு அவரின் காலில் விரல்கள் இல்லாதது குறித்து தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ரன் அவுட் செய்ததற்காக அவரை ட்ரோல் செய்கிறோம். ஒருவரை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் யாரையும் ட்ரோல் செய்ய வேண்டாம்.

மதிப்பீடு

விளக்கம்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இறுதி நேரத்தில் மக்களின் நம்பிக்கையாக இருந்தது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி மட்டுமே.

ஆனால், தோனி இரண்டாவது ரன்னிற்கு ஓடிய பொழுது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் நேரடியாக ஸ்டாம்பை பந்தால் அடித்து தோனியை ஆட்டமிழக்கச் செய்தார். தோனி ரன் அவுட் ஆக காரணமாக இருந்த மார்ட்டின் குப்தில் மீது இந்திய ரசிகர்களின் கவனம் திரும்பியது.

இந்திய அளவில் சமூக வலைதளங்களில் மார்ட்டின் குப்திலை அதிகம் வசைபாடி, அதிக அளவில் ட்ரோல் செய்து இருந்தனர். அதுமட்டுமின்றி, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்த பொழுது, குப்தில் ரன் அவுட் ஆகியதை ட்ரோல் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் உடைய காலில் மூன்று விரல்கள் இல்லை என்ற செய்தியும் பகிரப்பட்டு வருகிறது.


இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய, இதுதொடர்பான தேடலில் CricketNDTV உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 2015-ல் மார்ச் 21-ம் தேதி நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியின் பொழுது மார்ட்டின் குப்தில் 13 வயதில் மூன்று விரல்களை இழந்த பிறகும் கிரிக்கெட்டில் முன்னேறி உள்ளார் என பதிவிட்டு இருந்தனர்.

” 13-வது வயதில் மார்ட்டின் குப்தில் உடைய கால் ஃபோர்க்லிப்ட்-ல் மாட்டி காயமடைந்து உள்ளது. மருத்துவர்கள் முயன்றும் அவரின் விரலைகளை சரி செய்ய முடியவில்லை. ஆகையால், அவரின் இடது காலில் மூன்று விரல்கள் இல்லாமல் இருப்பதால் அவருக்கு ” Martin Two Toes ” என்ற பட்டயப் பெயரும் உள்ளதாக in.com செய்தி தளத்தில் செப்டம்பர் 2018-ல் வெளியாகி இருக்கிறது.

காலில் மூன்று விரல்கள் இல்லை என்றாலும் கிரிக்கெட்டில் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி உள்ளார் மார்ட்டின் குப்தில். ஒருவரை பற்றி அறியாமல் ட்ரோல் செய்வது தவறு என பலரும் தங்களின் மன வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறையினரில் பலர் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் ஒரு வன்மத்தோடு பார்க்கின்றனர். அந்த மனநிலை மாற வேண்டும். விளையாட்டில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பானது என்பதை உணர வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader