மெக்கா ரம்ஜான் கூட்டத்தில் படையெடுத்த கரப்பான்பூச்சிகள் எனப் பழைய வீடியோவை தவறாகப் பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
கரப்பான் என்று முஸ்லிம் உடம்பில் ஏறுகிறதோ. அன்று முஸ்லிம் இனமே முஸ்லிம் நாடே அழியும் என்று ஒரிஜினல் ஜெருசலேம் முஸ்லிம் குரானில் உள்ளது என்று கூறுவான். மெக்கா ரம்ஜான் கூட்டத்தில் கூட்டம் கூட்டமாக கரப்பான் உடம்பில் ஏறி விட்டது.
மதிப்பீடு
விளக்கம்
இஸ்லாமியர்களின் புனித நகரம் என்று கருதப்படும் சவுதி அரேபியாவின் மெக்காவில் கரப்பான்பூச்சிகள் தாக்குவது போன்றும், அங்கு தொழுகை செய்ய வந்த இஸ்லாமியர்களின் உடம்புகளில் அவை ஏறுவது போன்றும் வீடியோ ஒன்று பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவு பக்கங்களால் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அதில் “கரப்பான் பூச்சி என்று உடம்பில் ஏறுகிறதோ அன்று முஸ்லீம் இனமும், முஸ்லீம் நாடும் அழியும் என்று முஸ்லீம்களின் திருக் குரானில் உள்ளது என்று கூறுவார்கள்.! மெக்கா நகரில் ரம்ஜான் காலத்தில் கூட்டம் கூட்டமாக கரப்பான் பூச்சிகள் உடம்பில் ஏறிய காட்சிகள் ” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தொடர்பான புகைப்படங்கள் 2019 ஜனவரி 11-ம் தேதி அன்று ‘THE TIMES OF ISRAEL‘ வெளியிட்டுள்ள கட்டுரையில் கிடைத்தது.
அந்தக் கட்டுரையில் மெக்காவின் பெரிய மசூதி வெட்டுக்கிளிகளின் கூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு வேலை செய்யும் அதிகாரிகள் அவற்றை அகற்ற துப்புரவு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்து பார்த்தபோது அவை புலம்பெயர்ந்த “கருப்பு வெட்டுக்கிளிகள்” (black grasshoppers) என்று அடையாளம் கண்டுள்ளனர். நோய் தொற்றுகளை சமாளிக்க 138 பேர் கொண்ட 22 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தேடியதில், Secretariat of the Holy Capital ( أمانة العاصمة المقدسة ) என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இது தொடர்பான செய்திகள் கிடைத்தன.
معالي أمين العاصمة المقدسة
م . محمد القويحص
يوجه فرق الإصحاح البيئي التابعة
لـ #امانة_العاصمة_المقدسة بالعمل في أعمال مكافحة
(حشرة الجنادب السوداء )
على مدار الساعة وفِي جميع أنحاء مكة المكرمة حتى يتم التخلص والقضاء عليها إن شاء الله •#مكة_المكرمة#العاصمة_المقدسة pic.twitter.com/h5BHb9HcHP— أمانة العاصمة المقدسة (@holymakkah) January 7, 2019
அந்தப் ட்விட்டர் பதிவில், புனித தலைநகரின் மாண்புமிகு மேயர் எம். முஹம்மது அல் குவைஹிஸ் #Municipality_of_the_holy_capital பகுதியில் போர்கால பணி குழுவை வழிநடத்துகிறார். மக்கா அல்-முகர்ரமாவின் அனைத்துப் பகுதிகளிலும் (கருப்பு வெட்டுக்கிளி பூச்சிகள்) அப்புறப்படுத்தப்படும் பணி நடைபெறும்.” என்று அரேபிய மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான வீடியோவை شاهد شارك என்ற யூடியூப் தளத்திலும் காணலாம்.
2019ல் மெக்காவில் வெட்டுக்கிளிகள் படையெடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து மின்னல் தாக்கியதால் பூமிக்கு அடியில் இருந்து கரப்பான்பூச்சி கூட்டம் வெளிவந்தன என்றும், கரப்பான்பூச்சிகள் முஸ்லீம் மீது ஏறினால் முஸ்லீம் நாடே அழியும் என்றெல்லாம் தவறான தலைப்புகளை வைத்து பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : அமெரிக்காவில் ரம்ஜான் தொழுகையை இந்து பெண் தடுக்க முயன்றதாகப் பரப்பப்படும் தவறான தகவல் !
இதற்கு முன்பாக அமெரிக்காவில் ரம்ஜான் தொழுகையை இந்து பெண் தடுக்க முயன்றதாக பரப்பப்பட்ட தவறான தகவல் குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், மெக்காவில் ரம்ஜான் தொழுகையின் போது கரப்பான் பூச்சிகள் படையெடுத்து தாக்கியதாகப் பரப்பப்படும் வீடியோ தகவல் தவறானவை. அது 2019ம் ஆண்டு மெக்காவில் கருப்பு வெட்டுக்கிளிகள் தாக்கிய பழைய வீடியோவை தற்போது கரப்பான்பூச்சி என்று தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் என அறிய முடிகிறது.