மாஸ்க் அணியாமல் இருந்தால், மூக்கின் அருகே ஃபேன் வைத்தால் ஆக்சிஜன் அதிகரிக்குமா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகம், மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட செய்திகளையே நாடு முழுவதிலும் கேட்டு வருகிறோம்.

இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறுபவர்கள் மரம் நாடுங்கள், அது நீண்ட கால தீர்வு என்றும், மாஸ்க் அணிந்தால் எப்படி ஆக்சிஜன் கிடைக்கும், மாஸ்க் அணியாதீர்கள் என ஆளாளுக்கு அறிவுரைக்கூறி வருவதை சமூக வலைதளவாசிகள் அதிகம் கண்டு இருப்பீர்கள்.

ஹீலர் பாஸ்கர்-தற்சார்பு எனும் முகநூல் பக்கத்தில் ” Oxygen அளவை அதிகரிப்பது எப்படி ” என வெளியான வீடியோவில், ” மாஸ்க் போட்டால் கார்பன்டை ஆக்ஸைடை திரும்ப திரும்ப சுவாசித்தால் ஆக்சிஜன் கம்மியாகும். மாஸ்க் போடுவதை நிறுத்தினால் தான் ஆக்சிஜன் அதிகமாகும். ஆக்சிஜன் கம்மியாகுதுனு சொல்லி வெண்டிலெட்டரில் வைத்துக் கொன்னுடு இருக்காங்க. குட்டி ஃபேன் அல்லது டேபிள் ஃபேனை மூக்கின் அருகே வைத்தால் போதும். மூக்கு பக்கத்தில் இருக்கும் காற்றை வேகமாக சுழற்றி விட்டால் ஒரு மணி நேரத்தில் செக் செய்தால் ஆக்சிஜன் சரியாகி விடும். இது ஒரு அடிப்படை அறிவு ” என பேசிய 3.51 நிமிட வீடியோ லட்சக்கணக்கான பார்வையும், ஆயிரக்கணக்கான பகிர்வையும் பெற்று வைரலாகி வருகிறது.

ஹீலர் பாஸ்கர் பேசிய வீடியோவில் அடிப்படை அறிவு கூட இல்லை எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், கமெண்ட் உடன் கிண்டல் செய்து வருகின்றனர். எனினும், மாஸ்க் அணிவதன் நோக்கம் என்ன, மாஸ்க் அணிவதால் ஆக்சிஜன் குறைகிறதா, மாஸ்க் அணியும் போது வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

உண்மை என்ன ?

கொரோனா நோயாளிகளுக்கு ஏன் ஆக்சிஜன் பிரச்சனை ஏற்படுகிறது என்ற அடிப்படையே சிலருக்கு தெரிவதில்லை. நம்மை சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் 20.9 சதவீதம் அளவிற்கு ஆக்சிஜன் நிரம்பி இருக்கிறது. ஒருவர் நோயால் பாதிக்கப்படும் போது காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை ஈர்த்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைகிறது. இதுபோன்ற நிலையில் நோயாளிகளுக்கு தூய்மையான ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. கொரோனா வைரசால் நோயாளியின் நுரையீரல் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஆகையால், ஆக்சிஜன் வெளியில் இருந்து அளிக்கப்பட வேண்டி இருக்கிறது.

” மக்கள் மாஸ்க் அணிவது ஆக்சிஜன் அளவை பாதிக்காது என்பதை காட்ட இங்கிலாந்தின் லீட்ஸ் மருத்துவர் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார். மருத்துவர் ஹன்னா பர்ஹாம்-பிரவுன் ஒரே நேரத்தில் நான்கு வெல்வேறு மாஸ்க்களை அணிந்து அவரது ஆக்சிஜன் அளவை சோதித்து காண்பித்து இருக்கிறார். ஆக்சிஜன் அளவு 99% ஆக இருப்பதாகக் கூறுகிறார். இந்த நேரத்தில் மாஸ்க் அணிவதில் நிறைய கவலைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன், சரியான தகவல்களை நாம் பெறுவது மிகவும் முக்கியம் ” என பிபிசி ஆங்கில ஊடகம் 2020 ஜூலையில் இவ்வீடியோவை வெளியிட்டது.

