இது மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறியும் சக்கரமா ?

பரவிய செய்தி

படத்தில் உள்ள இந்த சக்கரம் மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறிய பயன்படுவது. இது கண்டவுடன் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். இதை எதிரி நாட்டவர் கண்ணில் படாமல் மறைத்து வைத்தனர். ஆனால் அந்நாடு மிகவும் ஏழ்மை நிலையை அடைந்தது. ஏனில் இந்த அற்புத தகடானது, அனைவர்க்கும் செல்வத்தை அளிப்பதற்கு கடவுளால் அருளப்பட்டது. தற்போது இந்த சக்கரத்தின் புகைப்படம் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவர் இதனை அடையாளம் கண்டு இதை புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை அவர் நண்பருக்கு பகிர்ந்தார் அவருக்கு சில நாள்களிலே பதவி உயர்வு மற்றும் பெரிய பண உதவியும் கிடைக்கப்பட்டது. அதை பகிர மறுத்த அவர் நண்பர் தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தார். உடல்நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. எனவே நெருக்கமான நண்பர்களுக்கு இந்த அதிர்ஷ்ட சக்கரத்தை பகிருங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

மாயன்களின் கணிப்புப்படி 2012-ம் ஆண்டிற்கு பிறகு உலகம் அழியக்கூடும் என்கிற தகவல் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களால் பரப்பப்பட்டு இறுதியில் பொய்யென நிரூபணமாகியது. மீண்டும், மாயன் காலண்டருக்கும், தற்போதைய பயன்பாட்டில் இருக்கும் காலண்டருக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதால் 2020-ல் உலகம் அழியக்கூடும் என்கிற வதந்தியும் ஜூன் மாதத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் படிக்க : 2020 ஜூன் 21-ம் தேதி உலகம் அழியப்போகிறதா ? மீண்டும் பரவும் சதிக் கோட்பாடு !

இதேபோல், புகைப்படத்தில் உள்ள மாயன்கள் வானியல் சாஸ்திரத்திற்கு பயன்படுத்தி வந்த சக்கரத்தை பார்ப்பவர்களுக்கு செல்வமும், பதவி உயர்வும் கிடைத்து வாழ்வில் உயரலாம், எனவே இந்த புகைப்படத்தை உங்களின் நெருக்கமான நண்பர்களுக்கு பகிரவும் எனக் கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இப்பதிவுகள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

உண்மை என்ன ? 

ஒரே நிலைத்தகவல் உடன் வெவ்வேறு புகைப்படங்கள் இணைக்கப்பட்ட பல பதிவுகளையும் கூட நம்மால் காண நேரிட்டது. அதிகம் பகிரப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேர்ஜ் சேர்ச் செய்கையில், மாயன் காலண்டர் தொடர்பான தகவல்களும், புகைப்படங்களும் கிடைத்தன. எனினும், நீண்ட தேடலுக்கு பிறகு வைரல் புகைப்படத்தை போலவே ஆஸ்டெக் காலண்டர் (சன் ஸ்டோன்) எனும் பெயரில் ஒரே மாதிரியான புகைப்படங்கள் கிடைத்தன.

Advertisement

ஆஸ்டெக் காலண்டர் குறித்து தேடிய போது, மெக்சிகோ நாட்டில் உள்ள தேசிய மானுடவியல் அருங்காட்சியகத்தில் அமைந்து இருப்பதாக 2019-ல் வெளியான யூடியூப் வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், மியூசியத்திற்கு வருபவர்கள் அதன் அருகில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சக்கர வடிவிலான அமைப்பும், இதுவும் ஒன்றாக இருப்பதை காணலாம்.

britannica.com எனும் இணையதளத்தில், ” ஆஸ்டெக் காலண்டர் ஆனது மாயன் காலண்டரை அடிப்டையாகக் கொண்ட நாள்காட்டி அமைப்பு. ஆஸ்டெக் பேரரசு அழிக்கப்படுவதற்கு முன்பு மெக்சிகோ பள்ளத்தாக்கில் பயன்படுத்தப்பட்டது. மாயன் காலண்டரை போலவே, ஆஸ்டெக் காலண்டரும் 260 நாட்கள் சடங்கு சுழற்சியும், 365 நாட்கள் சிவில் சுழற்சியும் கொண்டுள்ளது. ஒரு வட்ட வடிவிலான ஆஸ்டெக் காலண்டர் மெக்சிகோ நகரில் 1790-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 12 அடி விட்டமும், 25 டன் எடையும் கொண்டிருந்தது. தற்போது அது மெக்சிகோ நகரத்தின் தேசிய மானுடவியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.

மாயன் நாட்காட்டியை மையமாகக் கொண்டு ஆஸ்டெக் நாட்காட்டி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செதுக்கப்பட்ட பாறையில் இருந்து முழுவதுமாக எடுக்காமல் பாறையுடனே அருங்காட்சியத்தில் காட்சியளிக்கிறது. மாயன் காலண்டர் என இணையத்தில் தேடினால் ஆஸ்டெக் காலண்டரின் புகைப்படமே அதிகம் கிடைக்கிறது.

ஆஸ்டெக் காலண்டர்(சன் ஸ்டோன்) புகைப்படத்தைக் கொண்டு மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறிய பயன்படும் சக்கரம் என்றும், இதை நெருக்கமான நண்பர்களுக்கு பகிர்ந்தால் அதிர்ஷ்டம் வரும் என வதந்தியை பரப்பி உள்ளனர். இது லண்டனில் இல்லை, மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ளது. பகிர்பவர்களுக்கு நல்லது நடந்து இருந்தால் இப்புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கும், அதை நேரில் பார்த்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டி இருக்க வேண்டும். இதுபோன்ற வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்.

இதுமட்டுமின்றி, இதுபோன்ற பதிவு ஒன்றில் மாயன் காலத்து சக்கரம் எனக் கூறி திருச்செங்கோடு கோவிலில் அமைந்துள்ள கலைச் சிறப்பத்தின் புகைப்படத்தை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறிய பயன்படும் சக்கரத்தை கண்டால் அதிர்ஷ்டம் வருவதாக பரப்பும் கதை உருவாக்கப்பட்ட போலியான கதை என்றும், அதனுடன் இணைக்கப்பட்ட புகைப்படமானது மெக்சிகோவில் உள்ள சன் ஸ்டோன் என அழைக்கப்படும் ஆஸ்டெக் காலண்டர் உடையது என அறிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button