செய்தியாளர்களைச் சந்திக்காத மோடி என மேயர் பிரியா கூறினாரா ?

பரவிய செய்தி
பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி! சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது ஏற்படும் சிறு வார்த்தை பிழைகளை கேலி செய்கிறார்கள்.
மோடி இதுவரை எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் என பாஜகவினர் சிந்திக்கவேண்டும்!
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை இதுவரையில் எத்தனை முறை சந்தித்து உள்ளார் என பாஜகவினர் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் கூறியதாக சன் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோடிக்கு நாக்குல எலும்பு முறிவு.
பேச்சு வராது.நீங்கள் பணிகளைத் தொடருங்கள்.@PriyarajanDMK pic.twitter.com/EvK2ZXjDCt
— surya xavier (@suryaxavier1) November 14, 2022
மேயர் பிரியா 🔥
வாயில செருப்பை கவ்வவிட்டு அடித்து இருக்கு இந்தம்மா👏 pic.twitter.com/BLYCpn55ML— Manikandan SP 🧡🤍💚 (@INCmanikandan) November 13, 2022
திமுகவுக்கு சொந்தமான பத்திரிக்கை ஊடகங்களுக்கு நிறுவன கலைஞர் எம்எல்ஏ எம்பி அமைச்சர்கள் மற்றும் மேயர் நீங்கள் இருக்கும் போது, பிறகு ஏன் மோடி தேவை? நீங்கள் திமுக பத்திரிக்கை ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கலாம் மற்றும் சன் டிவி குடும்பம் உங்கள் மூலம் சம்பாதிக்கலாம். ஏன் மற்றவர்கள்? pic.twitter.com/HfYJtc4QDk
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) November 13, 2022
மேயர் இவ்வாறு பேசியதற்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்களும், எதிராக பாஜகவினரும் கமெண்ட் செய்து பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரப்பப்படும் சன் நியூஸ் கார்டில் எழுத்துக்கள் உள்ள பகுதியினை பார்க்கையில் இது எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது. மேலும், இது குறித்து சன் நியூஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் தேடினோம். அப்பக்கங்களில் அத்தகைய நியூஸ் கார்டுகள் எதுவும் பதிவிடப்படவில்லை.
பிரதமர் மோடி குறித்து மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பிலோ அல்லது அவரது டிவிட்டர் பக்கத்திலோ ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா எனத் தேடியதில் அத்தகைய பதிவுகள் எதுவும் இல்லை என அறிய முடிந்தது.
முன்னதாக, நவம்பர் 12ம் தேதி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திரு.வி.க.நகர் மண்டலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் மேயர் பேசியதாவது, சாலையோரம், நீர்நிலை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கொசு வலை வழங்கப்படுகிறது. இதற்காக இரண்டரை இலட்ச கொசு வலைகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.
அவர் பேசுகையில் ஒரு இடத்தில் மட்டும் கொசு வலை வழங்கும் திட்டம் என்பதற்கு பதிலாக “கொசு வழங்கும் திட்டம்” எனக் கூறிவிட்டார். அந்த ஒரு இடத்தினை தவிர்த்து மற்ற இடங்களில் கொசு வலை வழங்கும் திட்டம் என்றே குறிப்பிட்டுள்ளார்.
கொசு வழங்கும் திட்டம்…
வேற லெவல் பேக்கேஜ் 😃 pic.twitter.com/Jczod2JzUw
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) November 12, 2022
ஆனால், மேயர் தவறுதலாகக் கொசு வழங்கும் திட்டம் எனக் கூறியதை மட்டும் கிண்டல் செய்து பாஜகவை சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இதற்கு மேயர் பதிலளிக்கும் விதமாக மோடி செய்தியாளர்களைச் சந்தித்தாரா ? என எடிட் செய்யப்பட்ட சன் நியூஸ் கார்டினை திமுக மற்றும் பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா மோடி செய்தியாளர்களைச் சந்தித்தது உண்டா எனப் பேசியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது. மேலும், மேயர் பிரியா பிரதமர் மோடி குறித்து அவ்வாறு பேசவில்லை என்பதை அறிய முடிகிறது.