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் கூறுகையில், ” வளிமண்டலத்தில் ஆக்சிஜன் 21% ஆக உள்ளது. இதை மாஸ்க் ஆல் குறைக்க முடியாது. மாஸ்க் என்பது துகள்களின் அளவைப் பொறுத்து சிறிய துகள்களைக் குறைக்கும் வடிப்பான். துணி போன்ற மாஸ்க் ஆனது தூசி நுழைவைக் குறைக்கும், அதேநேரத்தில் N95 போன்றவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவை குறைக்கும். மாஸ்க் அணிய அறிவுறுத்துவதற்கான காரணம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவுவதை குறைப்பதற்காகும்.

மாஸ்க் அணிந்து இருக்கும் போது வெளியேறும் காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு(CO2) செறிவு இருக்கும். இது வளிமண்டலத்தை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், அது மாஸ்க்கில் உள்ள துளைகள் வழியாக வெளியேறுகிறது. இது காற்றோட்டத்தை கட்டுப்படுத்தாது. வளிமண்டல காற்றோடு ஒப்பிடும் போது உள்ளிழுக்கும் காற்றில் செறிவு கலந்துவிடும், ஆனால் ஆக்சிஜன் நிலையில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

துணி மாஸ்க் மற்றும் அறுவை சிகிச்சை மாஸ்க் ஆனது N95ஐ விட குறைவான ஆபத்தே. N95 மாஸ்க்கை சுகாதாரப் பணியாளர்கள் நீண்ட நேரம் அணிந்து இருப்பதால் உள்ளிழுக்கும் காற்றில் CO2 அளவு அதிகரிக்கலாம், ஆனால் அது O2 அளவை மாற்றாது. இதனால் அவர்களுக்கு சோர்வு, தலைவலி போன்றவை இருக்கலாம். ஆனால், அது இரத்தம் அல்லது காற்றில் O2 அளவைக் குறைக்காது.

மூக்கின் அருகே ஃபேன் வைப்பது காற்றின் வேகத்தை மட்டுமே அதிகரிக்கும், காற்றில் உள்ள ஆக்சிஜன் செறிவை அல்ல. அது 21% மட்டுமே இருக்கும். உள்ளிழுக்கும் காற்றின் செறிவை அதிகரிக்க, மருத்துவ ஆக்சிஜன் போன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன ” என விளக்கி இருந்தார்.

டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் டெக்சர்கானா வைராலஜிஸ்ட் பென் நியூமன் politifact தளத்திற்கு அளித்த தகவலில், ” ஒரு மாஸ்க் ஆனது சுவாச செயல்முறைக்கு சில எதிர்ப்பைச் சேர்க்கும், அதாவது ஒரு சுவாசத்தை எடுக்க இன்னும் கொஞ்சம் வேலை தேவைப்படுவது போல் உணரலாம், ஆனால் அது மாஸ்க் வழியாக வரும் காற்றை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தாது ” எனத் தெரிவித்து இருந்தார்.

” மாஸ்க்கள் ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்தாது என்பதை சோதனைகள் நிரூபிக்கின்றன ” எனும் தலைப்பில் மாஸ்க் அணிந்தவர்களிடம் ஆக்சிஜன் குறைகிறதா என்பதை சோதனையின் மூலம் செய்து காட்டும் வீடியோவை கலிஃபோர்னியாவின் UC San Diego Health 2020 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

முடிவு : 

நம் தேடலில், மாஸ்க் அணிவதால் ஆக்சிஜன் குறைகிறது என்றும், மூக்கின் அருகே ஃபேன் வைத்தால் சில மணி நேரத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்றும் ஹீலர் பாஸ்கர் கூறியது தவறான தகவலாகும்.

மாஸ்க் அணிவதால் ஆக்சிஜன் அளவு பாதிக்காது, வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடு ஆக்சிஜன் அளவை மாற்றாது. மாஸ்க் அணிய சொல்வது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே என மருத்துவர்கள், வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் சோர்வு, தலைவலி போன்ற சிரமங்கள் இருப்பது இயல்பு.

ஆனால், தேவையற்ற தகவல்கள் பகிரப்பட்டு வருவதற்கு சர்வதேச அளவில் மருத்துவர்கள், வல்லுநர்கள் தரப்பில் தொடர்ந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதை நம்மால் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button